10 ஆயிரம் குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை!

2019 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் ஊழல், மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் 10,000 குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம், சட்ட விவகாரம் (ஊழலுக்கு எதிரான) மற்றும் ஊடகம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் தெரிவித்தது. 

இவ்வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 7,800 குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சுட்டிக்காட்டியது. 

அதேநேரம், தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் புதிய சட்டவரைபொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இதனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கவிருப்பதாகவும் பொதுஜன ஊடகத்துறை அமைச்சின் அதிகாரிகள், துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் தெரிவித்தனர். 

ஊழல் மோசடியைத் தடுப்பது தொடர்பான சட்டவரைபை அடுத்த அமர்வில் ஆராய்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. 

சட்ட விவகாரம் (ஊழலுக்கு எதிரான) மற்றும் ஊடகம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரட்ண தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் கடந்த 23ஆம் திகதி கூடியது. இதன்போதே இவ்விடயங்கள் ஆராயப்பட்டிருந்தன. 

வழக்குகளை விசாரணை செய்வதில் நீதிமன்றங்களில் காணப்படும் காலதாமதம் பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும், இது தொடர்பில் முழுமையாக ஆராயப்பட வேண்டியிருப்பதாகவும் இக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன் உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 15 வரை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் முன்வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இதனைக் கவனத்தில் எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. 

சட்ட விவகாரம் (ஊழலுக்கு எதிரான) மற்றும் ஊடகம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகளை அரசாங்க சேவையிலிருந்து வேறுபடுத்தி தனியான சேவையாக ஏற்றுக் கொள்வது தொடர்பான யோசனை பற்றியும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

-நியூஸ் வீவ்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்