BREAKING NEWS

காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக எமது சமூகம் உள்ளது.


எம்.ஏ.றமீஸ்)

கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் எமது முஸ்லிம் சமூகம் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக எமது சமூகம் உள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவைகளை எல்லாம் கேட்பார் பார்ப்பாரற்ற சமூகமாகவும் தேர்தற் காலங்களில் மாத்திரம் கோசமிடுகின்ற அரசியல் தலைமைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது சமூகம் உள்ளது என கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் சரட்டி நிறுவனத்தின் உதவி மூலம் பொத்துவில் ஹிஜ்ரா நகரில் நவீன முறையில் அமைக்கப்படவுள்ள ஐம்பது வீட்டுத் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

காரிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தொடர்;ந்தும் உரையாற்றுகையில், எந்த சமூகத்திலும் இல்லாதவாறு எங்களை நாங்களே ஏமாற்றுகின்ற கலாசாரத்தினைக் கொண்ட சமூகமாக இன்று வரை எமது சமூகம் இருந்து வருகின்றது.
 இறைவன் எமக்களித்திருக்கின்ற அறிவினை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். புரையோடிப் போயிருக்கும் தீய பல விடயங்களிலிருந்து எமது சமூகத்தினைக் காத்துக் கொள்ள நாம் விழிப்படைய வேண்டும். சீரிய சிந்தனைகளை எமக்குள்ளே வளர்த்துக் கொள்ள வேண்டும், கல்வியிலே எமது சமூகம் உயர்வடைய வேண்டும். நல்ல பொருளாதாரத்தினைக் கொண்ட சமூகமாக இந்நாட்டிலே எமது சமூகம் மிளிர்வதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.
எதிர்காலச் சந்ததியினரை சுதந்திரமாகவும், வளம் மிக்க சமூகத்தினராகவும் வாழ வைப்பதற்கான பாரிய வேலைத்திட்டத்தினை நாம் முன்னெடுத்துச் செல்ல அனைவரும் முனைப்புடன் செயற்பட வேண்டும். அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமைப்பட்டு செயற்படுகின்ற கலாசாரத்தினை ஏற்படுத்த வேண்டும். விட்டுக் கொடுப்புடனும் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் செயற்படுகின்றவர்களாக நாம் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.

இந்த நாட்டில் இனவாதம் மலிந்து கிடக்கின்ற இக்காலத்தில் நல்ல பல திட்டங்களை நாம் கொண்டு வருகின்றபோது உதவிகளைச் செய்யாமல் உபத்திரங்ளைக் கொடுக்கின்ற ஒரு கூட்டத்தினர் இந்நாட்டில் வளரந்து வரும் இத்தருணத்தில் நல்லெண்ணம் கொண்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் புத்தி ஜீவிகளும், கல்விமான்களும் எமது மக்களுக்கான நல்ல பல காரியங்களைச் செய்து கொடுப்பதற்கு முன்வர வேண்டும். அப்போதுதான் நாம் நல்ல பல அபிவிருத்திகளைச் செய்ய முடியும் என்றார்.

பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இங்குள்ள வருமானம் குறைந்த மக்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியதாக உள்ளது.
காலத்திற்குக் காலம் வாய்ப்பேச்சுக்களை மாத்திரம் வீசிச் செல்கின்ற தலைமைகளாக நாம் இருக்க முடியாது. செயற்பாடுகளில் நமது வீரத்தினைக் காட்ட வேண்டும். நாம் மக்களுக்காக நல்ல பல சேவைகளை புரிவதற்காக முன்னின்று செயற்படுகின்றோம் என்றார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் முயற்சியினால் சேஹ் செய்யட் பின் சுல்தான் அல்-நஹ்யன் கிராமம் என்னும் பெயரில் உருவாக்கப்படவுள்ள இவ்வீடமைப்புத் திட்டத்தில் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ள ஐம்பது வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்றும் அதில் பாடசாலை மற்றும் சுகாதார நிலையம் போன்ற வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வின்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் காசிம் அப்துல் பத்தாஹ் அல்-முல்லா, டுபாய் சரட்டி அமைப்பின் செயலாளர் நாயகம் அஹமட் மொஹமட் பின் மிஸ்மர் அல்-சம்சி, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் முக்கியஸ்தர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், சமூக மட்ட முக்கியஸ்தர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar