- எட்வர்ட் குணசேகர எம்.பி. மினுவாங்கொடையில் தெரிவிப்பு
( மினுவாங்கொடை நிருபர் )
ஐக்கிய தேசியக் கட்சிக்கு கெளரவமான வரலாற்றுச் சிறப்புண்டு. அந்த வரலாற்றைக் கட்டிக் காப்பதும், சரிந்து விடாமல் கட்டியெழுப்புவதும் ஒவ்வொரு ஐ.தே.க. வேட்பாளருக்குமுள்ள மிக முக்கிய பொறுப்பும், வரலாற்றுக் கடமையுமாகும் என, ஐ.தே.க. மினுவாங்கொடை தொகுதி பிரதான அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினறுமான எட்வர்ட் குணசேகர தெரிவித்தார்.
ஐ.தே.க. வின் புதிய கிளைக் காரியாலயம் ஒன்று, நேற்று முன் தினம் கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில் மினுவாங்கொடை நகரில் திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐ.தே.க. சார்பில் மினுவாங்கொடை நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அமைப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது,
நாம் பிறரைப்பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நாம் நம்மையே சரி செய்துகொள்ள வேண்டும். இரு சபைகளுக்கும் இம்முறை தெளிவான, சிந்தனையுள்ள, துடிதுடிப்பான, மக்கள் அபிமானம் பெற்றவர்களையே களத்தில் இறக்கியுள்ளோம். எனவே, எந்த வேட்பாளரும் சளைக்க வேண்டிய அவசியமில்லை. சிறந்த அபிலாஷைகளோடு, வெற்றியின் எதிர்பார்ப்போடு, மக்களைப் போய்ச் சந்திக்குமாறு வேட்பாளர்களைக் கேட்கின்றேன்.
வேட்பாளர்கள் எவரும் யாருடனும் கோபம் பாராட்டக்கூடாது. கோபமாக உள்ளவர்களையும் புண் சிரிப்போடு அணுகி, அவர்களின் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் பெற்று, தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இதுவே வேட்பாளர்கள் கட்சிக்குச் செய்யும் மிகப்பிரதானமான கைங்கரியமாகும். மினுவாங்கொடை நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் ஐ.தே.க. சார்பில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்கள், மிகச் சிறந்த பெரு வெற்றிகளைப் பெற்று முன்னணியில் திகழ்வார்கள் என்பதில், எவ்வித சந்தேகமுமில்லை. இம்முறை இரு சபைகளையும் ஐ.தே.க. கைப்பற்றும். நகர சபை, பிரதேச சபை எல்லைகளில் பச்சைக் கொடி பறந்து, வெற்றியின் சந்தோஷத்தைத் தெரிவிக்கும் என்றார்.
Post a Comment