BREAKING NEWS

மஹிந்தவோடு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை நின்றுபிடிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளோடு சேர்ந்து இயங்குவது சிங்கள மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்காது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திணறடிக்கப்படும் முஸ்லிம் அடையாள அரசியல்
************************
1
அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்திருந்த வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். 2005 இல் ஐ.தே.கட்சி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவும் 2010 இல் ஐ.தே.கட்சி முன்நிறுத்திய பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவும் உறுதியான தமிழ்த்தேசிய அரசியலின் காய் நகர்த்தல்களால் தோல்வியடைந்தமை தெரிந்ததே.

புலிகளின் தலைவர் பிரபாகரன் 2005 இல் சிங்கள வேட்பாளர்கள் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று இட்ட கட்டளை வடக்கு மக்களால் சிரமேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் விளைவே 2005 இல் ரணிலின் தோல்விக்கு காரணமாகும்.மேற்சொன்ன கட்டளை பிரபாகரன் மறைந்த பின்னரும் 2010 இல் வடக்கு தமிழ் மக்களிடம் செல்லுபடியானதன் விளைவுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்த போதும் சரத் பொன்சேகாவையும் தோல்வியடையச் செய்தது.

2015 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரை பிரித்தெடுத்து பொது வேட்பாளராக அவரை நிறுத்திய வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள் பெரும்பாலான இலங்கைத் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், முஸ்லிம் மக்கள் தாமாக முன்வந்து மைத்திரிக்கு ஆதரவளித்ததும், முஸ்லிம் கட்சிகள் இரண்டும் ஆதரவளித்ததும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியது.ஆனாலும்; இதுவும் ஒரு தோல்வியின் வகையறா என்பதை கடந்த ஐந்தாண்டு வரலாறு நிரூபித்து நிற்கிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் ஐ.தே கட்சி இழுபறிப்படுவது அக்கட்சி தடுமாறுகிறது, தவறி விழவும் வாய்ப்புள்ளது என்பதை குறிக்கிறது.ஏற்கனவே சுதந்திரக்கட்சி வரலாறு காணாத சரிவைச் சந்தித்துவிட்டது.ஐ.தே கட்சியில் சாய்ந்து நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது தடுமாறி நிற்கிறது. இரண்டு முஸ்லிம் கட்சிகளும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலமையினால் ஐ.தே கட்சி தோல்வியைத் தனது தோழில் சுமக்க, த.தே கூட்டமைப்பு மேலும் செல்வாக்கிழக்க, முஸ்லிம் கட்சிகள் சிதைய வாய்ப்புண்டு.ஆயினும், ஐ.தே கட்சி சில வருடங்களில் மீளக் கட்டி எழுப்பப்படும். த.தே கூட்டமைப்பு அழிந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் அழியாது. ஆனால் முஸ்லிம் அடையாள அரசியல் கட்சிகள் சிதைந்தால் முஸ்லிம் அடையாள அரசியல் முகமழிந்து போய்விடும் ஆபத்து உள்ளது.

2
ஐக்கிய தேசியக் கட்சி மூன்று வேட்பாளர்களை மானசீகமான அடிப்படையில் முதன்மைப் போட்டியாளர்களாக முன்நிறுத்தியுள்ளது.இவர்கள் சஜித்,கரு,ரணில் ஆகியவர்களாகும். இவர்களில் எவர் வேட்பாளரானாலும் கட்சியின் ஒருமித்த ஆதரவு எவருக்கும் கிடைக்காது. பிரிவினை ஆழமாகி உள்ளதால் ஏதோ ஒரு தரப்பு முன்நிலையாகும் வேட்பாளருக்கு எதிராக இரகசியமாக இயங்கும் அல்லது தேர்தல் வேலைகளில் ஈடுபடாதிருக்கும்.

இந்த நிலையினால் ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் இரண்டு முஸ்லிம் கட்சிகளுமே மோசமாகப் பாதிக்கப்படும். இதனை இரண்டு கட்சிகளும் நன்குணர்ந்துள்ளன.ஆகவே வெற்றி பெற வாய்ப்புள்ள பொதுஜன பெரமுனவுடன் எந்த முஸ்லிம் கட்சியாவது முதலில் இணையுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களை பெறும் வாய்ப்பை இழக்க விரும்பாமையால் ஜனாதிபதித் தேர்தல் தோல்வியை பொருட்படுத்தாமல் ஐ.தே கட்சியுடன்தான் இருக்குமா என்பது இன்றைய முக்கிய கேள்வியாகும்.

முஸ்லிம் காங்கிரசும் மக்கள் காங்கிரசும் ஒன்றாக இருப்பது போல் வெளிப் பார்வைக்கு தெரிந்தாலும் அவை எதிரிக் கட்சிகளாகவே இருக்கின்றன.ஐ.தே கட்சியின் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக மக்கா சென்று உம்றா செய்தாலும், அங்கு  ஒன்றாக நின்ற புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டாலும் பரஸ்பரம் அக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் மனங்களில் பதிந்திருக்கும் வேற்றுமையையும் போட்டி மனப்பான்மையும் எவரும் மறைக்க முடியாது. இதனை அண்மையில் ஒலுவில் துறைமுகத்தில் இடம்பெற்ற இரு தரப்புகளுக்கும் இடையிலான மோதல் நிரூபிக்கிறது.

2015 ஆம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்போடு ஊறிக் கிடந்த றிஷாட் பதியுத்தீன் அவர்கள் முதலில் வெளியேறி மைத்திரியுடன் இணைந்தார். மஹிந்த தரப்புடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்த றவூப் ஹக்கீம் அவர்கள் தாமதமாகி மைத்திரியுடன் சேர்ந்தார்.

கடந்த வாரம் பஸில் ராஜபக்சவும் ஹக்கீமும் இரகசியமாகப் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்தன.இச்சந்திப்பு இம்முறை முதலில் மஹிந்த தரப்புடன் ஹக்கீம் இணையும் ஏற்பாடா? அல்லது என்றென்றைக்குமான நண்பர்களான பஸில் -  றிஷார்ட் ஆகியோர் திட்டமிட்டு ஹக்கீமை இழுத்தெடுக்கும் ஏற்பாடா என்பதும் சிந்திக்கவேண்டியதாகும்.

பிந்திக் கிடைக்கும் செய்திகள் ஹக்கீம் அவர்கள் கோத்தபாயவுடன் தொலை பேசியிலும் நேரடியாக சந்தித்தும் பேசியதாக சொல்கின்றன. இவ்வுரையாடல்களை தனிப்பட்டவையாக எடுத்துக் கொண்டாலும்; அரசியல்வாதிகளின் சந்திப்பு அரசியலை ஏமாற்றுவதில்லையல்லவா?

2015 ஆம் ஆண்டைய தேர்தலில் ரணிலின் பக்கம் றிஷார்ட் முதலில் சென்றார். 2019 தேர்தலில் ஹக்கீம் ஏன் முதலில் மஹிந்த பக்கம் செல்லக்கூடாது?

செல்லலாம்; ஒன்றாக மேடையேற முடியாது.இந்த சூட்சுமத்தை கீழே சொல்லியுள்ளேன். புரியாவிட்டால் பின்னர் ஆழமாக அலசுவோம்.

3
ஏப்பிரல் 21 இல் நிகழ்த்தப்பட்ட பல்நிலை தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இஸ்லாம் மார்க்கத்தின் மீதும் முஸ்லிம் அடையாள அரசியலின் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது.சில முஸ்லிம் அடையாள அரசியல்வாதிகளும், சில இஸ்லாமிய இயக்க உறுப்பினர்களும் இழைத்த தவறை வைத்து இஸ்லாமும், தனித்துவ அரசியலும் ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டப்பட்டு இக்குற்றம் பெரும்பான்மை பௌத்த சிங்கள சாதாரண மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. கடந்த முப்பது வருடங்களாக அஷ்ரஃப் மூலம் ஒளி வீசிய முஸ்லிம் தனித்துவ அரசியல் ஒளியிழக்கச் செய்யப்பட்டு இந்த இருட்குகைக்குள்தான் தற்போது வீசப்பட்டுள்ளது.

அன்னப் பறவை தண்ணீரைத் தவிர்த்து பாலை மட்டும் உறிஞ்சுவதற்கு அலகையும் அறிவையும் பயன்படுத்துவது போல முஸ்லிம்கள் தமது கட்சி அலகுகளையும் அறிஞர்களையும் பயன்படுத்தினார்களா? இல்லை "பின்னோடிகளாகி" இடறி வீழ்ந்தார்களா என்பதை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவு சொல்லும்.அன்னப் பறவை செயற்பாட்டிற்கு ஏட்டுக் கல்வி அறிவுமட்டுமல்ல இயலுணர்வும் அவசியமாகும்.

மஹிந்த ராஜபக்‌ஷ, தான் 2015 தேர்தலில் பெற்றுக்கொண்ட அனுபவத்தையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னான சிங்கள மக்களின் மனோபாவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எதிரே வரும் தேர்லுக்கான வியூகத்தை அமைத்திருப்பதாக நான் கருதுகிறேன்.

4
மஹிந்தவின் புதிய வியூகம் என்பது தானாக கிடைக்கும் சிறுபான்மை வாக்குகளை வரவேற்று மதிப்பளிப்பது, மேற்குலகின் கதைகளைக் கேட்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை கணக்கில் எடுப்பதில்லை,இஸ்லாமிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களாக சிங்கள மக்கள் நம்பும் முஸ்லிம் அடையாள அரசியல்வாதிகளின் ஆதரவை நேரடியாகப் பெறுவதில்லை,ஏற்கனவே தம்மோடு "கிடந்த, இருந்த" சிறுபான்மை அரசியல்வாதிகளோடு புரிந்துணர்வுடன் வேலை செய்வது என்பதாக இருப்பதை உள்ளார்ந்து அறிய முடிகிறது.இவ்விடத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் எங்கு தொங்குகிறார் என்பதை நோக்கவேண்டியுள்ளது. இவர் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யும் வரை சிங்கள மக்களின் நண்பராக பார்க்கப்பட்டார். இராஜினாவுடன் இவர் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு உதவுபவராக சிங்கள பௌத்த பெரும்பான்மையினரால் பார்க்கப்படும் துரதிஷ்டம் நிகழ்ந்துவிட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட றிஷார்ட்டையும், ஹிஸ்புல்லாஹ்வையும் காப்பாற்றுவதற்காகவே ஹக்கீம் இராஜினாமா நாடகத்தை ஆடினார் என்பதாக பேரினம் நம்புகிறது.

இந்நம்பிக்கையை பேரினவாத அரசியல்வாதிகளும், பெருமதவாத பிக்குகளும் சிங்கள ஊடகங்களுக்கூடாகவும் மரண வீடுகள் மற்றும் பன்சலக்களில் ஓதப்படும்' பண'க்களின் ஊடாகவும் சாதாரண பவுத்தர்களுக்குள் கொண்டு சேர்த்துவிட்டனர்.இதனால் முஸ்லிம் அடையாள அரசியல் தலைவர்களின் ஆதரவை நேரடியாகப் பெறுவதால் சிங்கள பவுத்த தேசியத் தீவிரவாத வாக்குகள் உறை நிலை அடைந்துவிடும் (freezing) என்ற அச்சம் தோன்றியுள்ளது.

ஹிஸ்புல்லாஹ் தனித்து ஜனாதிபதித் தேர்தலில் இறங்கி கணிசமான முஸ்லிம் வாக்குகளைப் பெற்று தனக்கு கிடைக்கும் வாக்குகளின் இரண்டாவது தெரிவை பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு வழங்கும் பிரச்சாரத்தை செய்யலாம் என்று நம்புகிறார். இவரின் இரண்டாம் தெரிவை பெரமுன முன் பந்தியில் சொன்ன காரணத்துக்காக ஏற்கமாட்டாது என்று கணிப்பிடவேண்டியுள்ளது.சில வேளைகளில் ஹிஸ்புல்லாஹ் தமக்கு மறைமுகமாகச் செய்யும் பிரச்சாரம் சிங்கள வாக்குகளில் குறைவை ஏற்படுத்தக் கூடும் என கோட்டாபய பயப்படவும் இடமுண்டு.

மஹிந்தவோடு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை நின்றுபிடிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளோடு சேர்ந்து இயங்குவது சிங்கள மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்காது என்று பெரமுனவும் கோட்டாவும் நம்புவதற்கு இயற்கையான காரணங்களுண்டு.

5
கோத்தா போபியாவும் இஸ்லாமோபியாவும் புகையிரதப்பாதை போன்ற சமாந்தர இணைப்பாதைகளாகும்.இவையிரண்டும் பிரிந்தால் இனி வரும் இலங்கையின் பூகோள அரசியலில் பயணிக்க முடியாது.பயம் வெல்லும், இது என்றுமே தோற்றதில்லை. பயமே மிகப்பெரிய இனத்தையும் மிகச்சிறிய இனத்தையும் சுயத்தைக்காணும் வெற்றிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. இடைநிலைப் பெரிய இனமான தமிழர்களை மிக்க பலமுடைய மேற்குலகின் ஆதரவு நெறிப்படுத்தக்கூடும்.இம்மேற்குலகு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னான சூழலை பாவித்து முஸ்லிம்களை தமக்கு சாதகமாக திருப்ப முயற்சித்தாலும், இம்முயற்சி வெற்றிபெறாது.

6
கோட்டபயவும் பேராயர் மல்கம் ரஞ்சித்தும் சந்தித்தமை இன்றைய தேர்தல் அரசியலில் மிகவும் முக்கியமானதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைப் பின்னணியைக் கண்டு பிடிப்பதற்காக சுயாதீனமான ஆணைக்குழுவை நிறுவ வேண்டும் என்று கோட்டாவிடம் பேராயர் விடுத்த வேண்டுகோள் மேலும் முக்கியமானதாகும். இவ்வேண்டுகோளுக்குரிய சாதகமான பதிலை கே.ஆர் ஊடக அறிக்கையாக வெளியிட்டது இன்னும் முக்கியமானதாகும். இவ்வறிக்கையைத் தொடர்ந்து பேராயர் தனது கோரிக்கைக்கு சாதகமான பதில் அரசு தரப்பிடமிருந்து வரவில்லை என்று ஊடக அறிக்கை வெளியிட்டது மென்மேலும் முக்கியமானதாகும்.

பேராயர், தாக்குதலுக்கு பின்னாக அலையென எழுந்துவந்த உடனடி அரசியல் போக்கில் நிகழ்கால அரசைக் குற்றம் சுமத்துபவராகவும், முஸ்லிம் மக்களின் பாதுகாவலராகவும்,நடுநிலை போதகராகவும் பொது அரங்கில் அடையாளம் காணப்பட்டமை தீட்சண்ய அரசியல் முகத்தை வெளிக்காட்டியது.

ஆக, பெரும்பான்மையான சிங்கள கத்தோலிக்க மற்றும் தமிழ் கத்தோலிக்க வாக்குகள் பேராயரின் சைகையின் பக்கமே சாயும் என்பதை உறுதியாகக் கூறலாம்.

பண்டாரநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தோடு, சிங்களம் தமிழ் என அரசியலில் மொழி ரீதியாகப் பிரிந்து நின்ற இலங்கை கத்தோலிக்கர்கள் அரசியல் ரீதியாக ஒருமித்து நிற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மலையகத் தமிழ் வாக்குகள் தொண்டமான் தலைமையிலும், மனோ மற்றும் திகா தலைமையிலும் சரிசமமாகப் பிரிந்து நிற்கும் போல் தெரிகிறது. இடையில் இராதா எங்கு நிற்பார் என்பதைப் பொறுத்து தராசு ஒரு பக்கம் இலேசாக கதிக்கவும் கூடும்.

JVP தனித்து ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க எடுத்திருக்கும் முடிவு முடிந்த முடிவுதானா என்பதை முடிவுகட்ட தேர்தல் அறிவிப்பு வெளிவரவேண்டும். ஆயினும் இம்முடிவால் பெரமுன வேட்பாளருக்கு சிறிதளவே கிராமப்புற வாக்குகளில் குறைவு ஏற்படும், ஐ.தே.கட்சிக்கே பெருமளவான வாக்குகள் இழப்பு ஏற்படும் என்பதை அனுமானிக்கலாம்.

50% +1 வாக்கு எந்த வேட்பாளருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்ற ஊகப்பிரச்சாரத்தை குறைந்தளவே நம்பலாம். இதற்கான வாய்ப்பு மிகவும் அரிதாகும்.

இக்கட்டுரைக்கு முடிவுரை எழுத முடியவில்லை. பொறுமை காப்பதான முடிவில் ஜனாதிபதித் தேர்தலின் உச்சக்கட்டம் வரும் வரை முடிவுரை எழுதக் காத்திருக்கலாம்.முனிவர்கள் தாம் நினைப்பவை அனைத்தையும் வெளியில் சொல்வதில்லை.
Basheer Segudavood

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar