1983 இல் நிகழ்த்தப்பட்ட வன்முறையினால் உடமைகளை இழந்த தமிழ் மக்களுக்கு எவ்வளவு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது


Basheer Segu Davood
நிவாரணம் என்பது அழிவை இனிமேல் நிகழாது செய்வதாகும்.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நடந்தேறி தற்காலிக அமைதி நிலை அல்லது 'கட்டுப்பாட்டு' நிலை உருவானவுடன் நிவாரணம் பற்றிய கோரிக்கைகளும், அது தொடர்பான அரசின் தீர்மானங்களும் வெளிவரும்.
பல தடவைகள் இன வன்முறை அழிவுகளையும், இயற்கை அழிவுகளையும், போர் அழிவுகளையும், சந்தித்த நாடு இலங்கை. குப்பை மேடு சரிந்து விழுந்து அழிவு ஏற்பட்ட இழிவும் இங்குதான் நடந்தது.
மேற்சொன்ன அழிவுகளால் ஏற்பட்ட சேதத்திற்கு நிகரான- சமனான நிவாரணம் எக்காலத்திலும் எவருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை. அழிவுக்குச் சமனான (இன்ஷுயூரன்ஸ்) காப்பீட்டு இழப்புத் தொகை கூட வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதற்கு பல ஆவணங்கள் ஆதரங்களாக உள்ளன.
இதுமட்டுமல்ல, திட்டமிட்டுக் கூட்டாகக் குற்றமிழைத்தவர்களுக்கு தகுந்த தண்டனையோ அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நீதியோ வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதற்கும் வரலாறு சாட்சியாகிறது.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடாத்தப்பட்ட வன்முறைகளின் பின்னர், ஏதோ ஆபத்தான சம்பவம் எமக்கு எந்நேரமும் நிகழலாம் என்ற கிலேசத்தோடும், தம்மை வந்தடையப்போகும் கெட்ட செய்தியைத் தவிர்க்க வழியற்ற தவிப்போடும் வாழ்ந்த தமிழ் மக்களின் 26 வருட கால அவல வாழ்க்கையை இன்றைய சூழலில் ஒரு முறை அனைவரும் தம் மனக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். அதே வேளை, இன்றைய காலத்தில் முஸ்லிம்கள் அந்தத் துயர வாழ்வைத் தமது மனத் தராசில் போட்டு நிறுத்துப் பார்க்கவும் வேண்டும்.
1983 இல் நிகழ்த்தப்பட்ட வன்முறையினால் உடமைகளை இழந்த தமிழ் மக்களுக்கு எவ்வளவு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது என்கிற ஆவணத்தைப்பார்க்க ஆர்வம் மேலிடுகிறது. மட்டுமல்ல, அன்று நிகழ்த்தப்பட்ட கொடூரக் கொலைகளைச் செய்த கூட்டுக் கொலையாளிகள் எத்தனை பேருக்கு மரண அல்லது ஆயுட்கால தண்டனை விதிக்கப்பட்டது என்பதற்கான நீதி மன்றத் தீர்ப்பின் பிரதிகளையும் வாசிக்க ஆவலாயுள்ளது.
கண்டி மாவட்டத்திலும் அம்பாறையிலும் நடாத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களில் ஏற்பட்ட அழிவுகளுக்கான நிவாரணக் கோரல்களை மக்களும் முஸ்லிம் கட்சிகளும் முன்வைத்துள்ளன. நிவாரணத்துக்காக அரசு ஒதுக்கீடு செய்ய முனையும் தொகையை அவதானித்தால் அழிவைச் சந்தித்த மக்களின் கண்ணீர் என்றுமே காயப் போவதில்லை என்று தெரிகிறது.
நிலைமைகளை உள்ளார்ந்து நோக்கும் போது கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது.
நிந்தவூர், அட்டப்பளம் மயானக் காணி தொடர்பான பிரச்சினையை அவதானித்தால் அது காலப்போக்கில் கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் நிம்மதியைப் புதைப்பதற்குப் போதுமானதாகக் காணப்படுகிறது.
அம்பாறை நகர் உள்ளிட்ட சிங்கள பௌத்த பெரும்பான்மைப் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தீவிரம் பெற்றிருக்கும் அதேவேளை முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் அட்டப்பள மயான முரண்பாடு இந்து மத அடையாளத்தை அடியொற்றித் தோன்றியிருப்பது இந்து-முஸ்லிம் களேபரத்தை தோற்றுவிக்கக் கூடிய ஒரு கெட்ட எதிர்காலத்தைக் கட்டியம் கூறி நிற்கிறது.
வடகிழக்குக்கு வெளியில் பௌத்த முஸ்லிம் வன்முறையாகவும் வடகிழக்கில் இந்து முஸ்லிம் வன்முறையாகவும் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என புதிய கோணத்தில் சந்தேகிக்கவேண்டி உள்ளது.
சந்தேகம் ஊர்ஜிதமாயின், இலங்கையில் வாழும் எல்லா இனங்களையும், மதங்களையும் சேர்ந்த மக்களையும் நடமாடா மற்றும் நடமாடும் பிணங்களாக்கி எல்லா மதத்தினரையும் ஒன்றாகப் புதைக்கும் பொது மயானமாக இலங்கையை ஆக்குவதற்கான ஒரு 'பதிலி' யுத்தத்ததை ( proxy war) தொடங்குவதற்கான ஆயத்தங்களை ஒன்றுக்கு மேற்பட்ட "அக்கறையுள்ள வெளிச் சக்திகள்"( Interested parties) செய்துவிட்டன என்று அர்த்தமாகும்.
எது எப்படியோ, இலங்கையில் உடனடியாக மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கான வேலைத்திட்டம் வேகம் பெறல் வேண்டும்.
நிவாரணம் என்பது அழிவுகள் மீண்டும் நிகழாது தடுப்பதாகும்.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.