முஸ்லிம் தனியார் திருத்த சட்டத்தில் எத்தகைய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலான குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக மஸ்ஜிதுகளின் சம்மேளனங்கள் அறிவித்துள்ளமை இஸ்லாமிய ஷரியா பற்றிய அவர்களது அறியாமையை காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இது பற்றி கல்முனையில் நடை பெற்ற கட்சி உயர் மட்ட கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்ததாவது,
அண்மையில் கொழும்பில் கூடிய மஸ்ஜிதுகளின் சம்மேளனங்களின் கூட்டத்தில் மேற்படி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கை இஸ்லாமிய ஷரீயாவுக்குட்பட்டது என்றும் இதனை ஜம்மிய்யத்துல் உலமாவும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளதானது முஸ்லிம் சமூகத்தை வழி கெடுக்கும் முயற்சியாகும்.
மேற்படி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கையை மஸ்ஜிதுகளின் சம்மேளனம் வாசித்தார்களா என்பது தெரியவில்லை. அவ்வறிக்கை இன்னமும் முஸ்லிம் மக்களின் பார்வைக்கு பகிரங்கமாக சமர்ப்பிக்கப்படவும் இல்லை. அவ்வறிக்கையில் முஸ்லிம் பெண்ணின் திருமண வயது 16 என வரையறுத்திருப்பது இஸ்லாமிய ஷரீயாவுக்கு முரணானது என்று தெரிந்தும் இவ்வறிக்கையை ஜம்மியதுல் உலமாவும் சரி கண்டிருப்பது பிழையானதாகும். இவ்வாறு வயதை மட்டுப்படுத்துவது பல தவறான திருமண பதிவுக்கு அப்பாட்பட்ட தகாத உறவுகளுக்கு வழி வகுக்கும் என்பதை உலமா கட்சி தொடர்ந்து தெளிவூட்டி வருகிறது.
இன்றைய இலங்கை முஸ்லிம்கள் பாரிய இன அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் போது அவற்றை எப்படி தீர்ப்பது என்றோ கொழும்பு முஸ்லிம்கள் கல்வியிலும் வர்த்தகத்தை பின்னடைவை நோக்கிக்கொண்டிருப்பது பற்றியோ இதுவரை ஒன்று கூடி ஆராயாத கொழும்பு மஸ்ஜிதுகளின் சம்மேளனம் எந்தவொரு முஸ்லிம் பத்தினி பெண்ணும் கோரிக்கை விடுக்காத இந்த சட்ட மாற்றம் பற்றி விளக்குவதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து பெரிய ஹோட்டல்களில் கூட்டம் நடத்துகிறார்கள். இதற்காக செலவு செய்யும் பணத்தை கொழும்பு பள்ளிவாயல்கள் முன்பாக பிச்சை எடுப்போருக்கு கொடுத்து அவர்களுக்கு வாழ்வளித்திருக்கலாம் அல்லது திருமணம் முடிக்க வசதியில்லாத ஏழை குமருக்கு கொடுத்திருக்கலச்ம்.
அதனை விடுத்து இதனை பெரிதாக தூக்கிக்கொண்டு கூட்டம் நடத்துவதற்கு ஐரோப்பிய முஸ்லிம் விரோதிகள் பணம் கொடுத்துள்ளார்களா என்ற சந்தேகம் வருகிறது.
ஆகவே சலீம் மர்சூப், பாயிஸ் முஸ்தபா ஆகிய இருவரின் அறிக்கையும் ஷரீயாவுக்கு மாற்றமானது என்பதால் எந்தவொரு மஸ்ஜித் சம்மேளனமும் முஸ்லிம் விவாக சட்டத்தில் எத்தகைய திருத்தத்துக்கும் துணை போக கூடாது என்பதை உலமா கட்சி வலியுறுத்துகிறது.
Post a Comment