BREAKING NEWS

சாய்ந்தமருதில் மக்கள் பிரகடனம்!!!


சாய்ந்தமருதில் மக்கள் பிரகடனம்!!!
-எம்.வை.அமீர்-
உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து, மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தை நடாத்தியிருந்த சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் இறுதி நாளான 2017-11-01 ஆம் திகதி பள்ளிவாசளினால் முன் திரண்டிருந்த மக்களின் முன்னிலையில் சாய்ந்தமருது பிரகடனம் ஒன்றை மக்களின் தக்பீர் முழக்கத்துடன் வெளியிட்டது.
குறித்த பிரகடனத்தை சாய்ந்தமருது உலமாசபையின் தலைவர் அஷ்செய்க் எம்.எஸ்.எம்.சலீம் (ஸர்கி) வசித்தார்.
சாய்ந்தமருதின் மூன்று தசாப்த கால கோரிக்கையான தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத்தருமாறு தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரூடாக உரிய கட்சித் தலைவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் பலவழிகளிலும் முயச்சிகள் முன்னெடுக்கப்பட்டும்  நம்பிக்கையூட்டும் போலியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு,துரோகமிளைக்கப்பட்டு ஒரு துர்ப்பாக்கியகரமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாது, இவ்வூரின் பொதுமக்கள் வீதிக்கு வந்து மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் விதமாக கட்சித்தலைவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பான அமைச்சர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுந்த பதிலை இதுவரை வழங்காததன் பின்னணியில் 2017.11.01 ம் திகதியாகிய இன்று சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜூம்மாப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைமையின் கீழ் உலமாக்களும்,வர்த்தக சமூகமும்,அனைத்து சிவில்,இளைஞர் அமைப்புக்களும், பொதுமக்களும் ஒருமித்த குரலில் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையைப் பெற்றுக்கொள்வது  தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலான  சாய்ந்தமருதுப் பிரகடனம் பின்வருமாறு.

1.            தொன்றுதொட்டு காலம் காலமாகப் பேணிவரும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நாட்டின் ஒற்றுமைக்கும்,இறைமைக்கும் பங்கம் ஏற்படாதவண்ணம் பேணிப்பாதுகாக்க எம்மாலான சகல முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொள்ளுவோம்
2.            சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வளங்களும், அடிப்படைத் தகுதிகளும் சந்தேகமின்றித் தெளிவாகவே இருக்கின்றன என்பதை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெளிவுபடுத்துகின்றோம்.
3.            சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை,சாய்ந்தமருது – மாளிகைக்காடு எல்லைக்குள் எல்லா அரசியல் கட்சிகளினதும் சகல விதமான கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஆதரவோ ஒத்துழைப்போ வழங்குவதில்லை.
4.            சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை,இதற்குப் பிறகு நடைபெறும் சகல தேர்தல்களிலும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மாப் பள்ளிவாயல்கள் பரிபாலனசபையின் நெறிப்படுத்தலின் கீழ்,கட்சி சாராத சுயேட்சைக் குழுவை தேர்தலுக்கு முன்னிறுத்துதல்.
5.            சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை,  சாய்ந்தமருது- மாளிகைக்காடு எல்லைக்குள் இடம்பெறுகிண்ற எந்தவிதமான நிகழ்வுகளுக்கும் கட்சி சார்ந்த உள்ளுர் அரசியல் பிரமுகர்களை அழைக்காதிருத்தல்.
6.            சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை,இப்பிரதேச எல்லைக்குள் எந்தவிதமான கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கும், கட்சி செயலகங்களுக்கும் இடமளிக்காதிருத்தல்.
7.            சாய்ந்தமருது மக்களுக்கு நியாயபூர்வமாகக் கிடைக்க வேண்டிய தனியான உள்ளுராட்சி சபைக்கான கோரிக்கையை மழுங்கடிக்கும் விதமாக நீண்டகாலமாக தீர்க்கமுடியாமல் இருக்கின்ற ஒன்றினை முன்னிலைப்படுத்தி கல்முனையை நான்காகப் பிரித்தே சாய்ந்தமருதுக்கான தனியான சபை வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமற்ற கோரிக்கையாகும்.
8.            இந்தப் பிரகடனத்தை மீறும் விதமாகச் செயற்படும், செயற்பட முயற்சிக்கும், அல்லது அவ்வாறு செயற்படுகின்றவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற எமதூரைச் சேர்ந்த அனைவரும் இவ்வூரின் ஜமாஅத் கட்டுப்பாட்டை மீறியவராகக் கருதப்படுவர்.
9.            சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மழுங்கடிக்கும் விதமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கும் தனிநபர்கள் அனைவரும் துரோகிகளாவர்.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபை,
உலமா சபை
பொது அமைப்புகள் ஒன்றியம்
01. 11. 2017

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar