( மினுவாங்கொடை நிருபர் )
மினுவாங்கொடை பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் சில வாகனங்கள் நேற்று முன் தினம் (13) மாலை அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்குத் தீவைத்தும் கொளுத்தப்பட்டுள்ளன.
உள்ளூர்வாசிகளின் ஒத்துழைப்புடன் தடிகள், பொல்லுகள், வாள்களுடன், வெளியூரிலிருந்து இங்கு வந்த ஒரு சில சிங்கள இன வாதக் குழுவினரே இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என, மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 25 க்கும் மேற்பட்ட கடைகள் சேதத்திற்குள்ளாகியும், தீக்கிரைக்குள்ளாகியுமுள்ளது டன், அங்கிருந்த டவுன் பள்ளிவாசலுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறையாளர்களின் அடாவடியினால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.
மினுவாங்கொடை நகருக்குச் செல்லும், அத்தனை வீதிகளும் அடைக்கப்பட்டு, முஸ்லிம்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு நிலை மினுவாங்கொடையில் தோன்றியதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சம்பவ இடத்தில் தற்போது விசேட அதிரடிப்படை, இலங்கை விமானப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், இப்பிரதேசத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நிலைமை தற்போது சுமூகமாகியுள்ள போதிலும், எரியூட்டப்பட்ட கடைகள் இன்னும் பற்றி எரிவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மினுவாங்கொடை நகரில் அமைதியற்ற சூழ்நிலை மேலும் நீடிக்காதிருக்கும் வகையில், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மினுவாங்கொடை, புருல்லபிட்டிய, , கல்லொழுவை, ஜாபாலவத்தை, பொல்வத்தை, பத்தண்டுவன, மிரிஸ்வத்தை, கோப்பிவத்தை ஆகிய பகுதிகளில் நேற்று முன் தினம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இவ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் பாதுகாப்புக் கருதி அமுல்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment