முஸ்லிம் 'லேபலுடன் அரசியல் செய்வதன் காரணமாக நல்லிணக்கம் உருவாகுமா?


-ஷம்ஸ் பாஹிம்-

கேள்வி: திகன சம்பவம் நடந்து சில தினங்களில் ஆரம்பமான ஜெனீவா மாநாட்டில் நீங்களும் உள்ளடக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கவே நீங்கள் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது பற்றி?
பதில்: கடந்த காலத்தில் லக்‌ஷ்மன் கதிர்காமரைப் போன்று நானும் ஜெனீவா சென்று முஸ்லிம்களை காட்டிக் கொடுத்ததாக குற்றச் சாட்டுக்கள் என்மீது சுமத்தப்படுவதை அறிவேன்.
நான் ஒருபோதும் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்ததும் இல்லை. காட்டிக் கொடுக்கவும் மாட்டேன்.
கடந்த மஹிந்த ஆட்சியில் பதவியை துச்சமாக மதித்து முஸ்லிம் சமூகத்திற்காக அரசில் இருந்து நான் வெளியேறியது பலருக்கும் மறந்து விட்டது.
அரசாங்கம் இனவாதிகளுடன் தொடர்ந்து செயற்பட்டால் அரசில் இருந்து வெளியேறுவேன் என பகிரங்கமாக அறிவித்து ஒரு மாதத்தில் அதே போன்று வெளியேறியவன் நான். ஏனையவர்கள் வேறு காரணங்களுக்காக வெளியேறினார்கள்.
எனது அரசியலில் நான் முஸ்லிம், சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து செல்ல வேண்டும் என நிலைப்பாட்டுடன் செயற்படுகிறேன்.முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினை ஏற்பட்ட சமயங்களில் எல்லாம் நான் அவர்களுக்காக குரல் கொடுக்க ஒருபோதும் அஞ்சியதில்லை.
நாம் எந்த கட்சியில் இருந்தாலும் எமது சமூகத்திற்காக குரல் கொடுக்க தவறினால் அது அல்லாஹ்வுக்கு தவறு செய்வதாகவே அமையும். நான் அரசியல்வாதி என்பதை விட முஸ்லிம் என்பதே பிரதானமானது. அரசியலுக்காக எனது சமூகத்தை காட்டிக் கொடுக்க மாட்டேன்.
நான் இலங்கை தூதுக்குழுவில் அங்கம் வகித்ததை வைத்து முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கச் சென்றதாக குற்றஞ்சாட்டுவது எந்த அடிப்படையும் அற்றது.
கேள்வி: அவ்வாறானால் பைசர் முஸ்தபா ஏன் ஜெனீவா சென்றார்?
பதில்: ஜெனீவாவில் முஸ்லிம் விவகாரம் கட்டாயம் பேசப்படும் என்பதை நாம் அறிந்திருந்தோம். இலங்கை அரசாங்கம் இந்த சம்பவத்துடன் தொடர்புள்ள சகலருக்கு எதிராகவும் சட்டத்தை அமுல்படுத்துவதாக வாக்களித்துள்ளது. பொலிசுக்கோ சட்டத்தை நிறைவேற்றும் பாதுகாப்பு துறைகளுக்கோ இந்த சம்பவத்துடன் தொடர்போ அல்லது சட்டத்தை செயற்படுத்துவதில் தவறோ இருந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது.
இது முஸ்லிம் தொடர்பான பிரச்சினையல்ல. சட்டத்தை முறையாக செயற்படுத்தாததால் ஏற்பட்ட பிரச்சினையாகும்.
நான் அரசாங்க பிரதிநிதியாக ஜெனீவா மாநாட்டில் பங்கேற்றேன். சட்டத்தை முறையாக செயற்படுத்த தவறியவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதாக இலங்கை சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்தது. இது முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும். தேசிய ரீதியில் அரசாங்கம் அளித்த வாக்குறுதியை சர்வதேச வாக்குறுதியாக மாற்றியுள்ளோம்.
கேள்வி: திகன சம்பவம் தொடர்பில் பல அமைப்புகள் ஜெனீவாவில் முறையிட்டிருந்தன. இதனை எவ்வாறு அரசாங்கம் முகங்கொடுத்தது?
பதில்: இவ்வாறான அமைப்புகள் முஸ்லிம் விவகாரம் தொடர்பில் குற்றஞ்சுமத்த முன்னரே நாம் உரிய பதிலை வழங்கி விட்டோம். இந்த விவகாரம் தொடர்பாக சில நாட்டு பிரதிநிதிகளும் எம்முடன் பேசியிருந்தனர். அவற்றுக்கும் பதில் வழங்கினோம். முஸ்லிம் விவகாரம் தொடர்பாக தனியான கூட்டம் நடந்தது. எமது தூதுவர் ஏற்பாடுசெய்த விருந்தில் கலந்து கொண்ட தூதுவர்களுக்கு விளக்கமளித்தோம். சந்தேகங்களுக்கு பதில் வழங்கினோம். இது முஸ்லிங்கள் தொடர்பான பிர்ச்சினையல்ல. சட்டத்தை செயற்படுத்துவதில் உள்ள குறைபாடே இதற்கு காரணம் என்பதை அங்கும் எடுத்துரைத்தோம்.
கேள்வி: ஜெனீவாவில் இலங்கை குழுவுக்கு முஸ்லிம் விவகாரம் சவாலாக அமையவில்லையா?
பதில்: ஜெனீவாவில் எந்த அமைப்பிற்கும் வந்து கருத்து கூற முடியும். அதன் படி சில தரப்பினர் வந்து கருத்து முன்வைத்திருந்தனர்.இது சவாலாக அமையவில்லை.எனது சமூகத்திற்காக தான் நானும் அங்கு குரல் கொடுத்தேன்.

கேள்வி: முஸ்லிம்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதியை இலங்கை நிறைவேற்றுமா?
பதில்: அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க ​வேண்டும். அதற்காக நாம் அழுத்தம் கொடுப்போம்.
அம்பாறை மற்றும் கண்டி சம்பவங்களில் முஸ்லிம் சமூகத்தின் உயிருக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. 4 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது. நாம் அரசில் இருந்தவாறு அவர்களின் இழந்த சொத்துக்களை மீள வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இது தொடர்பில் அரசாங்கத்திற்கு அ ழுத்தம் கொடுத்து வருகிறோம்.
கேள்வி: முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கு எத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
பதில்: எனது உயிரை துச்சமாக மதித்து அளுத்கம, கிரேண்ட்பாஸ், கிந்தொட்ட போன்ற இடங்களுக்கு ஏனைய அரசியல்வாதிகளோ பாதுகாப்பு தரப்பினரோ செல்வதற்கு முன்னர் சென்று எனது சமூகத்தின் பாதுகாப்பிற்காக பங்களித்திருக்கிறேன். அதனை முஸ்லிம்களும் ஏற்பர். ஒருவர் சமூக துரோகியா இல்லையா என்பதை பேச்சை வைத்தன்றி செயலை வைத்தே முடிவு செய்கின்றனர்.
கேள்வி: கடந்த அரசிற்கு இனவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதால் அந்த அரசில் இருந்து விலகினீர்கள். இந்த ஆட்சியிலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறதே?
பதில்: இந்த ஆட்சியிலும் எனது சமூகத்திற்கு உரிய பாதுகாப்பு இல்லாவிட்டால் இதில் இருந்தும் விலகத் தயங்க மாட்டேன். ஆனால் அரசாங்கம் இந்த சம்பவம் தொடர்பில் தனது பொறுப்பை சரிவர நிறைவேற்றும் என நம்புகிறேன். அரசாங்கம் என்ற ரீதியில் தனது பொறுப்பை நிறைவேற்ற தவறினால் அது தொடர்பில் முடிவு எடுக்க நேரிடும்.
திகன சம்பவத்தின் போதே பொலிஸார் நடந்த விதம் தொடர்பில் பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கும் அறிவித்துள்ளேன். எனது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால் அரசியலில் இருப்பதில் பயனில்லை.

கேள்வி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதையும் குரல் கொடுப்பதையும் கூட சில தரப்பினர் இனவாதமாக பார்ப்பது பற்றி ?
பதில்: நாம் தேசிய கட்சிகளில் இருக்க வேண்டும். சிறு கட்சிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு வரையறுக்கப்ட்டவை. நாம் தேசிய கட்சிகளில் இருந்து கொண்டு முஸ்லிங்களின் பிரச்சினைகளை தீர்த்தால் அவை இனவாத கோணத்தில் பார்க்கப்படாது.
எமது குடும்பத்திற்கு அஸ்கிரிய மல்வத்தை மகாசங்கத்தினருடன் நீண்ட கால உறவு இருக்கிறது. அந்த உறவை பயன்படுத்தி அவர்களை சந்தித்து நிலைமையை விலக்கினேன்.
மீரா மக்காம் பள்ளி கூட தலதா மாளிகை காணியில் தான் கட்டப்பட்டுள்ளது.
மன்னர் ஆட்சிக்காலத்தில் எமது சமூகத்திற்கு பாதுகாப்பு கிடைத்தது. மரக்கலே என்ற பெயர் கூட சிங்கள மன்னரின் உயிரை முஸ்லிம் பெண் ஒருவர் காத்ததால் தான் கிடைத்தது.
சிங்கள இளைஞர் இறந்த கிராமத்து விகாராதிபதிதான் அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கினார். அவர் தேர்தல் காலத்தில் எனக்கு உதவியவர். என்னுடன் இருந்த தொடர்பு காரணமாக முஸ்லிம் கிராமத்தை காக்கும் பொறுப்பு தனக்கு இருந்ததாக விகாராதிபதி என்னிடம் கூறியிருந்தார்.
சிங்கள மக்களின் மனங்களை வெல்ல முஸ்லிம் அரசியல்வாதிகளால் முடிந்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம்.முஸ்லிம் 'லேபலுடன் அரசியல் செய்வதன் காரணமாக நல்லிணக்கம் உருவாகுமா விரிசல் ஏற்படுமா என்பது குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டும்.
கேள்வி: சிறுபான்மை கட்சிகள் தேவை இல்லை என்கிறீர்களா?
பதில்: வடக்கு கிழக்கில் மாத்திரம் அவ்வாறான கட்சிகள் இருந்தால் போதும். வடக்கு கிழக்கில் தேசிய கட்சிகள் முறையாக செயற்படாததால் தான் சிறுபான்மை கட்சிகள் உருவாகின.
கேள்வி: இந்த பிரச்சினைக்கு யார் பொறுப்பு கூற வேண்டும்?
பதில்: சட்டத்தை உரிய நேரத்தில் உரியவாறு செயற்படுத்தாததால் வந்தது தான் இந்தப் பிரச்சினை. இதற்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். அரசிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் பொறுப்பு கூறியாக வேண்டும்.
அந்த பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்