BREAKING NEWS

கிறிஸ்தவ புதுவருடத்தில் வாழ்த்துக்களை பரிமாறுதல்


கிறிஸ்தவ புதுவருடத்தில் வாழ்த்துக்களை பரிமாறுதல்

முஹம்மத் பகீஹுத்தீன்

புத்தாண்டு பிறக்கும் போதே புதுவருட வாழ்த்து பற்றிய கருத்து முரண்பாடும் பிறக்கிறது. நிலவு தேய்வது போலவே பின்னர் அது மறைந்து போகிறது.

இன, மத சமூக நல்லிணக்கத்தை வேண்டி நிற்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்கின்றோம். முஸ்லிம்கள் மீது ஏகப்பட்ட தப்பபிப்பிராயங்கள் அள்ளி வீசப்பட்ட ஒரு தருணத்தில் நாம் பிற மத இனத்தவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.

பழைய பத்வாக்களை அச்சொட்டாக பின்பற்றும் பழக்கத்திருந்து விடுபட்டு காலத்தின் தேவைக்கு ஏற்ப சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஷரீஆ அங்கீகாரம் வழங்கிய எல்லைக்குள் எமது நிலைப்பாடுகளை மீள்பரிசீலினை செய்வது தவறல்ல. இந்தப் பின்புலத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் தொடர்பான பத்தவாக்களை அணுகுவது பொருத்தம் என்று கருதுகின்றோம்

கிறிஸ்தவ புத்தாண்டுக்கான வாழ்த்துக்கள் பற்றி இஸ்லாமிய அறிஞர்களிடம் எதிரும் புதிருமான கருத்தகள் நிலவுகின்றன.
சிலர் அதனை அகீதாவுடன் இணைத்துப் பார்க்கின்றனர். இன்னும் சிலர் காலமாற்றத்திற்கு ஏற்ப மாறுபடும் பத்வாவாக நோக்க வேண்டும் என்பர்.

கிறிஸ்தவப் புத்தாண்டில் வாழ்த்துத் தெரிவிப்பது கூடாது என இப்னுதைமியா, இப்னுல் ஜவஸி மற்றும் நவீன கால அறிஞர்களான பின் பாஸ், இப்னு உஸைமீன், அல்பானி போன்ற பலரும் பத்வா வழங்கியுள்ளனர்.

இது அவர்களது மதரீதியான பண்டிகை தினம். அந்நிய சமூகத்துடன் ஒப்பாகுவது ஹராமாகும். வாழ்த்து தெரிவிப்பதன் மூலம் நாமும் அவர்களின் பண்டிகையில் நாம் பங்கேற்கின்றோம். அவ்வாறே முஸ்லிம் நாடுகளை பொறுத்தமட்டில் கிறிஸ்தவர்களுக்குரிய விழாவை உள்நாட்டில் இறக்குமதி செய்து கொண்டாட வைக்கும் வாயிலாக அது அமைந்து விடும். எனவே கிறிஸ்தவர்களின் மத அனுஷ்டான சொற்பிரயோகங்களை பயன்படுத்தியோ அல்லது பொதுவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியோ வாழ்த்து தெரிவிப்பது மற்றும் அன்பளிப்புக்களை பரிமாறிக் கொள்வது முற்றிலும் ஹராம் என அந்த அறிஞர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

ஆனால் பொரும்பாலான நவீன கால இஸ்லாமிய சட்டக் கலை அறிஞர்கள் இதுபோன்ற வாழ்த்துக்களைப் பரிமாறுவதில் எந்தத் தவநும் கடையாது என்றே கருதுகின்றனர்.

கலாநிதி யூஸுப் அல்-கர்ளாவி அவர்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது கால, சூழ்நிலைகளின் மாற்றம் காரணமாக ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியாவின் தீர்ப்புக்கு நான் உடன்பட வில்லை எனக் குறிப்பிடுகிறார்.

இன்று கிறிஸ்வர்களும் முஸ்லிம்களும் சமாதான வாழும் நிலையில், அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் உள்ள உறவுகள் வித்தியாசமாக உள்ளது. இப்னுதைமியாவின் கால சூழல் இன்று இல்லை. தற்காலத்தில் முஸ்லிம்களுக்கு கிறிஸ்தவர்கள் அயலவர்களாக, பள்ளித் தோழர்களாக, வேலைத்தளத்தில் சகபாடிகளாக, பயணத்தோழனாக என    உறவுகள் உள்ள நிலையில் அவர்களது வாழ்த்துக்களை புறக்கணிப்பதானது முஸ்லிம்கள் ஒரு வகையான வக்கிர மனோபாவம் கொண்டவர்கள் என்ற கருத்தை தான் வளர்க்கும்.

உலகளவில் முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள் என ஊதப்பட்டுள்ள நிலையில் எமது நடைமுறையும் அதற்கு துணையாக அமைந்தால் நெருங்கி வரவேண்டிய உறவுகள் தூரமாகும் என்பதில் சந்தேகமில்லை. எனவே நல்லுறவு பேணும் வகையில் அவர்களை வாழ்த்துவது மற்றும் வாழ்த்துக்கு பதில் கூறுவதும் தவறல்ல. மாறாக அல்குர்ஆன் ஸுரா மும்தஹினாவில் கூறுவது போல் அந்நியர்களுடன் சமாதான சகவாழ்வு வாழும் காலத்தில் அவர்களுக்கு செய்யவேண்டிய 'பிர்' எனும் நற்செயலாகவே அது கருதப்படும். நல்லுறவு பேணுவதும் கருணைப் பண்புடன் நடந்து கொள்வதும் முஸ்லிம்கள் மீதுள்ள பொறுப்பாககும். அவ்வாறு நடந்து கொள்ளும் முஸ்லிம்களை  அல்லாஹ் விரும்புகிறான் என அந்த வசனம் கூறுகிறது.

அவ்வாறே ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஐரோப்பிய சபை, சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் கிறிஸ்தவ புதுவருட வாழ்த்துக்கள் பரிமாறுவதை ஆதாரங்கள் அடிப்படையில் ஆகும் என்று பத்வா வழங்கியுள்ளது. போராடாத சூழில் ஒரு முஸ்லிம் தனி மனிதன் அல்லது இஸ்லாமிய மத்திய நிலையங்கள் போன்ற நிறுவனங்கள், அமைப்புக்கள் வாய் மொழியாகவோ அல்லது வாழ்த் மடல்களை அனுப்புவதன் மூலமோ வாழ்த்துக்களை பரிமாறுவது தடையல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அந்த வாழ்த்துப் பரிமாறல் இஸ்லாம் அனுமதிக்காக பிற மத சின்னங்களோ, வார்த்தைகளோ உள்ளடங்காத வகையில் அமைய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவருடத்தை முன்னிட்டோ அதுபோன்ற சர்வதேச தினங்களை முன்னிட்டோ வாழ்த்துத் தெரிவிக்கும் போது பரிமாறப்படும் பதப்பிரயோகங்கள் பிற மதத்தினரின் நம்பிக்கை கோட்பாட்டை ஏற்றதாகவோ அல்லது அங்கீகரித்ததாகவோ அமையாது. அது வெறுமனே சம்பிரதாய அடிப்படையில் மக்கள் மத்தியில் உள்ள வழக்கமான பாராட்டு, வாழ்த்து என்ற வகையில் காணப்படும் உபசாரமாகும். இதனை இஸ்லாம் ஒருபோதும் தடுத்தில்லை.

எனவே அந்த வகையில் அன்பளிப்புக்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது ஆகுமானதே. நபி (ஸல்) அவர்கள் எகிப்து கிறிஸ்தவ மன்னன் முகவ்கிஸிடமிருந்து அன்பளிப்புக்களை ப்ரியாமா ஏற்றார்கள் என்பது இதற்கு தெளிவான ஒரு சான்றாகும்.

அயலவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்ற வகையிலும்; இது ஆகுமானதே என கடார் பல்கலைகழ போராசிரியர் உஸ்தாத் முஹம்மத் தஸுக்கி அவர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளார்.

பிற சகோதரனை மதித்து அவனுக்கு வழங்கும் கௌரவ உபசாரம்;, வாழ்த்துக்கள் என்பன நல்லுறவு பேணுதல் என்ற வகையில் கிறிஸ்வ புதுவருட வாழ்த்தும் ஆகுமானதே என இஸ்லாமிய சட்டத்துறையிலும் உஸுல்களிலும் பெரும் பாண்டித்தியம் உள்ள உஸ்தாத் முஸ்தபா ஸர்கா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறே முஹம்மத் ரஷீத் ரிழா (ரஹ்), அஹ்மத் ஷர்பாஸி (ரஹ்), அப்துல்லாஹ் பின் பய்யா போன்ற இஸ்லாமிய சட்டக்கலை வல்லுனர்கள் கிறிஸ்தவ புதுவருட வாழ்த்து ஆகுமானதே என பத்வா வழங்கியுள்ளனர்.

வெறுமனே வாழ்த்துக்கள் பிற மதத்தவர்களின் தீனை ஏற்று அங்கீகரித்ததாக அமையாது என்பதை நாம் புரந்து கௌ;ள வேண்டும். அது நல்லுறவு பேணும் ஓரு வழிமுறை. அதில் மார்க்கம் தடுத்த பதப்பிரயோகங்கள் அல்லது விழாக்களில் பங்கேற்கும் போது ஷரீஆ ஹராமாக்கிய எல்லைகளை மீறால் எச்சரிக்கையாக இருப்பதே இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும்.

ஒரு முஸ்லிம் பிற மத சகோதரனைப் பார்த்து 'உங்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள்' என்று வாழ்த்தும் போது அவனது கொள்கையை திருப்தியோடு ஏற்று அகீதாவை பின்பற்றியொழுகியதாக அர்த்தம் கிடையாது. அது அல்குர்ஆனின் பார்வையில் நற்கருமாகும்.

முஸ்லிம்களுடன் போராடாத, அவர்களது இருப்பிடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றாத சமாதானமாக வாழும் பிற இன, மத்ததவர்களுடனான உறவுகள் பற்றிய கொள்கையை அல்குர்ஆன் விளக்கும் போது அது அவர்களுக்கு முஸ்லிம்கள் செய்யவேண்டிய நற்கருமம் என்றே குறிப்பிடுகிறது.

இஸ்லாம் வேதம் கொடுக்கப்பட்டவர்களுடன்
கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை ஆகுமாக்கியுள்ளது. அவர்கள் அறுத்தவற்றை ஆகாரமாகக் கொள்வதை ஹலாலாக்கியுள்ளது. அவர்களது பெண்களை மனம் முடிப்பதற்கு அனுமதிவழங்கியுள்ளது. அவ்வாறே அவர்கள் முஸ்லிம்களுடன் எதிர்த்துப் போராடாத நிலையில் அவர்களுடன் நல்லுறவு பேணுமாறும் அவர்களுக்கு உதவி செய்யுமாறும் பணிக்கிறது.

எனவே நல்லுறவு பேணும் வகையில் அவர்களது பண்டிகை தினங்களில் வாழ்த்துக்களைப் பரிமாறுவதும் ஷரீஆ வரம்புகளை மீறாதாவாறு அவர்களது விழாக்களில் பங்கேற்பதும் தடையல்ல.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar