பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்


- அமைச்சர் பைஸர் முஸ்தபா
( மினுவாங்கொடை நிருபர் )
பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில்  போடப்படும் சிறந்த அடித்தளம் என்பன, நாளைய சமுதாயத்தில் நல்ல பிரஜைகளை உருவாக்க வழிவகுக்கும். எனவே, மாணவர் சமூகத்தை முன்னேற்றுவதே ஆசிரியர்கள் புரியும் மகத்தான பணியாகும்  என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
   மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், கொழும்பு மாவட்டத்திலுள்ள 38  பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது, இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
   அமைச்சர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது,
   சமூகத்திற்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு,  அரசியல்வாதிகள் இருக்கின்ற நிலையில், சிறந்த ஒரு மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்பக்கூடிய பொறுப்பு, ஆசிரியர்களிடத்தில்தான் தங்கியுள்ளது.
   அத்துடன்,  எதிர்கால மாணவர் சமூகத்தை கல்வியின் ஊடாக முன்னேற்றுவதற்கும், ஆசிரியர்கள் எந்நேரமும் இதய சுத்தியுடன் செயலாற்ற முன்வர வேண்டும்.
   மாணவர்களை நாம் பாராட்டும்பொழுது அல்லது கெளரவிக்கும்பொழுது, அவர்கள் சமூகத்தில் சிறந்த மாணாக்கர்களாகத் திகழ்வார்கள். இதற்கு, சிறந்த  சமூக சிந்தனையாளர்களாகவும், ஒழுக்கம் மற்றும்  கட்டுக்கோப்பான ஒரு சமூகத்தையுடையவர்களாகவும் நாம்  மாணவர்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
    கல்வித்துறை தொடர்பில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் கிராமிய மட்டத்தின் ஊடாக விளையாட்டுத் துறையும்  அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். இதற்காகவே, கிரிக்கெட் உபகரணங்களை வழங்கி வைப்பதற்காக 38  பாடசாலைகளைத் தெரிவு செய்துள்ளோம். இதில், மூன்று பெண்கள் கிரிக்கெட் கடினப்பந்து விளையாடும் பாடசாலைகளும் அடங்குகின்றன. எதிர்காலத்தில், கொழும்புக்கு வெளியேயும் இவ்வேலைத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டுள்ளோம் என்றார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்