இரண்டாம் நிலை நகரங்களாக 25 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படும் - அமைச்சர் வஜிர அபேவர்தன

  

( ஐ. ஏ. காதிர் கான் )

   நாடளாவிய ரீதியில் உள்ள 25 நகரங்கள் இரண்டாம் நிலை நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக,  உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள்,  உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 
"மாவட்டத்திற்கொரு நகரம்"  என்ற அடிப்படையில் மூன்றாண்டு காலத்திற்குள் சகல வசதிகளையும் கொண்டதாக,  குறித்த  நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  அமைச்சர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,  இரண்டாம் நிலை நகர அபிவிருத்திக்கென, ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. 
   இத்திட்டத்தின் கீழ், வட மாகாணத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் நகரங்களும், கிழக்கு மாகாணத்தில் மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் நிர்வகிக்கப்படும்  நகரங்களுமாக எட்டு இரண்டாம் நிலை நகரங்கள்  அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. 
   இதேவேளை, மேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம் என்பவற்றின் கீழ் செயற்படும்  உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள தலா மூன்று நகரங்கள் வீதமும்,  வடமேல், வட மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் உள்ளூராட்சி மன்றங்களில் அமைந்துள்ள தலா இரண்டு நகரங்கள் வீதமுமாக 17 நகரங்கள்,  இரண்டாம் நிலை நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.

Comments

popular posts

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்