குர்திஷ்களை சிரிய எல்லையில் இருந்து வெளியேற்ற துருக்கி, ரஷ்யா உடன்பாடு - போராளிகளுக்கு 150 மணி நேரம் கெடு

வடக்கு சிரியாவில் துருக்கி கட்டுப்பாட்டு “பாதுகாப்பு வலயத்தில்” இருந்து குர்திஷ் போராளிகள் 150 மணி நேரத்திற்குள் வாபஸ் பெறும் உடன்படிக்கை ஒன்று ரஷ்யா மற்றும் துருக்கி இடையே எட்டப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தெற்கு நகரான சோச்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் இடையில் இடம்பெற்ற மரதன் பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 

இந்தப் பேச்சுவார்த்தை ஆறு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ரஷ்யா மற்றும் துருக்கி எதிர் எதிர் தரப்புகளுக்கு ஆதரவு அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த உடன்படிக்கையை அடுத்து சிரிய எல்லை நகரான கமிஷ்லி தவிர்த்து குறித்த பகுதியின் கிழக்கு மற்றும் மேற்கில் ரஷ்யா மற்றும் துருக்கி கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷர் அஸாத்தின் முக்கிய கூட்டாளியான புட்டின், இது “சிரியாவுக்காக முக்கியமான ஒப்பந்தம்” என்று வர்ணித்துள்ளார்.

வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் துருக்கி மற்றும் குர்திஷ்களுக்கு இடையே ஏற்பட்ட யுத்த நிறுத்தம் காலாவதியான நிலையிலேயே இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இதனை ஒட்டி சிரிய எல்லை நகரான ராஸ் ஐனை சூழ துப்பாக்கி வேட்டுகள் செலுத்தப்பட்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

தமது நாட்டு எல்லையில் இருந்து சிரியாவுக்குள் 32 கிலோ மீற்றர் பகுதியில் இருந்து குர்திஷ் ஆயுதக் குழு தலைமையிலான சிரிய ஜனநாயகப் படையை வெளியேற்றுவதற்காகவே துருக்கி கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி வடக்கு சிரியாவில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. 

இங்கு தமது நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் 3.6 மில்லியன் சிரிய அகதிகளை மீள்குடியேற்றவும் துருக்கி திட்டமிட்டுள்ளது. சிரிய ஜனநாயக படையில் ஆதிக்கம் செலுத்தும் வை.பீ.ஜி குர்திஷ் ஆயுத குழு படையை துருக்கி பயங்கரவாதிகளாக கருகிறது.

வை.பீ.ஜி குழுக்கள் தொடர்ந்தும் எல்லையில் இருந்தால் படை நடவடிக்கை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த படை நடவடிக்கையால் சுமார் மூன்று மில்லியன் மக்கள் தொகை கொண்ட வட கிழக்கு சிரியாவில் இருந்து 80,000 சிறுவர்கள் உட்பட 176,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

மோதல்கள் காரணமாக சுமார் 120 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 259 குர்திஷ் ஆயுத குழு படையினரும் 196 துருக்கி ஆதரவு சிரிய கிளர்ச்சியாளர்களும் ஏழு துருக்கி படையினரும் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஈராக் எல்லை தொடக்கம் கிழக்கே மன்பிஜ் நகரின் கிழக்காக யூப்ரடிஸ் வரை 30 கிலோ மீற்றர் பகுதியில் இருந்து குர்திஷ் போராளிகள் வாபஸ் பெறுவதற்கு புதன்கிழமை நண்பல் தொடக்கம் 150 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குர்திஷ்கள் பின்வாங்கியதை கண்காணிப்பதற்கு ரஷ்யா மற்றும் சிரிய படைகள் உடன் அங்கு நிலைநிறுத்தப்படவுள்ளன. இதில் குர்திஷ் மக்கள் வசிக்கும் குமைஷ்லி நகர் அதில் உள்ளடக்கப்படலில்லை. எனினும் அந்த நகரின் நிலை குறித்து உடன் உறுதி செய்யப்படவில்லை.

எனினும் மன்பிஜ் மற்றும் படை நடவடிக்கை இடம்பெறும் பகுதிக்கு அப்பால் இருக்கும் தால் ரிபாத் நகரங்களில் இருந்தும் குர்திஷ் படை வெளியேற்றப்படும் என்று ரஷ்யா மற்றும் துருக்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை ஏற்பது குறித்து குர்திஷ் தரப்பில் உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

வடக்கு சிரியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவின் இஸ்லாமிய அரசு ஆயுத குழுவுக்கு எதிரான போரில் அதன் கூட்டாளியாக குர்திஷ் ஆயுத குழு போராளிகள் செயற்பட்டனர்.

எனினும் இரண்டு வாரத்திற்கு முன் சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகளை வாபஸ் பெற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவு துருக்கி படை நடவடிக்கைக்கு வழிவிடுவதாக இருந்தது.

சிரியா நிலங்கள் வெளிநாட்டு சக்திகளால் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்கவெனக் கூறி ரஷ்யா எல்லையின் தனது துருப்புகளை நிலைநிறுத்தியுள்ளது.

- NView

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்