ஆண்மையுள்ள சிங்கத்தின் வீரமிகு கர்ஜனை

-எஸ். ஹமீத்

(அல்லாஹ்வின் மீது ஆணையாக….இன்றுவரை அமைச்சர் ரிசாத்திடமிருந்து அல்லது அவர் சார்ந்தவர்களிடமிருந்து ஒரு கொந்தராத்து அல்லது  ஒரு சதமேனும் இலவசமாகவோ, இனாமாகவோ, எதற்குமான கூலியாகவோ  பெற்றிராதவன் நான். இனிமேலும் பெறுகின்ற எண்ணமும் இல்லாதவன். நமதிந்த எழுத்துக்கள் சமூகத்திற்கான நன்மை கருதியே அன்றி, எவ்வித சுய இலாபங்களுக்கானதும் அல்ல.-கட்டுரையாளர்.)

நேற்றைய தினம் கேகாலை மாவட்டத்தில் வைத்து ஓர் அரியேறு உரத்த குரலில் கர்ஜனை செய்திருக்கிறது. முஸ்லிம் சமூகத்தை அடக்கியாள என்னும் ஆட்சியாளர்களுக்குப் பெரும் தொனியில் சவாலும் எச்சரிக்கையும் அந்தக் கர்ஜனை மூலம் விடுக்கப்பட்டிருக்கிறது. 'இனியும் நாங்கள் ஏமாறுவதற்குத் தயாரில்லை' என்ற தெளிவான செய்தியொன்று, இனவாத சிந்தனைகளோடு இயங்குகிறார்களோ என்ற சந்தேகத்திற்குரிய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மிக விருப்பத்திற்குரிய செல்லப்பிள்ளையாக இருந்தவர் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசாத் பதியுதீன். முன்னாள் ஜனாதிபதியின் உடன்பிறந்த தம்பி பசில் ராஜபக்ஷவின் உற்ற தோழனாகவும் திகழ்ந்தவர். மற்றும் அன்றைய அமைச்சரவையில் அங்கம் வகித்த ஏராளமான சிரேஷ்ட அமைச்சர்களின் நட்புக்கும் மதிப்புக்குமுரியவராகவும் வலம் வந்தவர் அவர்.

அன்றைய  அரசாங்கத்தின் பின்னைய காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள நேர்ந்த துன்பமான நிகழ்வுகளினால், தனது சொந்த நலன்கள்-தன்னுடைய சுய விருப்பங்கள்-தனது எதிர்கால அரசியல் இருப்பு என அத்தனையையும் உதறித் தள்ளிவிட்டு, 'நான் தோற்கலாம்; எனது சமூகம் தோற்றுவிடக் கூடாது' என்ற பரிசுத்தமான எண்ணத்துடன் வெளியேறியவர் ரிசாத் பதியுதீன். அவரின் வெளியேற்றத்தின் பின்னர்தான் மற்றும் சில முஸ்லிம் பெயர் தாங்கித் தலைவர்கள் ஏதோ ஒரு பயத்தில் தபால் வாக்களிப்பும் முடிந்த பிற்பாடு வெளியேறினார்கள்.

ரிசாத் பதியுதீனின் அன்றைய அரசிலிருந்தான வெளியேற்றமும், நல்லாட்சி என அன்று முத்திரை குத்தப்பட்டிருந்த புதிய கூட்டுக் கட்சிக்கான ஆதரவும் முஸ்லிம் சமூகத்திற்குப் பெரும் தெம்பாகவும் சக்தியூட்டுவதாகவும் இருந்தது. நடுநிலை நின்றோரும், மகிந்த அரசாங்கத்தின் மீது கண்மூடித்தனமான பற்றுதல் கொண்டோரும் ரிசாத் பதியுதீன் என்னும் ஆளுமையினால் எழுச்சி பெற்றிருந்த  முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையின் பக்கம் வந்திணைந்தனர். இந்த நிகழ்வுகள் எதிர்காலத்தில் எழுதப்பட வேண்டிய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சரித்திரத்தில் இணைக்கப்பட வேண்டியவை.

ஆனாலும், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த இந்த மூன்று வருடங்களில் முஸ்லிம் சமூகத்தின் எந்தவொரு நியாயமான எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படவில்லை. எந்தவொரு துன்பமும் முற்றாகத் துடைக்கப்படவில்லை. நமது சமூகத்தின் எந்தவொரு பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வுகள் எட்டப்படவில்லை.

இந்த நிலையில்தான் மனது பொறுக்காமல் கேகாலைக் கூட்டத்தில் பொங்கியெழுந்திருக்கிறார் ரிசாத். சமூகத்தைச் சமாளிப்பதற்கான வெறும் வெற்று வார்த்தைகளாக அல்லாமல், தனது உள்ளத்திலிருந்து உணர்ச்சி பீறிட உரையாற்றியிருக்கிறார். அரசாங்கத்திற்கான எச்சரிக்கையைப் பயமின்றித் தான் விடுப்பதாக மிக்க ஆக்ரோஷத்தோடு தெரிவித்திருக்கிறார் ரிசாத்.

முப்பதுக்கு மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த அமைச்சைத் தன்னகத்தே வைத்திருக்கும் அமைச்சர் ரிசாத் தனது பேச்சினால், சிலவேளைகளில், தனது அமைச்சுப் பதவிக்குக் கூட ஆபத்து வரலாமென்பதை அறியாதவரல்ல. மேலும், அவரது பேச்சைத் திரித்து அரசாங்கத்திடம் 'போட்டுக் கொடுக்கும் பொறுப்பற்ற பொறுக்கிகளும்' இருக்கிறார்கள் என்பதையும் அவர் உணராதவர் அல்ல. ஆனாலும் இவையெவற்றைப் பற்றியும் கணக்கெடுக்காது, தான் சார்ந்த சமூகத்தின் வேதனைகளையும் விம்மல்களையும் அரசாங்கத்திற்கு மிக்க தைரியத்தோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் தலைவர் ரிசாத்.


இன்றைய இனவாதம் தலைவிரித்தாடும் காலகட்டத்தில் இப்படியான வீரமிக்க, அர்ப்பணிப்பு மிக்க, ஆண்மையும் ஆளுமையும் நிறைந்த தலைமைதான் நமது நலிந்து கிடக்கும் சமூகத்திற்கு அவசியமானதென்பதைப் புரிந்து கொள்வோம்! கட்சி அரசியலுக்கப்பால் அவரது பேச்சில் பொதிந்துள்ளவற்றை சமூகக் கண்ணோட்டத்துடன் நோக்கி, நமது ஆதரவையும் அவருக்கு  வழங்குவோம்! 

Comments

popular posts

எட்டியாந்தோட்டை சம்பவம்; மஹிந்த அதிரடி உத்தரவு!

காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது

மொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.