டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் இந்த வருடத்தின் ஜனவரி மாதம்  முதல் கடந்த (25) வெள்ளிக்கிழமை  வரையிலான 
காலப்பகுதியினுள், டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


   அத்தோடு, இக்காலப்பகுதியினுள் டெங்கு நோயினால் 58,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பிரிவு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், கடந்த வருடத்தில் டெங்கு நோயினால் 58 பேரே உயிரிழந்திருந்தனர்.
   இந்த வருடத்தில் 10 மாதங்களினுள் டெங்கு நோய் காரணமாக 80 உயிரிழப்புக்கள் சம்பவித்துள்ளமை கவலைக்குரிய விடயம் எனவும், தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


   ஆகையினால், டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதோடு, வழக்கமான நடவடிக்கையாக அவற்றை அழிக்க வேண்டும்.


   இவ்வாறான இடங்களைத் துப்புரவு செய்வதற்காக குறைந்தபட்சம் 30 நிமிடங்களையாவது ஒதுக்க வேண்டும் எனவும், பொதுமக்களிடம் தொற்று நோயியல் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.


   இந்த வருடத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, மேல் மாகாணத்தில் 27,775 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


   தற்போது மழையுடனான காலநிலை தொடர்வதால், ஐந்து  மாவட்டங்களை ஆபத்தானவையாக தொற்று நோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. அவை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி  மற்றும் காலி ஆகிய மாவட்டங்களாகும்.


   மேல் மாகாணத்திற்கு அடுத்தபடியாக டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ள மாவட்டமாக,  கம்பஹா மாவட்டம் காணப்படுவதோடு, அங்கு 9,572 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக களுத்துறை மாவட்டத்தில் 5,762 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
   மேலும், ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, இம்மாதத்தில் 9,459 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


   காய்ச்சல் அறிகுறி தென்படும் முதல் நாளில் கர்ப்பிணித் தாய்மார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என, வைத்திய நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.


   அத்தோடு, எவ்வகையான காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் தாமதமின்றியும், கைவைத்தியத்தில் ஈடுபடாமலும் வைத்திய சிகிச்சையை அணுக வேண்டும் எனவும், வைத்திய நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான்)

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்