அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் பைஸர் கோரிக்கை( ஐ. ஏ. காதிர் கான் )

    ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,  தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சாதாரண அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   பைஸர் முஸ்தபா எம்.பி. க்கும் ஜனாதிபதிக்கும்  இடையிலான முக்கிய சந்திப்பொன்று, நேற்று (09) காலை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
   இதன்போதே, பைஸர் முஸ்தபா எம்.பி.,  மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.
   கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் மெளலவிமார்கள் அடங்கிய 36 பேரை விடுவிக்கக் கோரியும், இதன்போது பைஸர் முஸ்தபா எம்.பி. ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.
   இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவர்களின் விடுதலை குறித்து சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடன் பேசி, உடன் நடவடிக்கை எடுக்குமாறு தான் கூறியதாகக் கூறுமாறும், இதன்போது  பைஸர் முஸ்தபா எம்.பி. யிடம் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.
   அத்துடன், இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திட்டார்.
   இதேவேளை, ஜனாதிபதியின் இந்த வேண்டுகோளை அடுத்து, பைஸர் முஸ்தபா எம்.பி., உடனடியாகவே  பதில் பொலிஸ் மா அதிபரையும் நேற்று (09) சந்தித்து இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.  இப்பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, பைஸர் முஸ்தபா எம்.பி. யின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
    பைஸர் முஸ்தபா எம்.பி. யின் வேண்டுகோளின் நிமித்தம்,  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களில் 20 பேர், நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்