BREAKING NEWS

இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டத்தின் படி முஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா? முடியாதா? .


===============================

கடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா? முடியாதா? என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவையாகவேயிருந்தன.

இந்த கேள்விக்கான விளக்கத்தை கடந்த 23/08/2019 அன்றே எனது “சட்டமொரு இருட்டறை அல்ல” எனும் எனது பக்கத்தில் எழுதியிருப்பேன்.

இஸ்லாத்துடன் சம்மந்தமில்லாத விடயங்களில் நான் பொதுவாக ஆர்வம் காட்டுவதுமில்லை அதற்காக நேரத்தையும் வீண்டிப்பதுமில்லை.

அப்படியென்றால் முகம் மறைத்து ஒழுக்கமாக இருப்பது இஸ்லாத்துடன் சம்பந்தமில்லாத விடயம் என எப்படிச்சொல்வீர்கள்?

மனிதனை படைத்த இறைவன் அவன் எவ்வாறு வாழ வேண்டுமென அல்குர்ஆன் மூலமாக வழிகாட்டியுள்ளான்.

பெண்களின் ஆடையொழுங்கைப்பற்றி விபரிக்கும் அல்குர்ஆனின் இருவசனங்கள் உள்ளன அவையாவான

(01). 24:31  தமது பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறும்,தமது கற்புகளைப்பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே  தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.தமது முக்காடுகளை மார்பின்  மேல் போட்டுக் கொள்ளட்டும்...

(02).33:59 நபியே! (முஹம்மதே!) உமது  மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும்,ஏனைய நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.அல்லாஹ் மன்னிப்பவனாகவும்,நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

இந்த இருவசனங்களிலும் பெண்களின் ஆடை யொழுங்கு பற்றி இறைவன் சொல்லவரும் விடயங்கள் என்னவெனில்,

1.ஆண்களை கவரும் விடயமாக பெண்களின் மார்பகங்களே காணப்படுகின்றன முகமல்ல என்பதும்,

2.”ஜில்பாப்” எனும் ஆடையை அணிவதால் பெண்கள் தொல்லைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பதும்  அவர்கள் மற்றவர்களால் அறியப்பட வேண்டும் என்பது இறைவனின் எதிர்பார்க்கையாகும்.

இறைவன் அல்குர்ஆனில் கூறும் ஜில்பாப் எனும் பெண்களுக்குரிய ஆடை முகத்தையும் கைகள் இரண்டின்  மணிக்கட்டுகள் வரையும் மறைக்கும் முழுமையான ஆடையாகும்.

பொதுவாக பெண்கள் தமது மார்பகங்களை எடுப்பாகக் காட்டுவது தான் ஆண்களால் அவர்கள் தொல்லைப்படுத்தப்படுவதற்கு முதல் காரணமாக உள்ளது ஆடை அணிந்த பின்னர் மார்பகங்கள் மீது மேலங்கியைப் போட்டுக் கொண்டால் அந்த நிலை நீங்கி விடும்.

முகத்தை மறைப்பதால் உள்ளே யார் இருப்பது என்பது தெரியாமல் இருப்பது பல பிழையான முடிவுகளை எடுப்பதற்கு மற்றவர்களுக்கு ஏதுவாக அமைந்து விடுகிறது.

அதே நேரத்தில் முகத்தின் மீது மேலங்கியை போட்டுக்கொள்ளக்கூடாது அவ்வாறு போட்டுக்கொண்டால் அவர்கள் யார் என்று அறிய முடியாமல் போய் விடும்.

இது ஊர்ஜிதப்படுத்துதாக பல ஹதிஸ்களில் இருக்கின்றன அதில் ஒன்றின் ஒரு பகுதியில்  .........அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து “ஏன்(இந்த நிலை) அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டாள்.

முகத்தை மூடி உடையணிவதை இஸ்லாம் அங்கிகரித்திருந்தால் நபியவர்கள் முகத்தை திறந்து வந்து பேசிய பெண்ணை கண்டித்து இருக்க வேண்டும்.

 விபச்சாரப்பெண்கள்  பாலியல் குற்றங்கள் புரியும் மதப்பெரியார்கள் பொலிசாரின் விசாரணைக்காக அழைத்துச்செல்லும் சந்தர்ப்பங்களில் முகத்தை மறைத்தே கொண்டு வருவதை நாம் அன்றாடம் ஊடகங்களில் காண்கின்றோம்.எனவே அந்த சமூக விரோதிகள் செய்யும் செயற்பாட்டுக்கு உருதுணையாக எமக்காக நாம் அமைத்துக்கொண்ட ஆடை அமைய வேண்டும்?


ஆனால் நாங்களோ அல்லாஹுவும் நபியும் எதுவும் சொல்லிட்டு போகட்டும் என்று நம் மன இச்சைக்கு கட்டுப்பட்டு முகத்தை மறைப்பது  அல்லது ஆண்கள் தொப்பி போடுதல் போன்றவற்றுக்கும்   இஸ்லாத்திற்கும் எந்த வித சம்பந்தமில்லை.

பெண்களின் முகங்கள் ஒரு விபத்தின் மூலமாகவோ அல்லது பிறக்கும் போதோ விகாரமாக அல்லது அவலட்சணமாக இருந்தால் மாத்திரமே அத்தியவசியம் என்ற ரீதியில் முகத்தை மூடுவதற்கு இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இந்த ஆக்கத்தை படிக்கும் பக்குவமுள்ளவர்கள் எனது கருத்திற்கு முரணான கருத்துக்கள் உங்களிடமிருந்தால் அதனை ஆதாரத்துடன் தெரிவியுங்கள் அது உண்மையாயின் நான் தொப்பி போடுவதற்கும் எனது மனைவியை முகம் மூட வைப்பதற்கும் நான் தயார்.

அன்மைய  அவசரகால சட்டத்தின் கீழ் முகமூடுதல் தடை செய்யப்பட்டது அதனின் தற்போதைய நிலையென்ன?

சட்டத்தரணி என்ற ரீதியில் எனக்கு இறைவனால் தந்திருக்கும் சட்ட அறிவினை முகம் மூடுதல் தொடர்பான சட்ட விளக்கத்தினூடாக  பலரின் வேண்டுகோளுக்கிணங்க தருகிறேன்.

 கடந்த 21/4உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஜனாபதி  பொதுமக்கள் பாதுகாப்புச்சட்டத்தின் பிரிவுகள் 2(1) மற்றும் 5(1) கீழ் தனக்கிருக்கும் அதிகாரத்தை கொண்டு பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு  33 பக்கங்களைக்கொண்டதும் 77 பிரிவுகளை கொண்டதுமான அவசரகால ஒழுங்கு விதிகளை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம்
2120/5 மூலம் 22/04/2019 ல் வெளியிட்டார்.

அவசரகால ஒழுங்கு விதிகள் என்றால் என்ன?

இலங்கை வாழ் அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமைகள்(FR)எமது அரசியலமைப்பின் உறுப்புறை 10 தொடக்கம் 14 வரை கூறப்பட்டுள்ளன.

ஆனால் அதற்கான மட்டும்பாடுகள் உறுப்புறை 15ல் கூறப்பட்டுள்ளன.அம்மட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி பொது மக்கள் பாதுகாப்புச்சட்டத்தின் கீழாக அவசர கால சட்ட ஒழுங்கு விதிகளாக கொண்டு வரலாம்.

அதே போன்று ஏனைய சட்டங்களும் அவசரகால ஒழுங்குவிதிகளுக்கு வழிவிட்டு அவசரகாலம் அமுலில் இருக்கும் காலம் வரை குறித்த சட்டங்கள் தமது செயற்பாடுகளிலிருந்து ஒதுங்க வேண்டும்.

அத்தோடு பொலிசாரின் நிர்வாக கடமைகளை ஜனாதிபதி அவசரகால ஒழுங்கு விதிகள் மூலம் முப்படையினரிடமும் ஒப்படைக்கலாம்.

உதாரணமாக  ஒருவரை கைது செய்யும் போது கைதுக்கான காரணங்களை சந்தேக நபருக்கு சொல்லத்தேவையில்லை.கைது செய்வதற்கான பிடிவராந்தும் தேவையில்லை.ஆனால் சாதாரண சட்டத்தில் மேற்கூறப்பட்ட இரு தேவைப்பாடுகளும் முக்கியமானவைகள்.

அத்தோடு நீதிமன்றத்தின் மூலம் ஒருவரை தடுத்து வைக்கும் அதிகாரம் நீதித்துறை அதிகாரம் நிறைவேற்றுத்துறையிலுள்ள பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்படும்.இதனை தான் Detention order (DO)என்பர்.

சுருக்கமாக சொல்லப்போனால் அவசரகால ஒழுங்கு விதிகள் வெளியே வந்தால் மற்றைய சட்டங்கள் அனைத்தும் அமைதியாகி விடும்.

இந்த அவசர காலச்சட்ட விதிகளின் படி வீதிகளில் போகும் முப்படைகளின் அல்லது பொலிசாரின் வாகனங்களை போட்டோ எடுக்க முடியாது.

முப்படைகள் மற்றும் பொலிசாரின் ஆடைகள் போன்ற உடைகளை மற்றவர்கள் உடுத்தக்கூடாது.விற்பனைக்காக வைத்திருக்கவும் கூடாது.

முக்கியமான நகரங்களின் mapகளை வைத்திருக்க முடியாது......... இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

மக்களுக்கு நன்மை செய்வதற்கே அரசாங்கமிருக்க வேண்டும்.ஆனால் பயங்கரவாதத்தை அடக்குதல் எனும் போர்வையில் இப்படியான சட்ட ஒழுங்கு விதிகளை கொண்டு வந்து மக்களை நசுக்குவதில் ஒன்றாக தான் 29/04/2019ல் ஜனாதிபதி 2121/1 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஏற்கனவே  22/04/2019ல் கொண்டுவரப்பட்ட மேலே கூறப்பட்ட பிரதான அவசரகால ஒழுங்கு விதியினை திருத்தி 32A  எனும் பிரிவினை உள்ளடக்கியுள்ளார்.

அதில் “ஆளெவரும்,அத்தகைய ஆளை அடையாளங்காண்பதள்கு ஏதேனும் தடங்களை விளைவிக்கும் ஏதேனும் முறையில் முழு முகத்தையும் மறைக்கின்ற ஏதேனும் தைத்த ஆடையை அல்லது துணியை அல்லது வேறு பொருளை ஏதேனும் பொது இடத்தில் அணிதலாகாது.” என்ற ஒழுங்கு விதி கொண்டு வரப்பட்டது.

அவசரகால ஒழுங்கு விதிகள் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டு அது பாராளுமன்றத் தீர்மானத்தால் நீடிக்கப்படாமையால் முகம் மறைக்காமலாக்கும்  ஒழுங்கு விதி இல்லாமல் போய் விட்டதா?

அவசரகால ஒழுங்கு விதிகள் ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிட்டு அது அரசியலமைப்பின் உறுப்புரை 155 படி பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாததிற்கு நீடிக்கும்
 இல்லா விட்டால் அது வலு இழந்து விடும்.

எனவே கடந்த 22/08/2019 ஜனாதிபதி ஒழுங்கு விதியை வெளியிடாமையால் அதன் பயனாக அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

ஆகவே தாராளமாக முகத்தை மறைக்க முடியும்.

அவசரகால ஒழுங்கு விதிகளினூடாகவே தான் தேசிய தவ்ஹீத் ஜமாஆத் போன்ற மூன்று அமைப்புக்களும் தடை செய்யப்பட்டன. இப்போது அவைகளும் சுதந்திரமாக செயற்பட முடியுமா?

முடியாது ! அவசரகால ஒழுங்கு விதிகள் பொது மக்கள் பாதுகாப்புச்சட்டத்தின் பிரிவு 5 கீழ் உருவாக்கப்படுபவை அவை பாராளுமன்ற தீர்மானத்தால் மாத்திரமே ஒவ்வொரு மாதங்களாக நீடிக்க முடியும்.

தேசிய தவ்ஹீத் ஜமாஆத்(NTJ),ஜமாஅத்தே மில்லதே இப்றாகீம் (JMI) மற்றும் விலாயத் அஷ்ஷெய்லானி ஆகியவை அவசரகால நிலையில் தடை செய்தமை பயங்கரவாத தடை சட்டத்தின்(PTA) பிரிவு 27 ன் கீழ் கொண்டு வரப்பட்ட ஒழுங்கு விதியினால் ஆகும்.

எனவே இதற்கான ஆயுள் காலத்தை பாராளுமன்ற தீர்மானம் மூலம் மாதா மாதம் தீர்மானிக்க முடியாது அது நிரந்தரமான ஒழுங்கு விதியாகும்.

இதற்கான தடையை ஜனாதிபதி 13/05/2019 திகதி 2123/3 விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அமுல் படுத்தியுள்ளார்.

எனவே அப்படியான அமைப்பின் உறுப்பினர்களுக்கு உதவுதல் ஒத்தாசை செய்தல் பாரிய குற்றமாகும்.

வாகனம் ஒன்றை வாங்க நினைக்கும் நாங்கள் நல்ல ஜப்பான் வாகனத்தை தேடி அலைந்து வாங்குகிறோம்.போன் ஒன்றை வாங்குகின்ற போது நல்ல ஐ போனை பார்த்து வாங்குகின்றோம்.பாடசாலைக்கு பிள்ளைகளை சேர்க்கின்ற போது நல்ல பாடசாலையை தேடி அதற்கு எத்தனை பெரிய டொனேசன் என்றாலும் அதனைக்கொடுத்து பிள்ளைகளை சேர்க்கின்றோம்.ஏன் ஒரு பெண்ணை திருமணம் முடிக்க ஆசைப்பட்டால் கூட அழகான பெண்ணை தேடி திருமணம் செய்து கொள்கிறோம்.

ஆனால் சமயம் என்ற ரீதியில் எந்த குப்பைகளையும் ஏற்பதற்கு நாம் ஏன் தயாராக இருக்கிறோம்.கடைசிவரையும் எங்களுடன் வரும் இஸ்லாத்தின் உண்மையான வழிகாட்டல்களை ஏன் எடுத்து நடக்காமலிருக்கிறோம்...????..

- சட்டத்தரணி சரூக்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar