மத்திய ஆட்சியில் கறார் உள்ளாட்சியில் கலப்புஉள்ளாட்சி சபைகளில்  வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத வடிவத்தில் அரசியல் எதிரிகள் இணைந்து கலப்பு முறையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். அரசியலில் கட்சிகள் மற்றும் நபர்களின் நிரந்தரமான  நலன்களே பொதுத் தீர்மானங்களாக மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கு இது ஆகப் பிந்திய உதாரணமாகும்.

நடந்து முடிந்த உள்ளாட்சி சபைத் தேர்தல் முடிவுகள் மூட்டி வைத்த நெருப்பு, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டவுடன்   மத்திய அரசியலைக் கொதி நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் கூடி, எதிர்வரும் நான்காம் திகதி நாடாளுமன்றில் பிரேரணை விவாதத்திற்கு  வருவதற்கு முன்பாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்வது சிறந்தது என்ற அவர்களது தீர்மானத்தை முன்வைத்துள்ளனர்.

இது, அரசின் தலையைத் தப்ப வைத்து தமது தலைப்பாகைகளைக் காத்துக் கொள்ளும் சந்தர்ப்பவாத முடிவேயன்றி நாட்டு நலன் சார்ந்த முடிவல்ல. 2015 ஆம் ஆண்டில் இருந்து நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் வரை "காய்ச்சிய பாகாய்" இனித்த ரணில் இவர்களுக்கு தற்போது பாகற்காயாய் கசக்கத் தொடங்கியிருப்பது அரசியலில் ஒன்றும் புதிதல்ல.

மூன்று ஆண்டுகளாகத் தளர்வாக இருந்த மத்திய அரசியல் தற்போது கறாரான நிலைக்கு மாறியுள்ளது.

ரணிலும், மஹிந்தவும் 2000 மாம் வருடத்தில் இருந்து மாறி மாறி ஒருவருக்கொருவர் தமது தனிப்பட்ட அரசியல் நலனைக் காப்பாற்றிக் கொள்வதில் உதவிகள் புரிந்து வந்த நல்ல நண்பர்களாகும். இவ்விருவரில் ஒருவர் அரசில் இருக்கும் போது எதிர்க்கட்சியில் இருக்கும் மற்றவருக்கு உதவுவதன் மூலம் பிரபலமான அரசியல் நண்பர்களாக அறியப்பட்டவர்கள்.

தற்போது ஏற்பட்டிருக்கிற புதிய நெருக்கடியில் இவ்விருவரும் இருவருக்குமாகப் பரஸ்பரம் உதவிக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ரணில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்து தனது பிரதமர் பதவியைத் தக்கவைக்க முடியாது என்று நம்பினால் கட்சித் தலைவர் பதவியைக் கட்டாயம் தக்கவைப்பது அவசியமாகும். பிரதமர் பதவியை இழந்த பின் நீண்டகாலத்துக்கு கட்சித் தலைவர் பதவியில் இருக்க முடியாது .கட்சித்தலைவர் பதவியில் தொடர்ந்தால் உயிரோடிருக்கும் எக்காலத்திலாயினும் அரச பதவிக்கு வரமுடியும்.

எனவே, தனக்கு பிரதமர் பதவி இல்லாது போனால் நாடாளுமன்றம் கலைவது அவருக்கு முக்கியமானது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முழுமையாக ரணிலின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் கட்சியின் நாடாளுமன்றக் குழு முழுமையாக அவரின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, கட்சித் தலைமையைப் பாதுகாப்பது பிரதமர் பதவியைப் பாதுகாப்பதை விட இலகுவானது.
நாடாளுமன்றம் கலைந்து புதிய தேர்தல் இடம்பெற்றால் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கலாம்.

மஹிந்தவுக்கு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது அவரது அரசியல் நலனுக்கு மிகவும் முக்கியமானது. 19 ஆவது சரத்தை இல்லாது செய்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக வரமுடியும்.

எனவே இருவரது நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கின்ற இன்றைய புதிய அரசியல் சூழலில் இருவரும் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் காலம் கனிந்துள்ளது.

ரணிலிடம் இன்னும் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மஹிந்தவின் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இன்னும் சில உறுப்பினர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உறுதிப்படுத்திக் கொண்டு மன்றைக் கலைக்கும் பிரேரணையை எதிர்காலத்தில் விரைவாக நிறைவேற்றும் முயற்சிகள் எடுக்கப்படவும் கூடும்.

இனி எமது அரசியலில் அதிசயங்களுக்குக்குக் குறைவிருக்காது.
Basheer Segu Davood

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்