ஒலுவில் துறைமுகத்தை மூட வேண்டும் என பிரதி அமைச்சர் பைசல் காசிம் சொல்லும் போது அவரது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் சமரசிங்கவை ஒலுவிலுக்கு அழைத்து வந்து அத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வோம் என கூறுவது கட்சிக்குள் ஏட்டிக்கு போட்டியை காட்டுவதுடன் முஸ்லிம் காங்கிரசின் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் அபிலாசையை புறந்தள்ளும் செயலாகவும் உள்ளதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
ஒலுவில் பற்றி ஆராயும் கட்சி உயர் சபை கூடத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒலுவில் துறைமுகம் என்பது ஒரு அரைகுறை பிரசவம் என்பதால் அதன் மூலம் முழு அம்பாரை மாவட்ட கரையோரமும் பாதிக்கப்பட்டு வருவதால் அத்துறைமுகத்தை மூடி வெறுமனே மீன் பிடி துறைமுகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலில் உலமா கட்சியே முன் வைத்தது.
அத்துடன் அத்துறைமுகத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நஷ்ட ஈடு வழங்கப்படாதிருந்த போது இது பற்றி அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு உலமா கட்சி கொண்டு வந்ததன் பலனாக கணிசமானோருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
தற்போது அத்துறைமுகம் காரணமாக முழு ஒலுவிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு பாலமுனை, நிந்தவூர் என பல ஊர்களும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
இத்துறைமுகம் அமைவதால் பாதிப்பே அதிகம் என தலைவர் அஷ்ரப் காலத்திலேயே எம்மைப்போன்ற சிலர் கூறிய போது எம்மை சமூகம் எதிரிகளாக பார்த்தது. இருந்தும் அன்று நாம் சொன்னவை இன்று உண்மையாகிக்கொண்டிருக்கிறது.
மேற்படி துறைமுகத்தில் சேரும் மண்ணை அள்ளுவதன் மூலம் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது. அவ்வாறு மண்ணை அள்ளும்போது அது ஏனைய ஊர்களின் கரையோரங்களை பாதிக்கும். அம்பாரை மாவட்ட கரையோர ஊர்களின் கடலில் இருந்து பிரதான வீதி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமே உள்ளன. கடலில் உள்ள மண் கரைக்கு அள்ளுப்பட்டு துறைமுகம் வரும் போது அவற்றை அள்ளுவதால் இந்த ஊர்கள் கடலுக்கு இரையாகலாம். தற்போது கூட இதன் பாதிப்பு தெரிகிறது.
ஆகவே ஒலுவில் துறைமுகத்தை மூடி விட்டு அதனை சிறிய மீன் வாடியாக மட்டும் மாற்றுவதே பொருத்தமான செயலாக இருக்கும். இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி எடுக்காமல் ஒலுவில் மண் அள்ளுதல் போன்ற சில கொந்தராத்துகளின் மூலம் ஒரு சிலர் சம்பாதிப்பதற்காகவும் அதன் கமிசனை அமைச்சர்கள் அனுபவிப்பதற்காகவும் மேலும் மேலும் கரையோர பிரதேசங்களை கடலுக்கு பலிகொடுக்கும் துரோகத்தை அக்கட்சியினர் செய்கின்றனர்.
எனவே எமது இக்கோரிக்கைக்கு ஊக்கம் தரும் வகையில் முழு கல்முனை கரையோர மாவட்ட முஸ்லிம்களும் விழித்தெழ வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
Post a Comment