BREAKING NEWS

பயங்கரவாதத்தை கூண்டோடு அழிப்பதற்கு சமய ஒற்றுமை அவசியம்


பயங்கரவாதத்தை கூண்டோடு அழிப்பதற்கு சமய சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை அவசியம்
- பெளத்த விகாரை இப்தார் நிகழ்வில் பைஸர் முஸ்தபா 

( மினுவாங்கொடை நிருபர் )

   பிறப்பினால் மட்டும் முஸ்லிமாக முடியாது என்றும், பிறருக்கு தீங்கு விளைவிக்காத நல்லொழுக்கம் உடையவரே  உண்மையான முஸ்லிமாகும் என, முன்னாள் அமைச்சரும், ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
   கொழும்பு - 13, ஜிந்துப்பிட்டி, ஸ்ரீ சாராநந்த பெளத்த மத்திய நிலையத்தில், கொடவெல சாந்தசிறி தலைமையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் துஷார ஹேமந்த (மஞ்சு) ஏற்பாடு செய்திருந்த, மத நல்லிணக்கத்திற்கான இப்தார் நிகழ்வு, (11) சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில்,  சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, லசந்த அழஹியவன்ன, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கே. சில்வா உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்கள், சிங்கள வாலிபர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது, 
   நாட்டில் நிலவிய ஒரு தசாப்த கால அமைதியைச் சீர் குழைத்து, அப்பாவிகளைக் கொன்று ஒழித்த ஈஸ்டர் தின தேவாலயத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம். முஸ்லிம் பெயரில் ஒரு சிலர் இந்த ஈனச் செயலைச் செய்துவிட்டு, இஸ்லாமிய சாயம் பூச முனைகின்றனர். சாந்தி, சமாதானம், கருணை, காருண்யம், மனிதாபிமானத்திற்கு மிக முக்கியத்துவம் அளிக்கும் இஸ்லாத்தில் இந்தக் கொடியவர்களுக்கு ஒருபோதும் இடமில்லை, இறைவன் படைத்த உயிர்களைக் கொல்லுவதற்கு இஸ்லாம் எவருக்கும் அனுமதியளிக்கவும் இல்லை. ஜாதி, மத, பேதங்கள் பாராத இந்த பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும், முஸ்லிம் அரசியல் வாதிகளும் முழு மூச்சாக முயற்சிக்கின்றனர். இந்த முயற்சிகளுக்கு ஏனைய சமய சகோதரர்களும் புரிந்துணர்வுடன் செயற்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. ஒரு சில தீயவர்களின் இலட்சியமில்லாத இந்த வெறித்தனங்கள் மூலமாக, எமது நாட்டை மீண்டும் குட்டிச் சுவராக்க அனுமதிக்க முடியாது. பயங்கரவாதத்தைத் தனிமைப்படுத்தி, அவர்களைக் கூண்டோடு அளிப்பதற்கு சமய, சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் அவசியம். இந்த நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தவே, இந்த விகாரையில் இந்த இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்தோம். மேலும், இந்து ஆலயங்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இவ்வாறான இப்தார் நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளோம். 
பயங்கரவாதிகளுக்கு முஸ்லிம்கள் என்றும் ஒத்துழைத்ததில்லை. இதனாலேயே குண்டுதாரிகளின் உடல்களை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்வதற்கும், அவர்களுக்கான இறுதிக்கிரியைகளை இஸ்லாமிய முறைப்படி செய்வதற்கும் முஸ்லிம் சமூகம் மறுத்து விட்டது என்றார். 

( ஐ. ஏ. காதிர் கான் )

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar