மாவனெல்லை சிலை உடைப்பு பிரதான சூத்திரதாரி சாதிக்கினால் 4 மாதங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த மனைவி சஹீதாவின் கதை
மாவனெல்லை புத்தர்சிலை தகர்ப்பின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராகக் கருதப்படும் 29 வயதுடைய மொஹம்மட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லாஹ்வின் மனைவியான 24 வயதுடைய பாத்திமா சஹீதா கடந்த மாதம் 26 ஆம் திகதி மாவனெல்லை முருத்தவெல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவரது கணவரான சாதிக் அப்துல்லாஹ் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனவும் பாதுகாப்புத் தரப்பு இனம் கண்டுள்ளது. கடந்த மாதம் 25, 26 ஆம் திகதி ஊடகங்களில் இவருடன் சேர்த்து மூன்று ஆண்களும் மூன்று பெண்களுமாக ஆறுபேர் பாதுகாப்புப் பிரிவால் தேடப்படுவதாக புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டிருந்தன. இவ்வாறு வெளியாகி 24 மணி நேரத்திற்குள் இவர்கள் இனங்காணப்படவும் கைதுசெய்யப்படவும் முடிந்துள்ளது.
பாதுகாப்புப் பிடியிலுள்ள பாத்திமா சஹீதாவிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் கூறியதாவது, தலைமறைவாக இருக்கும் எனது கணவர், அவர் குறித்த தகவல்களை பொலிஸாரிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு தகவல் வழங்கினால் தன்னைக் கொன்று விடுவதாகவும் என்னை எச்சரித்தார். என்கண்கள் இரண்டையும் கட்டிய நிலையில் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆள் அடையாள அட்டையொன்றையும் என்னிடம் தந்து என்னையும் பிள்ளையையும் வீதியில் இறக்கிவிட்டுச் சென்றார் என்று பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த ஆள் ஆடையாள அட்டை மாத்தறைப் பிரதேசத்தைச் சேர்ந்த சிங்களப்பெண் ஒருவரின் பெயரில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தர் சிலை உடைப்பைத் தொடர்ந்து சுமார் நான்கு மாதங்கள் இவர்கள் தலைமறைவாக இருந்து இறுதியாக தம் சொந்த இடத்திற்கு வந்தடைந்தபோதே கைதுக்குள்ளாகியுள்ளார். மனைவியையும் பிள்ளையையும் விட்டுச்செல்லும் போது பிள்ளைக்கு 100 ரூபாவுக்கான அலங்கார வளர்ப்பு மீன்களும் வாங்கிக் கொடுத்துள்ளார் சாதிக். கண்டி பஸ்ஸில் ஏறிப்புறப்பட்ட சாதிக், மனைவியையும் பிள்ளையையும் மாவனெல்லையில் இறக்கிவிட்டு கண்டிக்குப் புறப்பட்டுள்ளார் என்று மனைவி தெரிவித்துள்ளார்.
மாவனெல்லையில் இறங்கிய சஹீதாவும் பிள்ளையும் முச்சக்கர வண்டியில் முருத்தவெலயிலுள்ள தனது பெற்றோர் இருக்கும் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரமாக இருந்ததால் சஹீதாவின் தந்தை, ஓய்வுபெற்ற ஆசிரியரான மொஹம்மட் பளீல் பள்ளிக்குச் சென்றுள்ளார். வீட்டில் தாயும் சகோதரிகளும் இருந்துள்ளனர்.
இதன் பின்னர் நடந்த சம்பவம் குறித்து விசாரணையின் போது சஹீதாவின் 58 வயதுடைய தாய் ருஸ்னா பேகம் கூறியதாவது;
பாத்திமா சஹீதா என்ற எனது மகளின் பெயர் ஊடகங்களில் புகைப்படத்துடன் பாத்திமா லத்தீபா என்று தவறாக வெளியிடப்படுகின்றது. இவர் எனது மூன்றாவது பிள்ளை. எனக்கு நான்கு பெண் பிள்ளைகளில் இவருக்கு மூத்தவர் இருவரும் திருமணமாகியுள்ளனர். இவரது தங்கை உயர் தரத்தில் படித்துக்கொண்டிருக்கிறார். பாத்திமா சஹீதாவும் நன்கு படித்து பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பிருந்த நிலையிலேயே 2015 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார்.
இந்த மகளுக்கு சில காலமாக மயக்கம் வரும் நோய் இருந்துவந்தது. இவர் மண முடித்த கணவரின் தந்தை உளவியல் பரிகாரம் செய்பவர். அதனால் அவரும் மகளுக்கு உளவியல் சிகிச்சை வழங்கியுள்ளார். அவர் ஒரு மௌலவியும் கூட. அதேபோன்று சமூகத்தில் நன்றாக மதிக்கப்படுபவர். அவர் போன்றே பிள்ளைகளும் காணப்பட்டதால் நாம் எமது மகளுக்கு அவரது மகனை மணமுடித்துக் கொடுத்தோம். ஆனால் அவர் இப்படி நாட்டை கொந்தளிப்பில் ஆழ்த்துவார் என்று நாம் எதிர்பார்க்கவேயில்லை. 2018 டிசம்பர் மாதம் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பின் பின்னர் இவர் எனது மகளையும் 2 வருடமும் 7 மாதம் உள்ள ஒரே குழந்தையையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். இவரது இந்த அக்கிரம செயற்பாடுகள் குறித்து எனது மகள் அறிந்திருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
இவர்களைத் தேடி பொலிஸார் எமது வீட்டுக்கு வந்தனர். இவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடன் அறிவிப்பதாக நாம் பாதுகாப்பு தரப்பினரிடம் உறுதியளித்தோம். அதேபோன்று நடந்தேறியுள்ளது.
ஊடகங்களில் வெளியிட்ட எனது மகளின் புகைப்படத்தை நாம் தான் பொலிஸாருக்கு கொடுத்தோம். நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும் என்பது தான் எமது நோக்கம். நாம் இன, மத பேதங்களை நாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கும் மக்களல்ல. சிங்கள மக்களுடன் இவ்வளவு காலமும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்துள்ளோம். என்னால் நன்கு சிங்களம் பேசவும் முடியும்.
எனது வீடு மூடியிருந்த நிலையிலே தான் எனது மகள் வீட்டுக்கு வந்து, “உம்மா, உம்மா” என்று கதவைத் தட்டினார். எனது மகள் வந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. எனது வீட்டிலுள்ளோரும் நம்பவே மறுத்தனர். உடனே நான் பள்ளிக்குச் சென்றுள்ள எனது கணவரிடம் தெரிவிப்பதற்காக உடுத்த உடையுடன் அபாயா, செருப்பு எதனையும் அணியக்கூட தன்நிலை மறந்தவாறு பள்ளியை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்று கணவரை அழைத்தேன். என் பதற்றநிலை கண்டு பள்ளியில் உள்ளோரும் பரபரப்படைந்தனர். அவசரமாக கணவர் வீட்டுக்கு வந்தார். நாம் உடனே கொழும்பு சீ.ஐ.டீ யில் உள்ள மாரசிங்ஹ என்பவருடன் தொடர்பு கொண்டோம் “எமது மகள் வந்துள்ளார் நாம் என்ன செய்ய வேண்டும்” என்று அவரை வினவினோம்.
இதே போன்று தான் எனது மகளும் எமது வீட்டை அடைந்தவுடன், “வாப்பா எங்கே-? என்னை உடனடியாக பொலிஸில் ஒப்படையுங்கள்…” என்று பதறித்துடித்தவாறே தான் வீட்டுக்கு வந்தார்.
எனது மகள் மீதுள்ள பாசத்தையெல்லாம் புறந்தள்ளிவிட்டுத் தான் நாம் பாதுகாப்புத் தரப்புக்கு தகவல் வழங்கினோம். அன்று புத்தர் சிலை உடைப்பைத் தொடர்ந்து எழுந்த கொந்தளிப்பின் போதுதான் எனது மகளையும் பிள்ளையையும் கூட்டிக் கொண்டு அவசர அவசரமாக அவரது கணவர் வெளியேறினார். அப்போது மகளுக்கு எதுவும் தெரியாது. எங்கு செல்கிறோம் என்பது கூடத் தெரியவில்லை.
நாம் சஹீதாவின் கணவரை நல்லவராகவே மதித்தோம். அந்தளவுக்கு அவர் எம்முடன் அமைதியாகவே நடந்து கொண்டார். மகளை அழைத்துச்சென்ற அவர் எத்தகைய வெளியுலகத் தொடர்புமற்ற இடமொன்றிலே வைத்துள்ளார். நாட்டு நடப்பு எதனையும் மகளால் புரிந்துகொள்ள முடியாதவாறே இருந்துள்ளார். சுருக்கமாகச் சொல்வதானால், நாள்– நேரம் கூட அவரால் தெரிந்துகொள்ள முடியவில்லை. 26 ஆம் திகதி இங்கு வரும்வரை இதே சிறை வாழ்வையே அனுபவித்துள்ளார்.
புத்தர் சிலை தகர்த்த தேடுதலின் போது முச்சக்கர வண்டியொன்றில் எனது மகளையும் பிள்ளைகளையும் பின் ஆசனத்தில் அமர்த்தி சாதிக்கே முச்சக்கர வண்டியைச் செலுத்திச்சென்றுள்ளார். அப்போது குருநாகல் பெயர்ப் பலகையை எனது மகள் அடையாளம் கண்டுள்ளார். அதன் பின்னர் காட்டுப் பகுதியொன்றில் வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்துள்ளது. அதன் அருகே இவர்கள் சென்ற முச்சக்கர வண்டி நிறுத்தப்பட, வேன் அருகே நின்றவர் முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றுள்ளார். எனது மகளை அந்த வேனில் ஏற்றி இரு கண்களையும் மூடிக் கட்டியுள்ளார். பின்னர் பயணம் தொடர்ந்துள்ளது. நீண்ட பயணத்தின் பின்னர் வீடொன்றின் அருகே வாகனம் நிறுத்தப்பட்டு அவ்வீட்டின் அறையொன்றில் இவர்கள் விடப்பட்டுள்ளனர். அதன் பின்பே கண்கள் திறக்கப்பட்டுள்ளன. வீட்டுடன் தொடர்பு கொள்வதற்கு கணவரிடம் தொலைபேசியைக் கேட்டபோது அதனை வழங்க மறுத்துள்ளதுடன் “நீ எப்படியாவது என்னைக் காட்டிக்கொடுத்தால் எனது ஆட்கள் மூலம் உனது கழுத்தை அறுக்கச் செய்து விடுவேன். அதிகம் துள்ளாதே" என்று எச்சரித்துள்ளார்.
இவர் முன்னர் பணவசதியில்லாதவராகவே இருந்தார். மிகவும் எளிமையாகவே வாழ்ந்தார். மகளோடு சென்று தலைமறைவாக இருந்த போது, குளிரூட்டிய அறையில் நன்கு உண்ணக் குடிக்கக் கொடுத்துள்ளார். பிள்ளைக்கும் தாராளமாக விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார். நல்ல ஆடைகளும் வாங்கிக் கொடுத்துள்ளார். நன்கு பணம் புழங்கியதையும் எனது மகள் கண்டுள்ளார். அவ்விடத்தில் விமானங்களின் இரைச்சல் சத்தத்தைக் கேட்க முடிந்ததாகவும் ஆனால் எந்த இடம் என்று நிச்சயிக்க முடியவில்லை என்றும் மகள் கூறுகிறார்.
பின்னர் வேறு ஒரு வீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த வீடு சற்று விசாலமானது. அறையில் எப்போதும் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் இரவு – பகலை அடையாளம் காணமுடியாதிருந்துள்ளார். அவ்வீட்டின் பிறிதோர் இடத்தில் கணவரின் தம்பி சாஹிட் அப்துல்லா இருந்ததை சின்ன மகனின் வார்த்தைகள் மூலம் உணர முடிந்ததாம்.
இதன் பின்னர் மற்றுமொரு வீட்டுக்கு மாற்றப்பட்டனராம். அங்கு இருக்கும் போது தான் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலையொன்று காணப்பட்டதாம். அது தான் ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் தினம் என்று ஊகிக்க முடிகிறது. அங்கிருந்தும் பிறிதொரு வீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அந்த வீட்டில் அதிக உஷ்ண நிலையை அனுபவித்துள்ளனர். இவ்வாறு மகள் 26 ஆம் திகதி இங்கு வரும் வரை பல இடங்களிலும் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் இறுதியாக கண்களைக் கட்டி வேன் ஒன்றில் ஏற்றப்பட்டு பயணித்துள்ளனர். ஜனசந்தடியற்ற இடமொன்றில் நிறுத்தப்பட்டு அதிலிருந்து இறங்கி முச்சக்கர வண்டியில் ஏறி கரண்டுபன சந்தியில் இறங்கியுள்ளனர். அந்த இடத்தில்தான் அலங்கார வளர்ப்பு மீன் விற்கும் கடையில் மகனுக்கு மீன் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. கேகாலை–கண்டி பஸ்ஸில் ஏறியே இவர்கள் மாவனெல்லையில் இறக்கப்பட அவர் கண்டி நோக்கிப் பயணமாகியுள்ளார்.
சீ.ஐ.டி வந்து மகளை கொழும்புக்கு அழைத்துச் செல்லும் போது, “உம்மா கணவர் தரப்பினர் மிகவும் பயங்கரமானவர்கள். என் பிள்ளையை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று அழுது புலம்பியவாறே சென்றார். சீ.ஐ.டியினர் மகளை அழைத்துச் செல்லும் போது அவர் கணவருடன் வந்த பாதையை இயன்றவரை அடையாளம் காட்டும்படி கூறி அதே பாதையில் கொழும்புக்குச் சென்றபோதிலும் வேனிலிருந்து இறங்கி முச்சக்கர வண்டியில் ஏறிய இடம் வரையிலுமே அவரால் இனம்காட்ட முடிந்துள்ளது.
மருமகன் எங்காவது பயணம் போவதென்றால் மகளையும் பிள்ளையையும் எங்கள் வீட்டில் விட்டு விட்டுத்தான் போவார். அவரது வீட்டுக்கு எப்போதாவதுதான் போவோம். அவரது அந்தரங்க நடவடிக்கைகள் எதுவும் மகளுக்குத் தெரியாது. எல்லாம் இரகசியமாகவே நடந்து கொள்வார்.
அதனால்தான் அவரைக் காட்டிக் கொடுத்து நான் சிறை சென்றாலும் பரவாயில்லை. நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றே மகள் அழுதவாறு சீ.ஐ.டி யுடன் செல்லும் வரையில் எம்முடன் கூறிக் கொண்டிருந்தார் என்று சஹீதாவின் தாய் கூறினார்.
இது இவ்வாறிருக்கையில், கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடந்த காலை வேளையில் பாத்திமா சஹீதா, ராஜகிரிய பகுதியிலுள்ள விகாரையொன்றுக்கு வெள்ளை உடை அணிந்து வந்திருந்த சம்பவம் தொடர்பாக, அந்த விகாரையிலுள்ள ரஜவத்தவப்ப அனுனாஹிமி தேரர் ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பாதுகாப்புப் பிரிவு விசாரணை செய்து வருகிறது. இதன் உண்மைத் தன்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாத்திமா சஹீதாவின் கணவர் மொஹம்மட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லாஹ் மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பின் பிரதான சந்தேக நபராவார். அவரும் அவரது சகாக்களாலும் கடந்த வருடம் இறுதிப்பகுதியில் மாவனெல்லைப் பகுதியில் சில இடங்களில் புத்தர் சிலைகளை உடைத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்களால் சிலை தகர்ப்பு நடந்து கொண்டிருந்தபோது திதுலவத்த பிரதேச வாலிபர் இருவரால் சந்தேக நபர் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட, மோட்டார் சைக்கிளில் வந்தவர் தப்பிச்சென்றுள்ளார். அவர் தான் மொஹம்மட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லாஹ் ஆவார். இவர் பாத்திமா சஹீதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூலமே பாதுகாப்புப் பிரிவினர் சகல விபரங்களையும் தெரிந்துகொண்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் பிரதான சந்தேக நபரான பாத்திமா சஹீதாவின் கணவரான சாதிக் அப்துல்லாஹ்வும் அவரது சகோதரனும் நான்கு மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் அண்மையில் கம்பளை சப்பாத்துக்கடை யொன்றில் பதுங்கியிருந்த நிலையில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் இவர்களுக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதுவரை நடந்த விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. இதனை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் சமாதானம் நிலவச் செய்ய வேண்டும். 30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த எமது நாட்டுக்கு இதனையும் தீர்த்து வைக்க முடியும் என்பதை உறுதி செய்து மீண்டும் பயங்கரவாதம் இல்லாது நாட்டில் அமைதி நிலவ பிரார்த்திப்போம்.
சிங்களத்தில்:
சமன் விஜய பண்டார , லங்காதீப வார இதழ்.
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
கட்டுரை மூலம் விடிவெள்ளிப் பத்திரிகை
Post a Comment