உதுமாலெப்பை நுழையப்போகும் கட்சி எது?


உதுமாலெப்பை நுழையப்போகும் கட்சி எது?

சில நாட்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை பற்றிய கதையாடல்களை அவதானிக்க முடிகிறது. அவர் தே.காவிலிருந்து கட்சி மாறிய சேதியானது முக்கியதொரு சேதியாக இருப்பினும், அவர் எக் கட்சியில் இணைந்துகொள்வார் என்ற விடயமே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. மு.காவின் பா.உ நஸீர் சில நாட்களுக்கு முன் அவருக்கு திறந்த அழைப்பை விடுத்திருந்தமையானது, அம்பாறை அரசியலில் அவரின் செல்வாக்கை துல்லியமாக்குகின்றது.

இப்போது அவர் நுழையப்போகும் கட்சி எது என்ற வினாவுக்கான பதிலை, அவர் எக் கட்சியில் இணைவதனூடாக சிறந்த அரசியல் எதிர்காலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற விடயத்தை ஆழமாக நோக்குவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இவர் கட்சி மாறுவதாக இருந்தால் சு.க, மு.கா, அ.இ.ம.கா ஆகியவற்றில் ஒன்றின் பக்கம் செல்வார் என்பதை உறுதிபட குறிப்பிடலாம்.

சுதந்திர கட்சியாக இருக்குமா?

அண்மையில் மு.மா.ச.உ உதுமாலெப்பை கிழக்கு மாகாண முன்பள்ளிகளின் தவிசாளராக ஆளுநரால் நியமிக்கப்பட்டிருந்தார். இந் நியமனம், அவர் சு.க பக்கம் தாவப்போகிறாரா என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருந்தது. இந் நிலையில், இவ்வாறான சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததே. இருப்பினும், அவர் சு.க நுழைவதனூடாக, தனது அரசியல் இருப்பை உறுதி செய்ய முடியுமா?

அவருக்கு வழங்கப்பட்டுள்ள இப் பதவியானது, முன் பசியை ஆற்ற போதுமானதே தவிர, தனது பசியை முழுமையாக ஆற்ற போதுமானதல்ல. அவருடைய இலக்கு குறைந்தது மீண்டும் மாகாண சபையாக இருக்கும் என்பது நாம் சாதாரணமாக ஊகித்துகொள்ள முடியுமான ஒரு விடயம்.

இவர் தே.காவின் தலைவர் அதாவுல்லாஹ்வை எதிர்த்தே கட்சி மாறுகிறார். தே.காவின் தலைவர் அதாவுல்லாஹ் சு.காவின் முக்கிய புள்ளி. அவரை எதிர்த்து சு.காவில் ஒரு சிறந்த அரசியல் வாதியாக உருவெடுக்க முடியுமென நினைப்பாராக இருந்தால், அதனைப் போன்ற மடமை வேறு எதுவுமிராது. கிழக்கு ஆளுநர் என்பதாலேயே ஹிஸ்புல்லாஹ்வின் வீச்சு அம்பாறை வரை நீண்டுள்ளது. அப் பதவி அவரை விட்டும் செல்லுமாக இருந்தால், அவர் மட்டக்களப்போடு முடங்கிவிடுவார்.

நிலவரம் இவ்வாறிருக்கையில், உதுமாலெப்பை ஹிஸ்புல்லாஹ்வை நம்பி சு.காவில் பயணிக்க நினைப்பாராயின் அவரின் வாழ்வு சூனியமாகிவிடும் என்பதை சாதாரணமாக அறிந்துகொள்ளலாம்.

மு.காவில் இணைவாரா?

இன்று உதுமாலெப்பையை கட்சிகள் தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்ள முயற்சிப்பதன் பின்னால், அவரை வைத்து அட்டாளைச்சேனையில் தங்களது அரசியல் இருப்பை பலப்படுத்தும் விடயமே உள்ளது. அட்டாளைச்சேனையில் பா.உறுப்பினராக நஸீர் உள்ளார். ஒரு விடயத்தில் நஸீரா, உதுமாலெப்பையா என்ற நிலை மு.காவினரிடையே வருமாக இருந்தால், நிச்சயம் அட்டாளைச்சேனையில் நஸீர் என்ற பெயருக்கே முன்னிலை வழங்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இன்று நஸீர் பா.உறுப்பினராக இருக்கலாம். இப்போது அட்டாளைச்சேனையில் ஒரு மாகாண சபைக்கான வெற்றிடம் இருப்பது போன்றும் தோன்றலாம். நஸீரின் பாராளுமன்ற ஆசனம் எத்தனை நாட்களுக்கு என்ற வினாவை எழுப்பினால், அங்கு மாகாண சபை தான் நிரந்தர வெற்றிடம் என்பதை உணர்ந்திடச் செய்யும். அதனை அலங்கரிப்பதற்கான வாய்ப்பு நஸீருக்கே உள்ளது. இவ்வாறான நிலையில் உதுமாலெப்பை மு.காவில் இணைவாராக இருந்தால் அட்டாளைச்சேனை தவிசாளராக வர வாய்ப்புள்ளது. ஒரு மாகாண அமைச்சராக இருந்தவர் தவிசாளராவதா?

இவரை மு.கா தன் பக்கம் சாய்த்துக்கொள்ள பல பிரயத்தனங்களை எடுக்கின்ற போதும், அவர் மு.கா பக்கம் செல்வதில் அதிக நாட்டமற்றவராக உள்ளார் என்றே அவரை நெருங்கிய வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதுவரை காலமும் மு.காவை எதிர்ப்பதையே பிரதான அரசியலாக செய்து வந்த உதுமாலெப்பை அதாவுல்லாஹ்விடமிருந்து பிரிந்து மீண்டும் மு.காவில் இணைவது, அவரை கொள்கையற்றவராக காட்டிவிடும். இது அவரது அரசியலுக்கு இழுக்கை சேர்த்துவிடும்.

அ.இ.ம.காவில் இணைவாரா?

இவர் கட்சி மாறுவதற்கான சைகையை காட்டிய நாள் முதல் இன்று வரை அவர் அ.இ.ம.காவினருடன் மிக நெருங்கிய தொடர்பை பேணியே வருகிறார். அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா தனித்து களமிறங்குமாக இருந்தால், தான் அதனோடு இணைந்துகொள்வேன் என்ற உறுதிமொழியை முன்னர் வழங்கியிருந்ததாகவும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அட்டாளைச்சேனையில் அ.இ.ம.காவை முன்னெடுத்துச் செல்ல பலமிக்க நபர்கள் இல்லாத குறையுள்ளது. இவர் அப் பக்கம் செல்வாராக இருந்தால் அனைத்து விடயங்களிலும் இவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மாகாண சபைக்கான ஆசனம் எவ்வித சந்தேகமுமின்றி இவருக்கு வழங்கப்படும். அதே போன்று பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடக் கூடிய சாதக நிலை உள்ளதோடு, சற்று முயற்சித்தால் வெற்றியீட்டக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. இது வளர்ந்து வரும் கட்சி என்பதால், அக் கட்சியின் எதிர்கால வளர்ச்சியில் பங்குகொண்டு, தனக்கு தேவையானதை உரிமையோடு பெற்றுக்கொள்ள முடியும். இந் நிலை அவருக்கு மு.காவில் இராது. அனைத்தையும் ஒஞ்சி ஒஞ்சியே கேட்க வேண்டும்.

இவர் தே.காவிலிருந்து பிரிந்தமைக்கு முன் வைக்கும் பிரதான குற்றச்சாட்டு முஸ்லிம் கூட்டமைப்புக்கு அதாவுல்லாஹ் உடன்படாமை என்பதேயாகும். இதன் மறு கருத்து, கடந்த தேர்தல் காலப்பகுதியில், அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆட்சியமைப்பின் போது அதாவுல்லாஹ், அமைச்சர் றிஷாதுடன் உடன்பட்டு செல்லாமை எனலாம் (உட் பார்வையில்). இதனை வைத்து பார்த்தால் கூட, அவர் எப் பக்கம் செல்வார் என்பதை சாதாரணமாக ஊகித்துகொள்ள முடியும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்