BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸ் நமது கட்சி தலைவர் நம்மவரல்ல..


***************"*************
உள்ளூராட்சித் தேர்தல் 2018, இலங்கையின் மைய அரசியலில் பாரிய தாக்கத்தைச் செலுத்த வல்லது மாத்திரமல்ல தேசிய அரசாங்கத்தின் திசையையும் மாற்றக்கூடியது.

இலங்கையில் 50 களின் நடுப் பகுதியில் இருந்து இரு கட்சி அரசியலே நடைமுறையில் இருந்துவந்தது. இன்றைய காலத்தில் இவ்விரண்டு கட்சிகளும் இணைந்து அரசமைத்திருக்கின்ற அதே வேளை வெவ்வேறாகத் தேர்தலில் குதித்திருக்கின்றன.தேசிய அரசமைக்கிற திருப்பம் ஏற்பட்டதில் இருந்து இணைந்த எதிர்க்கட்சி என்ற கட்சி நாடாளுமன்றில் 51 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இவ்வெதிர்க் கட்சி "ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன" என்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக பரிணமித்து, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பங்கு கொள்கிறது.

எனவே, தற்போது இலங்கையின் தேர்தல் அரசியலில் கிட்டத்தட்ட மூன்று சம பலமுள்ள சிங்களப் பெருங்கட்சிகள் தேர்தல் களத்தில் நிற்கின்றன. இது நமக்கு ஒரு புதிய அனுபவம் ஆகும். சிறுபான்மைக் கட்சிகள், இந்தப் புதிய சூழலில் அவதானத்தோடு புதிய வியூகத்தை வகுத்துச் செயல்படல் வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய மூன்று கட்சிகளும் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றை விட மற்றது ஒரு சில சபைகளைத் தானும் அதிகமாகப் பெற்றுக் கொள்ளும் தீவிர செயல்பாட்டில் இறங்கியிருக்கின்றன. ஏனெனில் கூடிய சபைகளைப் பெறும் கட்சியால்தான் அடுத்து வரும் மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்த முடியும் என அவை நம்புகின்றன.மட்டுமல்லாது எதிர்வரும் 2020 இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னுள்ள இரண்டு வருடங்களும் மன்றில் அதிக செல்வாக்குள்ள ஆட்சிக் கட்சியாகவும் திகழ்ந்து தமது கட்சியின் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று இக்கட்சிகள் நம்புகின்றன. ஆகவே இக்கட்சிகள் அவற்றின் இந்த திட்டத்துக்கு ஏற்றவகையிலேதான் உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகத்தில் சிறுபான்மைக் கட்சிகளுடன் கூட்டமைத்திருக்கின்றன.

இந்த அடிப்படையில் வெற்றி பெறுவதை நோக்காகக் கொண்டுதான் ஐக்கிய தேசியக் கட்சி, கிழக்கில் முஸ்லிம் காங்கிரசை யானையின் வயிற்றுக்குள் விளாங்காயாய் விழுங்கியிருக்கிறது. அதாவது தேர்தல் முடிவு வெளியாகிற போது ஒப்பீட்டளவில் யானை அதிக சபைகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். இதற்காகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் இவ்வளவு காலமும் தனித்து நின்று வென்று வந்த உள்ளூராட்சி சபைகளில் யானைச் சின்னத்தில்தான் தேர்தலில் இறங்கவேண்டும் என்று ஹக்கீமுக்கு மிரட்டல் விடுத்த ரணில், யானை தனித்து நின்று வெல்லக்கூடிய சபைகளில் முஸ்லிம் காங்கிரசைத் தனித்து நிற்கும் வகையில் கைவிட்டார். முஸ்லிம்கள் தனித்து ஆட்சியமைக்கக்கூடிய சபைகளில் தனித்தும்,தனித்து ஆட்சியமைக்க முடியாத சபைகளில் தேசியக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தும் தேர்தலை எதிர்கொள்வதே முஸ்லிம் தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமானது. அதுவும் வரலாற்றில் மூன்று கட்சிகளின் பலம் பரீட்சிக்கப்படுகிற களச் சூழலில் முஸ்லிம் தனித்துவக் கட்சி தனித்து நின்று, மூன்று கட்சிகளுக்கும் முஸ்லிம் அரசியல் பலத்தை நிரூபித்துக் காட்டுவதே மிகச் சரியான இன்றைய உள்ளாட்சித் தேர்தல் வியூகமாகும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைகீழாக முடிவை எடுத்து முஸ்லிம்களின் தலைகளைக் கவிழச் செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு கட்சியைத் தாரைவார்த்து தலைவர் அமைச்சர் பதவியையும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கண்டியில் போட்டியிடப் பாதுகாப்பான தொகுதியையும் பெற்றுக்கொள்ளும் வீரஞ்செறிந்த போராட்டத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார்.

வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மலையகத்தில் தொண்டமானும்,தன்மானத்தோடு புதிய சூழலில் பேரம்பேசும் சக்தியைப் பிரயோகிக்க ஏதுவாக தனித்துப் போட்டியிடுகிற போது முஸ்லிம் காங்கிரசால் ஏன் தனித்துக் போட்டியிட்டிருக்க முடியாது?
மக்கள் நலனில் அக்கறையற்றுத் தனது சொந்த நலனுக்காக மக்களைப் பலி கொடுக்கும் நபர் ஒருவர் எமது கட்சிக்குத் தலைவராக இருக்கும் வரை அஷ்ரஃப் கட்சியை ஆரம்பித்த தூய்மையான நோக்கத்தை அடையவே முடியாது.

எனவே, எதிர்வரும் தேர்தலை நமது கட்சியை நாம் மீட்டெடுப்பதற்பான வாய்ப்பாக உபயோகிக்க வேண்டும்.ஓர் அரசியல் மொத்த வியாபாரியும் அவரோடிருக்கும் நடைபாதை வியாபாரிகளும் நமது உதிரத்தால் உருவான கட்சியைக் கையகப்படுத்தி வைத்திருப்பதால் அது நமது கட்சியில்லை என்றாகாது. "தலைவர் நம்முடையவரல்ல ஆனால் கட்சி நம்முடையது" என்ற கோசத்தை முன் வைத்து இத்தேர்தலை எதிர்கொள்வோம். முஸ்லிம் காங்கிரஸ் எங்கும் தேர்தல் கேட்கவில்லை ஐக்கிய தேசியக் கட்சியே போட்டியிடுகிறது என்ற எதார்த்த நிலைப்பாட்டை எடுப்போம். றவூப் ஹக்கீமின் காட்டிக்கொடுப்புக்குப் பாடம் புகட்டுவோம். தேர்தல் முடிய கட்சியைக் கைப்பற்றி புதிய பரம்பரையிடம் கையளிப்போம்.
Basheer 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar