சிலர் சொல்லக்கேட்டுள்ளோம் 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஹலால் உணவு இருக்க வேண்டும் என்பது சர்வதேச சட்டம் என்று. இது யாரோ சிலரால் கட்டிவிடப்பட்ட கதையாகவே தெரிகிறது.
நான் அடிக்கடி சொல்கின்ற விடயம் என்னவென்றால் முஸ்லிம் அல்லாதவர்களைப்பொறுத்த வரை முஸ்லிம்கள் பன்றி இறைச்சியை மட்டும் சாப்பிட மாட்டார்கள். அது மட்டும்தான் அவர்களுக்கு ஹராம். மற்ற அனைத்தும் அவர்களுக்கு ஹலால் என.
இதற்கு காரணம் பல அந்நிய ஹோட்டல்களுக்கு நம்மவர் சாப்பிட சென்றால் பன்றி இறைச்சி இருந்தால் அதனை தொட மாட்டார்கள். ஏனையவற்றை அவை பிஸ்மி சொல்லி அறுக்கப்பட்டதா? கழுத்து நெரித்து கொல்லப்பட்டதா என்பவை பற்றி விசாரிக்காமல் விழுங்கி விட்டு போவதை அவதானித்ததன் காரணமாகவே முஸ்லிம் அல்லாதோர் இவ்வாறு நினைக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் ஒரு சாப்பாட்டு பொருளில் ஹலால் என்ற ஸ்டிக்கரை ஒட்டிவிட்டால் அது உண்மையா பொய்யா என்றெல்லாம் ஆராயாமல் சாப்பிட்டு விட்டு செல்வார்கள் என்பதையும் அவர்கள் கவனித்ததன் காரணமாக பன்றி இறைச்சியிலும் ஹலால் முத்திரையை பதித்துள்ளார்கள்.
கண்டியில் ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் இந்த வகையிலேயே பன்றி இறைச்சிக்கு ஹலால் என்ற முத்திரை பதித்துள்ளார்கள்.
இது தவறுதலாக ஏற்பட்டது என்ற அந்த ஹோட்டல் நிர்வாகத்தின் கருத்தை ஏற்பவன் உலக மகா முட்டாளாகத்தான் இருக்கும். ஏனென்றல் 5 ஸ்டார் ஹோட்டலில் சாதாரண மக்களை, படிக்காதவர்களை தொழிலுக்கு அமர்த்தமாட்டார்கள். படித்தவர்களையே, பெரும்பாலும் ட்டை கோட் போடக்கூடியவர்களையே பணிக்கு அமர்த்துவார்கள். அந்த படித்தவர்களே பன்றி இறைச்சியில் ஹலால் முத்திரை ஒட்டினாலும் ஹராம் என்பதை அறியாதவர்கள் என்றால் கே எப் சி போன்ற ஹோட்டல்கள் பற்றி சொல்லத்தேவையில்லை.
அதே போல் சில பணக்கார முஸ்லிம்கள் இத்தகைய ஸ்டார் ஹோட்டல்களில் தமது கல்யாணம் போன்ற விழாக்களை எடுக்கிறார்கள். அங்கு விநியோகிக்கப்படும் உணவுகளை ஹலாலா என்ற விசாரணை இன்றி சாப்பிடுவதையும் ஹலால் என ஸ்டிக்கர் ஒட்டிய பன்றி இறைச்சியையும் சாப்பிடுவதை கவனித்த பின்பே இவ்வாறு செய்துள்ளனர் என்பதை விளங்க முடிகிறது.
ஆகவே முஸ்லிம்கள் தமது பணத்தை கொடுத்து ஹராத்தை சாப்பிட முடியாது. அத்துடன் இப்பிரச்சினைக்கு தீர்வாக ஒவ்வொரு 5 ஸ்டார் ஹோட்டலிலும் 30 வயதுக்கு மேற்பட்ட மௌலவிமாரை உலமா கட்சியின் உறுதிப்படுத்தலின் கீழ் "ஹலால் உணவு பரிசோதகர்" என்ற வகையில் நியமிக்கப்பட வேண்டும். அந்த மௌலவி கோட்டு சூட்டு போடாதவராக, முஸ்லிம்களின் கலாசார ஆடை அணிந்தவராகவும் தினமும் அங்கு கடமை புரிபவராகவும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலமா கட்சி முன் வைக்கிறது. இவ்வாறு உலமாக்கள் நியமனம் பெறாத எந்த ஹோட்டல்களிலும் முஸ்லிம்கள் சாப்பிடுவது, விழாக்களை எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். அங்கு கோழி இறைச்சி ஹலாலாக சமைக்கப்பட்டாலும் பன்றி இறைச்சிக்கு பாவித்த கரண்டியே கோழிக்கும் பாவிக்கப்படும் என்பதையும் நாம் மறந்து விட முடியாது. அவற்றைக்கூட மௌலவிமார் உறுதிப்படுத்தும் நிலை தேவைப்படும்.
ஆகவே இது பற்றி ஸ்டார் தர ஹோட்டல்கள் எம்மோடு தொடர்பு கொண்டால் இவற்றுக்கான தீர்வுக்கு உதவ முடியும் என்பதை உலமா கட்சி சொல்லிக்கொள்கிறது.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி (கபூரி, நத்வி, மதனி)
B.A. in Journalism
உலமா கட்சி
Post a Comment