BREAKING NEWS

துணிவோடு சென்று பணிவாக மக்களை அணுகும் பைஸர் முஸ்தபா
( ஐ. ஏ. காதிர் கான் )


   ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இந்நாட்டு முஸ்லிம்கள் பாரிய மன உளைச்சல்களுக்கு ஆளானது மட்டுமல்லாது, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருபோதுமில்லாத அளவுக்கு சந்தேகக் கண்கொண்டு பார்க்குமளவுக்கு

உள்வாங்கப்பட்டார்கள்.

    இந்தத் தாக்குதல்களை, குறிப்பிட்ட ஒரு சில முஸ்லிம்கள் செய்தாலும் கூட, இதனால் நாட்டிலுள்ள சிறியோர் முதல் பெரியோர் வரையிலான அனைத்து முஸ்லிம்களும் ஒட்டு மொத்தமாக பேரினவாதிகளால் நசுக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.

   முஸ்லிம்கள் மீதான வெறுப்புப் பேச்சுக்கள், இட்டுக்கட்டப்பட்ட அவதூறு வார்த்தைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலிருந்தும் புயல் காற்றாய் வீசிய சொல் அம்புகளை எம்மால் உணர முடிந்தது.

   நாம் தவறு செய்யாத போதும், மிகப் பொறுமை காத்த எம்மால், இறைவனிடம் (துஆ) பிரார்த்தனை புரிவதற்கு மாத்திரமே முடிந்தது.

   குண்டுத் தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம்கள் மீது அவதூறுகள், தேடுதல் நடவடிக்கைகள், தாக்குதல்கள், சொத்து அழிப்புக்கள் எனத் தொடர்ந்துகொண்டே செல்லலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களிலெல்லாம் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் துணிந்து முன்நின்று, முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும், சமய விவகாரங்களுக்காகவும் பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் போராடினர்.

   இவ்வாறு முஸ்லிம்களுக்காக துணிந்து நின்று போராடியவர்களுள், முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் ஒருவர் என்றால், அதனை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.


* முஸ்லிம்களுக்காக வெளியேறத் துணிந்தவர்


   குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் இராஜாங்க அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும் இராஜினாமாச் செய்து வெளியேறியதைத் தொடர்ந்து, "தானும் இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்றில் அமைச்சராக இருந்திருப்பின், முஸ்லிம்களுக்காக வெளியேறியிருப்பேன்" எனப் பாராளுமன்றில் துணிந்து  கம்பீரமாக  உரத்து குரல் கொடுத்தார்.

   இது மட்டுமல்ல, இக்காலகட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிரதேசங்களுக்கும் இடங்களுக்கும் துணிவோடு சென்று, அங்குள்ளவர்களை பணிவாக அணுகி ஆறுதல் வார்த்தைகளைக்  கூறியது மட்டுமல்லாது, அதற்கான உடனடி நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான உதவிகளையும் பெற்றுக் கொடுத்தார்.

 

* முஸ்லிம் மாணவிகளுக்கு  பர்தா


   வருடா வருடம் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள்  ஆரம்பிக்கின்ற போது, பரீட்சை நிலையங்களில் அதிகாரிகளினால் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தாவைக் கழற்றிவிட்டு வந்து பரீட்சை எழுதுமாறு வற்புறுத்தப்படுகின்றார்கள். 

   இதனால்,  பரீட்சை எழுதுகின்ற முஸ்லிம் மாணவிகள்  பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும்  இவ்வாறு பரீட்சை நிலைய அதிகாரிகளினால் முஸ்லிம் மாணவிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். இது, முஸ்லிம் மாணவிகளுக்கு மாத்திரமல்ல, பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மன உளைச்சலைக் கொடுக்கும் ஒரு செயலாகும்.

   இவ்வாறு வருடா வருடம்  தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற முஸ்லிம் மாணவிகள் பர்தாவைக் கழற்றி பரீட்சை எழுதவைக்கப்படுவது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கல்வி  அமைச்சரிடம் பைஸர் முஸ்தபா  வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், இது தொடர்பில் பரீட்சை ஆரம்பிக்கும் முன்பே சுற்று நிருபம் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டு, சகல வலயக் கல்வி அலுவலகம் ஊடாக பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள் கட்டாயம் முறையாக அறிவுறுத்தப்படல் வேண்டும் என்றும் கல்வி அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.


*  உழ்ஹிய்யா  குறித்து அறிவுறுத்தல்


   முஸ்லிம்கள் இம்முறை உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றும்போது நாட்டின் தற்போதைய சூழ் நிலையைக் கருத்திற்கொண்டு, முக்கியமாக  வழமையைவிட மிக அவதானமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும்,    முஸ்லிம்கள் உழ்ஹிய்யா வழங்கும் காலகட்டத்தில் அதன் அணுகுமுறைகளைப் பேணி நடந்து கொள்ளுமாறும் பைஸர் முஸ்தபா முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

   குறிப்பாக, போயா தினத்தன்று (14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை) எக்காரணம் கொண்டும் மறைமுகமாகவேணும்,  உழ்ஹிய்யா மிருகத்தை அறுத்துப் பகிரவேண்டாம் என்றும் முஸ்லிம்களை அறிவுறுத்தியிருந்தார்.


* நிகாப் தடை செய்யக் கூடாது


   தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாகவும், இதற்கு தனது அதிருப்தியைத் தெரிவிப்பதாகவும், ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தார்.

   முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16 தொடக்கம் 18 வயதெல்லையாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்த பைஸர் முஸ்தபா, ஒரு ஆண் இரண்டாவது திருமணம் முடிப்பதாக இருந்தால் தனது சொத்துக்கள் வருமானங்களில் அரைவாசிப் பங்கை, அவர் தனது முதல் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

   இதேவேளை, முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப், அவசரகாலச் சட்டத்தின் கீழ்  தடைசெய்யப்பட்டாலும், இது நிரந்தரமாகத் தடை செய்யப்படக் கூடாது.

   இது முஸ்லிம்களின் உரிமையாகும் என்றும் குறிப்பிட்டுக் காட்டினார்.


* குற்றமற்ற இளைஞர்களை விடுவிக்க கோரிக்கை


   பைஸர் முஸ்தபா, ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியாக இருந்தும் கூட, அவருடைய கால நேரங்களை மக்களுக்காக வேண்டியே ஒதுக்கி, நாட்டுத் தலைவர்களையும், பிரதான பாதுகாப்பு அதிகாரிகளையும் சந்தித்து, முஸ்லிம்கள் முன்னோக்கி வரும் பிரதான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியிருக்கிறார். சிறைச்சாலைகளில் எவ்விதக் குற்றங்களுமின்றி சிறை வைக்கப்பட்டிருக்கும் மெளலவிமார்கள் உள்ளிட்ட முஸ்லிம் தனவந்தர்கள் மற்றும் முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்குமாறு கோரியும் மனிதாபிமான ரீதியில் குரல் கொடுத்து வருகிறார். இவரது முயற்சியால், சிறையிலுள்ளோரில் ஆகக் கூடுதலானோர் இதுவரை விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கிழமையும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபரை நேரடியாகவே சந்தித்து வருகின்றார். இது, இவர் முஸ்லிம் சமூகத்துக்காகச் செய்யும் மிகப் பெரிய நன்மை தரும் செயலாகும்.

   இது தவிர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் ஜம் இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷேய்க் றிஸ்வி முப்தி ஆகியோரையும், கால அவகாசம்  கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் சந்தித்து, முஸ்லிம்களின் பலதரப்பட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி வருகின்றார்.


* அவ்வப்போது இலவச சட்ட ஆலோசனை


   நாட்டிலுள்ள  உள்ளூராட்சி மன்றங்களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த  124  முஸ்லிம் உறுப்பினர்கள் குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் ஸ்ரீல.சு.க. வைச் சேர்ந்த 46 முஸ்லிம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் 124 பேரும் அங்கம் வகிக்கும் வகையில்,  "உள்ளூராட்சி மன்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள்  மன்றம்" ஒன்றை உருவாக்கி, அதன் தலைவராகவும் திகழ்ந்து வருகின்றமை இங்கு ஈன்று குறிப்பிடத்தக்கது.

   அரசாங்கம் பல தேர்தல்களுக்கும் முன்னெப்பொழுதுமில்லாதவாறு  முகங்கொடுக்க வேண்டிய ஒரு இக்கட்டான  சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  "அடுத்து என்ன நடைபெறப் போகிறது?" என்ற கேள்விக் குறியோடு இந்த 124  உறுப்பினர்களும் நிலை தடுமாறி சிந்தனையில் மூழ்கிப் போய் இருக்கும் இன்றைய காலகட்டத்தில்,  இவர்களை அப்படியே நற்றாற்றில் விட்டு விடாமல், இவர்களுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு  இவர்களை அரவணைத்து,  இவர்களுக்குத் தேவையான சகல ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் பைஸர் முஸ்தபா வழங்கி வருகின்றார். இது மாத்திரமல்ல, இவர்களை இவருடைய இல்லத்திற்கு வரவழைத்து, தேவையான உதவி ஒத்தாசைகளையும், அத்தோடு எதிர்காலத்துக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளையும் இலவசமாகவே, மன நிறைவோடு  பெற்றுக் கொடுத்து வருகின்றார். 


*  கட்சி, நிற, பேதமின்றி செயலாற்றுபவர்


   பைஸர் முஸ்தபா, இவ்வாறான நடவடிக்கைகளை அடுத்தவர்கள் பார்த்து மெச்ச வேண்டும், புகழ வேண்டும் என்றில்லாமல், மிக அமைதியாகவும், நிதானமாகவும் முன்னெடுத்து வருகின்றார்.

   ஆம், முஸ்லிம்களுக்கென்று ஒரு பிரச்சினை வரும்போது, அந்த இடத்தில் முதலாவது சமூகந்தந்து, அவர்களுக்குரிய பிரச்சினைகளை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, உரிய தீர்வுகளை மறைமுகமாகப் பெற்றுக் கொடுக்கும் ஒரு சிறந்த நடுநிலையான பாராளுமன்ற உறுப்பினராக பைஸர் முஸ்தபா திகழ்ந்து வருகின்றார். இவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதி நிதித்துவப்படுத்தி வந்தாலும் கூட, முஸ்லிம்களுக்கென்று ஒரு ஆபத்து வரும்போது, கட்சி, நிறம், பேதம் பாராது,  தனது உயிரையும் மதிக்காமல் துணிந்து நின்று செயலாற்றுவதைக்  குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.


( ஐ. ஏ. காதிர் கான் )

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar