தமிழ் மக்களின் எதிர்காலமும் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடும்


தமிழ் மக்களின்  எதிர்காலமும் 
தமிழ் கட்சிகளின் நிலைப்பாடும்
ஒற்றுமையை வலியுறுத்தும் கலந்துரையாடல்
உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு

இலங்கை அரசியலில் மிக நீண்ட காலமாக தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் சிக்குண்டு தவிக்கும் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான எதிர்காலம் இனியும் காலம் தாழ்ந்து செல்ல கூடாது அல்லது தொடர்ந்தும் தமிழ் தலைவர்கள் என கூறப்படும்  சிலரால் ஏமாற்றப்படக் கூடாது என்னும் நல்லெண்ண அடிப்படையில் தமிழ் மக்களின் எதிர்காலமும் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடும் எனும் மகுடத்தில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு  செய்யப்பட்டு வருகின்றது.

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்வோர் தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களின் எதிர்கால நல்வாழ்விற்காக தமக்கிடையே ஒற்றுமையை  ஏற்படுத்த வேண்டும்  என்பதனை வலியுறுத்தும் முகமாக  உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளை நாட்டிலுள்ள சகல தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்  சிரேஷ்ட அங்கத்தவர்கள் ஆகியோரை  உள்ளடக்கியதாக  மாபெரும் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து வருகின்றது .

இவ்வருடம் மே மாதத்தில் இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படவுள்ளது. வடக்கு-கிழக்கு மற்றும் மலையக கொழும்பு தமிழர்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதை கடந்த பல வருடங்களாக கண்கூடாக காண முடிகிறது. யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கழிந்த போதும் பல பெரும்பான்மை இன தலைமைகளின் ஆட்சிகளின் கீழ் இன்னமும் ஒரு அரசியல் தீர்வுக்கு வர முடியாது சிக்கித் தவிக்கும் ஒரு நிலையே தமிழ் மக்களுக்கும்  தமிழ் அரசியல் தலைவர்களுக்குமிடையே காணப்படுகின்ற ஒரு ஒற்றுமையாக இருந்து வருகிறது.

இதற்கு தமிழ் அரசியல் கட்சிகளின்  தலைமைகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமையின்மையே பிரதான காரணமாக அமைகின்றது. இதன் காரணமாகவே பல தடவைகள் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதிலும் ஒரு நிலையான தீர்வினைக் காண முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை இருந்து வருகின்றது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமேயானால் தமிழ் அரசியல் கட்சிகளிடையே தமிழ் அரசியல் தலைவர்கள் இடையே நிலையானதொரு ஒற்றுமை ரீதியிலான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதுவரை காலமும் இருந்து வந்த வேறுபாடுகளை,  பிரிவினைகளை புறந்தள்ளிவிட்டு தமிழ் கட்சிகள் தமிழ்த் தலைவர்கள் ஒற்றுமைப்பட்டு ஒரே குரலில் தமது மக்களுக்கான உரிமை தீர்வை முன்வைக்க வேண்டும்.  

தேர்தல் காலங்களில் உறுதிமொழிகளை வழங்கிவிட்டு அடுத்த தேர்தல் வரும் வரை காத்திருந்து அதே உறுதிமொழிகளை மீண்டும் மக்கள் முன் வாக்கு வேட்டைக்காக முன்வைப்பது என்பது கடந்த பல வருடங்களாக தமிழ் மக்கள் கண்ணுற்று வருகின்ற ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையை இனியும் தொடர விடாது மாற்றியமைக்கும் ஒரு முயற்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் முழு வீச்சாக இம்முறை இறங்கியுள்ளது.  ஜனாதிபதித் தேர்தல் மாகாண சபைத் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் என்பன அடுத்தடுத்து இடம்பெறவிருக்கும் இக்காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைகள் தீர்க்கமான ஒரு முடிவினை முன்வைக்க வேண்டும் என்பதே இக்கலந்துரையாடலின் தொனிப்பொருளாகும்.  இதற்காக சகல தமிழ் அரசியல் கட்சிகளும் தமக்கிடையேயான கட்சி பேதங்களை, அரசியல் பேதங்களை, பிரதேச வேறுபாடுகளை,  தலைமை போட்டிகளை தூக்கி எறிந்துவிட்டு ஓரணியில் திரண்டு வெற்றி காண வேண்டும் என்பதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும் 

இந்த கலந்துரையாடலுக்கான அழைப்புக்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கும் அனுப்பிவைக்கப்படும். கலந்து கொள்வதும் கண்டுகொள்ளாமல் விடுவதும அவர்களது தமிழ் மக்கள் மீதான  பற்றாகும். 

இக்கலந்துரையாடலில் தெரிவு செய்யப்பட்ட மதத்தலைவர்கள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் அனுபவம் கொண்ட முன்னாள் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருடன் உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் சர்வதேச கிளைகளிலிருந்து முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா