ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? காலம்சொல்லவுள்ள பதில்?-சுஐப் எம்.காசிம்-

பாதுகாப்பான வாழ்க்கை,போதுமென்ற பொருளாதாரம்,பரபரப்பில்லாத சூழல் இவற்றுக்காகவே இன்றைய மனிதன் ஏங்கித்தவிக்கிறான்.ஒரு மனிதனின் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்துவதில் இவற்றின் பங்குகளும் கணிசமானவை. இம்மூன்றையும் எதிர்பார்த்தே 2015 இல் எமது நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், மாற்றம் ஏற்பட்டு இம்மூன்று வருடங்களிலும் எதிர்பார்த்த எதுவும் நடந்ததில்லை.நாளாந்தம் அதிகரிக்கும் பாதாளக்கோஷ்டிப் படுகொலைகள்,ஒரு நாள் தவறாமல் அதிகரிக்கும் விலையேற்றங்கள்,அடுத்த நாள் எது நடக்குமோ என்ற பரபரப்புக்கள் என்பன எல்லோரையும் ஏமாற்றிவிட்டன.
மக்களிடமிருந்த பெரும்நம்பிக்கை, எதிர்பார்ப்புக்கள் வீண்போய் செய்த தவறுகளுக்காக தங்களது நகங்களை தாங்களாகவே கடித்துக் கொள்கின்றனர். மாற்றுவழிக்காக ஏங்கும் மக்கள் மீண்டும் மஹிந்தவை நாடினால் நிலைமை என்ன? அரசியல்வாதி முதல், பாட்டாளி வரை இந்தக்கேள்வி படுத்தும்பாடுகள், அலரிமாளிகை முதல் அடுப்பங்கரை வரை அமர்க்களமாகியுள்ளன.இது "கொழம்பட்ட ஜனபலய" ஏற்படுத்தியுள்ள பிரமையா? அல்லது அதிகாரத்தைஇழக்கப்போகும் அச்சத்தில் உள்ளோருக்குள்ள பீதியா? இதற்கான பதில்கள் மக்களின் நாடி பிடித்தறியும் தேர்தல்களிலே வெளிப்படும்.இப்போதைக்கு இந்தத்தேர்தலை நடத்தும் தகுதி அரசாங்கத்துக்கு இல்லை.
சிங்களத்தை விழிப்பூட்டிய மஹிந்தவும், வடக்கில் விழிப்பூட்டப்படும் சுயாட்சி,சமஷ்டிக் கோஷங்களும்,காணாமல்போனோர் உறவினரின்கதறல்களும்,வில்பத்து விசாரணை அறிக்கையை மூடி மறைத்துள்ளதால் புலம்பித்திரியும் முஸ்லிம்களும் எடுக்கவுள்ள தீர்மானங்கள், சில நேரம் நாட்டின் அரசியலைதலைகீழாகப்புரட்டும் களநிலவரங்களையும் ஏற்படுத்தலாம்.
நாட்டின் அரசியல், இராணுவ பௌதீக வளங்களில் குறியாகவுள்ள வெளிநாட்டு சக்திகள், இம்மக்களின் தீர்மானங்களில் தலையிடுவது அல்லது இலங்கையின் அரசியலுக்கு எதிராக சிறுபான்மையினரை கிளர்ந்தெழச் செய்வது எனத் தீர்மானித்தால் யாரை,யார் நொந்துகொள்வது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் வில்பத்து விசாரணை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.அரச தரப்பிலும்,முஸ்லிம்களின் தாயகப் பூமியை ஏப்பமிடத் துடிக்கும் துவேஷத்தரப்பிலும் நியாயம் இருந்திருந்தால் உடனிந்த அறிக்கை வெளியாகியிருக்கும். இது வெளியான கையோடு வடபுல முஸ்லிம்களுக்கும், வடக்குத் தலைமைக்கும் எதிராக பல சாயங்கள் பூச பலருக்கும் வாய்ப்புகள் எழுந்திருக்கும்.இனியென்ன வெறுமையாகக்கிடந்த வாய்க்கு அல்வா கிடைத்த கதைகளாக, சட்டவிரோத அராபியக் குடியேற்றம், அல்கைதா பயிற்சி முகாம், அடிப்படைவாதப் பள்ளிக்கூடங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையை இஸ்லாமிய நாடாக்கும் இரகசியத் திட்டவரைபுகளையும் கண்டெடுத்ததாகவும் கட்டுக் கதைகள் கட்டவிழ்க்கப்படும். மாறாக வில்பத்து அறிக்கை முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்ததாலா அரசு இதுவரைக்கும் மௌனம் காக்கின்றது.
இவ்வறிக்கை சாதகமாக இருந்தால் 30 வருட அவலமான அகதி வாழ்க்கை,தொழிலின்றி அலையும் அவலம்,திருமண வயதை எட்டியுள்ள பிள்ளைகளுக்கு வீடுகள், காணிகளை வழங்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்,தற்காலிக இடங்களில் குடியேறியதால் பிரதேச,பௌதீக ரீதியாக எதிர்கொள்ளும் சவால்கள்,பூர்வீக இடங்களில் குடிபுகும் கனவோடு வாழும் ஏழைகளின் வாழ்க்கை இத்தனைக்கும் விடிவு பிறந்திருக்கும். இந்த அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்த அரசு தவறியது ஏன்? யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய மீலாத் விழாவுக்கு தலைமை தாங்குவதில் ஜனாதிபதி பங்குகொள்ளாதது ஏன்? ஆட்சி மாற்றத்துக்கு வழி ஏற்படுத்திய மற்றொரு சிறுபான்மை சமூகத்தின் மதரீதியான விழா, பொருட்படுத்தாமல் விடுமளவுக்கு ஒரு சிறிய விழாவில்லை. நாட்டில் மூன்றாவது இனமாக இருந்தாலும் உலகில் அதிகளவானோர் பின்பற்றும் இரண்டாவது மார்க்கம் இஸ்லாம். இவ்வளவு முக்கியமான விழாவில் ஜனாதிபதியைப் பங்கேற்க வைத்து, தங்களது நம்பிக்கை நாயகனாக சர்வதேசத்திற்கு காட்டவே முஸ்லிம்கள் அழைப்பு விடுத்திருக்கலாம்.
முஸ்லிம்களின் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஜனாதிபதி ஏமாற்றியதால்வடபுல முஸ்லிம்களின் மனநிலைகளிலும் தளம்பல்கள் ஏற்பட்டுள்ளன.இக்களத்தின் மறுபார்வையில் மஹிந்தவின் இந்திய விஜயம் குறிப்பாக, வடபுலத் தமிழர்களை மீண்டும் இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்துள்ளது.இத்தனை வருடப் போராட்டத்தில் எதையும் பெற்றுத்தராத தமிழ் தலைமைகளை நம்புவதை விட, இந்தியாவை நேரடியாக நெருங்குவது பயனுள்ளதாயிருக்கும். இந்தச் சிந்தனைக்குள் வடக்குத்தமிழர்கள் சலவை செய்யப்படுகின்றனர்.வடக்கில்புதிதாகத் தோன்றவுள்ள கடும்போக்குத் தலைமையும் இப்புதிய சிந்தனையில்தான் தமிழர்களைப் புடம் போடுகின்றது.காணாமல் போனோரின் அலுவலகப்பரிந்துரைகளை நிறைவேற்றினால் இராணுவத்தினரின் எதிர்ப்பு, தென்னிலங்கையின் கொந்தளிப்புக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் ஜனாதிபதி மைத்திரிக்கு இருந்தாலும் பிரதமருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மேலைத்தேய நாடுகளின் நண்பரான ரணிலுக்கு, தமிழர்களை எப்படியும்வளைத்துப் பிடிக்கலாம் என்பதில் அளவுமீறிய நம்பிக்கை.இந்த நம்பிக்கையில் இந்தியாவை தூரமாக்கிய ரணிலின் இடைவெளியை பயன்படுத்திய மஹிந்த, இந்தியாவின் அன்பைப் பெறுவதே இன்றுள்ள இலகுவான வழி எனக் கணித்தே,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இந்தியாவுக்குப் பறந்தார்.
எந்தத் தீர்வானாலும் பெரும்பான்மை பௌத்தர்களின் ஆதரவின்றி எதையும் சாதிக்க முடியாதென்பது நாட்டில் நிரூபிக்கப்பட்ட வரலாறு.

Comments

popular posts

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்கள் போராட்டம்

Allocation of Varnam Tv Ramazan Ifthar programme not suitable - Al Haj M.B.Hussain Farook

සායින්දමරුදු ජනතාව පෙරමුණට සහයෝගය ලබාදීමට ඉදිරිපත්විය යුතුය