முஸ்லிம்களின் அடிப்படை இருப்பையே துவம்சம்செய்யத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு பிரிவினருக்கு விட்டுக்கொடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?


கல்முனை மாநகரசபைக்கு இரு தமிழ் உறுப்பினர் நியமனம்
=================================

வை எல் எஸ் ஹமீட்

கிழக்கு மாகாணத்தில் ஓர் வித்தியாசமான சூழ்நிலையில் கல்முனை மாநகரசபைத் தேர்தல் இடம்பெற்றது. ஒரு புறம் சுயேச்சைக்குழு, மறுபுறம் தமிழ்த்தரப்பு. இரண்டிற்கும் இடையில் எஞ்சிய ஆசனங்கள் ஏதோ ஒரு கட்சியின் பக்கம் செல்லவேண்டிய கட்டாயத்தேவை. இந்நிலையில் கட்சிகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கப்பால் கல்முனை மக்கள் ஒன்றுபட்டார்கள்; என்பது வரலாற்றில்  பதியப்பட வேண்டியதாகும்.

கல்முனையில் பள்ளிவாசல் தலைமையிலான சுயேச்சைக்குழு இருக்கவில்லை. கட்சிகள் போட்டியிடுவதோ, பிரச்சாரம் செய்வதோ தடுக்கப்படவில்லை. அனைத்து ஜனநாயக சுதந்திரங்களுக்கும் இடமளிக்கப்பட்டு, மக்களைக்கூறுபோட வேண்டிய அளவு பிரச்சா
ரம் செய்ய இடமளிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

மாஷாஅல்லாஹ், இத்தனைக்குமத்தியிலும் கல்முனை மக்கள் ஒரு அரசியல் கட்சியின்பால் ஒன்றுபட்டது பலமுனை சதிகளுக்கு மத்தியிலிருந்து கல்முனையைப் பாதுகாப்பதற்காகும். ஒவ்வொருவாக்கையும் மிகவும் கவனமாக அளித்தார்கள். தலைவரின் மறைவுக்குப்பின் தொடர்ச்சியாக அண்ணளவாக நாற்பது, நாற்பத்து ஐந்து வீதமான வாக்குகள் பிரதான முஸ்லிம்கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் அளிக்கப்பட்ட சுமார் பத்தாயிரம் வாக்குகளில் 4300 வாக்குகளைப் பெற்றிருந்தோம். ஆனால் கடந்த மாநகரசபைத் தேர்தலில் அளிக்கப்பட்ட சுமார் 13000 வாக்குகளில் சுமார் 3000 வாக்குகள்  மாற்றுக்கட்சிகளுக்குச்செல்ல கிட்டத்தட்ட 10000 வாக்குகள் பிரதான கட்சிக்கு கிடைத்தது.

அருகே அவ்வளவு பலமான சுயேச்சைக்கு எதிராக 2000 இற்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இத்தனை எதிர்மறைக் காரணிகளுக்கு மத்தியிலும் சுமார் 3000 வாக்குகள் மாத்திரமே பிரிந்தன என்பதும் ஏனைய வாக்குகள் ஒரு பொது சுயேச்சைக்குழுவே இல்லாத நிலையில் ஒரு கட்சியை நோக்கித் திரும்பியது; என்பதும் கல்முனையின் இக்கட்டான சூழ்நிலையில் கல்முனை மக்களின் தவிப்பைப் பறைசாற்றியது.

அதாவது, அருகே சுயேச்சைக்குப் பின்னால் ஒற்றுமைப்பட்டது ஒன்றை அடைந்துகொள்வதற்காக. கல்முனையில் விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் ஒரு கட்சியின் பின்னால் ஒன்றுபட்டது; இருப்பதை இழந்துவிடக்கூடாது; என்பதற்காக.

துரதிஷ்ட வசமாக அடுத்த ஊர்களிலும் அவ்வாறான ஒற்றுமை ஏற்படாததன் காரணமாக, இன்று கல்முனை மாநகரசபையின் எதிர்காலம் பாரிய கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. கல்முனை நான்காகப் பிரிக்கப்பட வேண்டும்; என்பதை இத்தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சிசபை வழங்கிவிட்டு ஏனையவர்கள் ஒற்றுமைப்பட்டு ஆட்சியமைத்துக் கொள்ளுங்கள். சாய்ந்தமருது பிரிந்தாலும் முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை இருக்கின்றது; என்ற வாதம் அர்த்தமற்றதாகி இருக்கின்றது.

கல்முனை மாநகரசபை பல ஊர்களை உள்ளடக்கியது. சாய்ந்தமருது கல்முனையைப்பற்றி கவலையில்லை; எங்களைப்பற்றி மாத்திரமே கவலைப்படுவோம்; என நினைக்கும்போது அடுத்த ஊர்கள் மாத்திரம் கல்முனையைப்பற்றி கவலைப்பட வேண்டுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த ஊர்கள் எல்லாம் ஒரே கட்சியின்கீழ் அல்லது ஒரே அணியின்கீழ் ஒன்றுபடுவார்கள்; என்றும் எதிர்பார்க்க முடியாது. கல்முனை மாத்திரம்தான் கவலைப்பட்டு ஒற்றுமைப்படுவதை எதிர்பார்க்க முடியும்; என்பதைத்தான் கடந்த தேர்தல் நிரூபித்தது.

சாய்ந்தமருதை விடுத்தாலும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மைதான். ஆனால் ஆட்சியமைத்தல் என்று வரும்போது முஸ்லிம்களின் ஒற்றுமையென்பது கல்முனையில் யதார்த்தத்தில் கட்சிகளின் ஒற்றுமையாகும். கட்சிகளின் ஒற்றுமையென்பது அவர்களது தேசிய ரீதியான, அல்லது மாகாணரீதியான, தனிப்பட்ட மற்றும் கட்சி சார்ந்த நலன்களை உள்வாங்கியதாகும். கல்முனையின் நலன் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.

எனவே, கல்முனையின் நலனை கல்முனைதான் சிந்திக்கலாம். கல்முனை சிந்திப்பதற்கு கல்முனைக்கு அன்றைய பட்டினசபையை இன்று மாநகரசபையாக வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை; என்பதைத்தான் இன்றைய சூழல் எடுத்தியம்புகின்றது.

கல்முனையில் ஆட்சியமைக்கப்போவது யார்?
———————————————————
கல்முனையில் ஆட்சியமைக்கப்போவது யார்? யார் யாருடன் கூட்டு? முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணையுமா? அவ்வாறு ஒன்றிணைந்தாலும் எவ்வளவு காலத்திற்கு அந்த ஒற்றுமை? அல்லது கல்முனைக்கு எது நடந்தாலும் பறவாயில்லை; சாய்ந்தமருதுக்கு தனிச்சபை என்ற அடிப்படையில் கூட்டா? அல்லது தமிழ்த்தரப்புடன் கூட்டா? அவர்களது நிபந்தனைகளுக்கு உடன்பாடா? கடற்கரைப்பள்ளி வீதியால் கல்முனை பிரிவதற்கு உடன்பாடா? எதுவும் தெரியாத ஒரு சூன்ய நிலையில் கல்முனை இன்று இருக்கின்றது. ஏன் இந்த நிலை.

சாய்ந்தமருதில் ஒரு புதிய அடைவுக்கான போராட்டத்திற்காக போட்டித்தவிர்ப்புசெய்து விட்டுக்கொடுத்த கட்சிகளுக்கு கல்முனையில் இருப்பதை இழந்துவிடக்கூடாது; என்ற ஆதங்கம், பதபதைப்பு புரியவில்லை. மாநகரசபையின் எஞ்சிய ஊர்களிலெல்லாம் வாக்குகளைக் கூறுபோடுவதில் குறியாக இருந்தார்கள். இந்த கூறுபோடும் விளையாட்டில் கல்முனை 12ம் வட்டாரமும் பலியாகிவிட்டது.

விட்டுக்கொடுப்புச் செய்கிறோம், அடுத்த கட்சிப்பட்டியலில் ஆசனம் தரவேண்டும்; ( சட்டத்தில் இடமில்லாத போதும்) என்று சில  தரப்பு வாதாடியதாம். இன்னுமொன்றை பெற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்தால் அது விட்டுக்கொடுப்பாகாது; மாறாக பண்டமாற்றாகத்தான் இருக்கும். மறுபுறத்தில் ஏதோ பேசுவதற்காவது முன்வருகிறார்கள், அவர்களும் நமது சகோதரர்கள்தான். அவர்களுடன் பேசுவோம். சட்டத்தை புரியவைப்போம். மாற்றீடு சாத்தியமில்லை. சமூகத்திற்காக விட்டுக்கொடுங்கள் என்று சகோதரத்துவமாக பேசுவோம்; என்று முயற்சிக்காமல் பொறுப்பற்றதனமாக நடந்துகொண்டதாம்; அடுத்த தரப்பு. இறுதியில் இழப்பு பாதுப்புக்காக தவிக்கும் கல்முனைக்கு.

12ம் வட்டார எல்லை பிரிப்பு
————————————
உரிய நேரத்தில் செய்ய வேண்டியதை சகல தரப்பினரும் தவறவிட்டுவிட்டு, இப்பொழுது தொடராக பட்டிமன்றம் நடக்கிறது யார் குற்றவாளி என்று. 12ம் வட்டாரம் தவறியதற்கான காரணம் எல்லை பிரிப்பில் விடப்பட்ட தவறு; என்பது சிலரது வாதம்.

எல்லை பிரிப்பு நடந்தபோது ஒரு வாக்குத்தானும் அதிகமாக பெறுகின்ற கட்சிக்கே இரு ஆசனங்களும் என்ற சட்டத்திருத்தம் வந்திருக்கவில்லை. எல்லை பிரிப்பு பிழையென்றால் திருத்தத்திற்கு முன்னுள்ள சட்டப்படி தேர்தல் நடந்திருந்தாலும் நாம் ஆசனத்தை இழந்துதான் இருப்போம் என்று நிறுவவேண்டும். பழையநிலையின்கீழ் தேர்தல் நடந்திருந்தால் கண்டிப்பாக ஒரு ஆசனத்தை நாம் பெற்றிருப்போம். நாம் ஆசனம் இழந்ததற்கு காரணம் புதிய சட்டத்திருத்தம். அதனைத் தடுக்கமுடியாமற்போன இயலாமைக்கு சகல கட்சிகளையும்தான் குற்றம் சாட்டவேண்டும். அதுவேறு விடயம்.

யார் விட்டதவறாயினும் புதிய சட்டம் வந்துவிட்டது . அதன்கீழ்தான் தேர்தல் நடைபெறுகின்றது. இப்பொழுது ஆசனத்தைப் பாதுகாப்பதுதான் சிந்திக்கவேண்டியது. ஆனால் வாக்குகளைக் கூறுபோட்டு ஆசனத்தை இழந்தபின் விக்ரமாதித்தன் தொடரில் வரும் பேசாமடந்தையை பேசவைத்த கதையில் குற்றஞ்சாட்டுவதுபோல் பொருந்தாத குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் பிரயோசனமில்லை.

தமிழ் பெண்கள் பட்டியல் நியமனம்
___________________________________
கல்முனை மாநகரசபைத் தேர்தலில் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகள் 58744: விகிதாசாரப்படி 1469 வாக்குகளுக்கு ஒரு ஆசனம். இரு ஆசனங்களுக்கு 2938. அண்ணளவாக 3000 வாக்குகளாகும். ஐ தே கட்சிக்கு அளிக்கப்பட்ட மொத்த தமிழ்வாக்குகள் 1010. அதாவது ஒரு ஆசனத்திற்கு போதுமான தமிழ்வாக்குகள்கூட அளிக்கப்படாத நிலையில் எவ்வாறு இரு ஆசனங்களை ஐ தே க பட்டியலில் இருந்து தமிழ்த்தரப்பிற்கு வழங்கப்பட முடியும்; என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

இது நியாயமான கேள்வி. வாக்குகளின் விகிதாசாரத்திற்கேற்ப ஒரு சமூகத்தின் ஆசனத்தை இன்னுமொரு சமூகத்திற்கு விட்டுக்கொடுக்க முடியாது. இருந்தாலும் வேறு ஒரு உள்ளூராட்சிசபையாக இருந்தால் நியாயமில்லாதபோதிலும் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்ததாக கொள்ளலாம். ஆனால் கல்முனை வித்தியாசமான ஒரு சூழலைக்கொண்டது.

இன்று கல்முனை என்பது முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான ஒரு மானசீக போராட்டபூமியாக இருக்கின்றது. எல்லாவிடயத்திற்கும் வரலாறு பேசுவார்கள். ஆனால் கல்முனையில் 1950 ம் ஆண்டுக்கு முன்பிருந்து வருகின்ற கல்முனைப் பட்டின சபை வரலாற்றை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழுக்காக போராடுவார்கள். ஆனால் கல்முனைக் கரையோர மாவட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தாங்கள் வாழும் கல்முனைப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்பார்கள். தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்துவிட்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்ப்பகுதியைப் புறக்கணிக்கிறார்கள். அபிவிருத்திசெய்யவில்லை, என குற்றம் சாட்டுவார்கள். ஆனால் கல்முனையில் ஒரு புதிய நகரைக் கட்டுவோம்; அபிவிருத்தி செய்வோம்; என்றால் அதனை எதிர்ப்பாளர்கள்.

வட கிழக்கில் கல்முனைவாழ் தமிழர்கள் ( எல்லோருமில்லாவிட்டாலும்) வித்தியாசமான மனோநிலையை உடையவர்களாக இருக்கின்றார்கள்; என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை. கண்டி- திகனவில் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்திற்காக வேதனையைப் பகிர்ந்துகொண்ட தமிழ் சகோதரர்கள் இலங்கையில் நிறையவே இருக்கின்றார்கள். அதேநேரம் அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த தமிழர்கள் கல்முனையில் இருக்கின்றார்கள்; என்பது கசப்பான உண்மையாகும்.

முஸ்லிம்கள் வேதனையில் உளன்ற அந்த சமயத்தில் சில கல்முனை தமிழ்சகோதரர்களின் முகநூல் பதிவுகளும் பின்னூட்டங்களும் அமைதியானவனுடைய இரத்தத்தையும் கொதிக்கவைக்கும். அந்த துக்க தினத்தில் கல்முனை தரவைக்கோயில் முன்னால் சில வாலிபர்கள் அமர்ந்துகொண்டு முகநூல்களில் முஸ்லிம்களுக்கெதிராக காட்டிய அட்டகாசம் இலகுவில் ஜீரணிக்க முடியாத ஒன்று.

இவ்வாறான ஒரு பிரிவினருக்குத்தான்  முஸ்லிம்களின் வாக்குகளால் பெறப்பட்ட இரு ஆசனங்களை விட்டுக்கொடுத்திருக்கின்றீர்கள். குருவி கூடுகட்டுவதுபோல் ஒவ்வொரு வாக்காக பொறுக்கியெடுத்த வாக்குகள் அவை. தலைவரின் மறைவுக்குப்பின் பல தேர்தல்களில் உங்களுக்கு எதிராக வாக்களித்தவர்களெல்லாம் கடந்த தேர்தலில் உங்களுக்கு வாக்களித்தார்கள்; ஏன், உங்கள்மீதுகொண்ட அபிமானத்தின் காரணமாகவா? இல்லை, அவர்களின் உணர்வுகளை அடக்கிக்கொண்டு கல்முனையைப் பாதுகாக்க வேண்டும்; என்ற வேகத்தில் அளித்தவாக்குகள் அவை.

அந்த வாக்குகளால் பெறப்பட்ட இரண்டு ஆசனங்களை, கல்முனையில் முஸ்லிம்களின் அடிப்படை இருப்பையே துவம்சம்செய்யத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு பிரிவினருக்கு விட்டுக்கொடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?  நீங்களும் இறுதியில் கல்முனை முஸ்லிம்களின் முதுகில் குத்திவிட்டீர்களே!

வேறு ஒரு சபையாக இருந்தால் ஏதோ இரண்டு ஆசனங்கள் பரவாயில்லை; என விட்டுவிடலாம். ஆனால் இந்த இரண்டு ஆசனங்களும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது முஸ்லிம்களுக்கு ஆப்புவைப்பதற்கான ஆசனம்; என்பது புரியுமா உங்களுக்கு? ஆகக்குறைந்தது இவர்கள் உங்கள் சின்னத்தில் போட்டியிட்டு நியமிக்கப்பட்டிருந்தால் அவர்களது கட்டுப்பாடு உங்களிடமாவது இருந்திருக்கும். இப்போது இவர்களோ ஐ தே க அங்கத்தவர்கள். நாளை ஒரு சந்தர்ப்பம் வரும்போது முஸ்லிம்களுக்கெதிராகத்தான் இவர்களது கைகள் உயரும்; செயல்கள் இருக்கும்.

முஸ்லிம்களின் வாக்குகளைப்பெற்று முஸ்லிம்களின் கண்களில் குத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டீர்களே! உங்களிடம் உள்ள அடிப்படைப் பிரச்சினையே இதுதானே! உங்களை நம்பி முஸ்லிம் சமூகம் ஒருவிடயத்தில் காலெடுத்து வைக்க முடியாதே! எப்பொழுது காலை வாருவீர்கள்; என்பதற்கு உத்தரவாதமில்லையே!

நீங்கள் மட்டும் சரியாக இருந்திருந்தால் மொத்த சமூகத்தையும் வேண்டுமானாலும் குத்தகைக்கு எழுதித் தருகின்றேன்; அந்த அமைச்சை மாத்திரம் பறித்துவிடாதீர்கள்; என்கின்றவர்களெல்லாம் வந்து படம் காட்ட முடியுமா?

அந்தந்த சமூகத்திற்கேற்ற தலைவர்களைத்தான் அல்லாஹ் கொடுப்பான். இறைவாக்கு மாறாது.

சமூகமே முடிந்தால் திருந்தப்பார்.
தனித்துவ அரசியல் பயணத்திற்கு வழிகாட்டிய கல்முனையே!  மீண்டும் ஒரு புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க முடியுமா? என்று சிந்தித்துப் பார்!!!
Yls hameed

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்