விஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்களை ஒழிக்க கம்பஹாவில் விசேட திட்டம்


( மினுவாங்கொடை நிருபர் )
   ஹெரோயின் உட்பட விஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்கள் தொடர்பில் தகவல்களைப்  பெற்றுக்கொள்வதற்காக, கம்பஹா பொலிஸ் தலைமையகத்தில் விசேட சிறப்பு தகவல் மத்திய நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
   பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் பூரண மேற்பார்வையின் கீழ், குறித்த விசேட போதைப் பொருள் தடுப்பு தகவல் மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக, மேல் மாகாண வடக்குப் பிராந்திய  பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.
   கம்பஹா பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில்,  "நேரடியாகக் கூறவும்" எனும் தலைப்பில், (18) ஞாயிற்றுக்கிழமை, சட்டவிரோத போதைப் பொருள் பாவனை தொடர்பிலான செய்தியாளர் மாநாடு, கம்பஹா சாம மகா விகாரையில்  இடம்பெற்றது.
   கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த, அனைத்து ஊடகங்களையும்  பிரதிநிதித்துவப்படுத்தும் 50 பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் மேற்பட்டோர் பங்குபற்றிய  இந்நிகழ்வில்,  பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் இங்கு விளக்கமளிக்கையில்,
   நாம் பிரதானமாக ஐந்து விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துதல், சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் மற்றும் மசாஜ் நிலையங்களைக் கட்டுப்படுத்துதல், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதல், தேசிய பாதுகாப்பு தொடர்பில் துரித நடவடிக்கை எடுத்தல், டெங்கு ஒழிப்பு மற்றும் சுற்றுச் சூழல், சுகாதார விடயங்கள் தொடர்பில் எந்நேரமும் அவதானமாக இருத்தல் போன்றவை குறித்த விவகாரங்களில் அதி தீவிர கண்காணிப்புக்களைச் செலுத்தவுள்ளோம்.
   மக்களுக்கு எவ்வித அசௌகரியங்கள் இன்றியும்,  அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாத விதமாகவும், சகல  தகவல்களையும்  வழங்குவதற்காக, பிரத்தியேகமாக 24 மணி நேரமும் இயங்கும்  தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
   இதன்பிரகாரம், கம்பஹா மாவட்டத்தில் கம்பஹா, நீர்கொழும்பு, களனி ஆகிய மூன்று பிரதான பொலிஸ் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
   கம்பஹா - 0713210001, நீர்கொழும்பு - 0713680001, களனி - 0713580001 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக, இது தொடர்பிலான முறைப்பாடுகளை நேரடியாகத் தெரிவிக்க முடியும்.
    இது தவிர,  011-3024820,  011-3024840, 011-3024850 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 011-2430912, 011-2472757 ஆகிய தொலை நகல் இலக்கங்கள் மற்றும் sand@police.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவும்  தொடர்பு கொண்டு,  போதைப் பொருள் குறித்த எந்தவொரு தகவலையும் வழங்க முடியும்  என்றும்  குறிப்பிட்டார்.

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி

ACMC + SLMC இணைந்து பணியாற்ற தீர்மானம்