ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
பலாங்கொடை கற்குகையிலிருந்து 6,300 வருட இரத்தக்கறையுடன கல் கண்டுபிடிப்பு
பலாங்கொடை – வெலிகேபொல, இலுக்கும்புர மற்றும் பனான கிராமப் பகுதிகளில் கற்குகை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது சுமார் 6300 வருடங்கள் பழைமை வாய்ந்த இரத்தக் கறை தோய்ந்த கல் ஒன்று தொல்பொருளியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளால் லுணுபகல்லே என அறியப்படும் இந்த கற்குகையில் 2015 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதாஸ உள்ளிட்ட குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட தொல்லியல் அகழ்வுகளின் போதே இந்த இரத்தக்கறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே இவ்வாறான அதி தொன்மைவாய்ந்த இரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளதாகவும் புராதன மனித நாகரிகம் தொடர்பான வரலாற்றை தேடிச் செல்வதற்கு இவ்வாறான தடயப்பொருட்கள் முக்கியமான சாட்சிகளாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6300 ஆண்டுகள் பழைமையான இந்த இரத்தக்கறை தோய்ந்த கல் மேலதிக ஆய்வுகளுக்காக ராகமை மருத்துவ பீடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதாஸ தெரிவிக்கையில், “எமக்கு இந்தக் கல் 2015 ஆம் ஆண்டில் கிடைத்தது. இது வரலாற்றுக்கு முந்தைய காலப்பகுதிக்கு உரித்தானதாகும். இந்தக் கல்லில் இருந்த கறை இரத்தக் கறையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நான் அதனை பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக விஞ்ஞான ரீதியாக பரிசோதனை மேற்கொண்டேன். அது தொடர்பில் பெற்றுக்கொள்ளப்பட்ட இலத்திரனியல் நுண்ணணு பொறிமுறையின் மூலம் பெற்றுக்கொண்ட புகைப்படங்களின் மூலம் அது மனிதனின் இரத்தம் என உறுதிப்படுத்தப்பட்டது.
வெப்பமண்டல உலர் வலய கற்குகையினுள் இந்த இரத்தக்கறை காணப்பட்டதனால் மிக நீண்டகாலமாக இது பாதுகாப்பாக இருந்துள்ளதாக கருதப்படுகிறது. உலகிலேயே இவ்வாறான இரத்தக்கறைகள் கண்டுபிடிக்கப் பட்ட சம்பவங்கள் மிக சொற்ப அளவிலேயே பதிவாகியுள்ளன. இவ்வாறான இரத்தக்கறை எந்தக் காலப்பகுதியை சேர்ந்தது என கண்டறிவதற்கு உலகளாவிய ரீதியில் உயர் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கண்டுள்ளன என்றார்.
(ரெ.கிறிஷ்ணகாந்)
Comments
Post a comment