மீள்குடியேறியவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் செயலணிக்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் பங்களிப்பு நல்கவேண்டும்.
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தனது பூரண பங்களிப்பை நல்கவேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
பங்கொக்கை தளமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நிறுவகத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று மாலை (13.09.2017) அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து பேச்சு நடத்திய போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்தச் சந்திப்பில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி சிம்ரின் சிங் அவர்களும் பங்கேற்றார். 
“கடந்தகால யுத்தம் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தையும், அழிவையும் ஏற்படுத்தியுள்ளது. சமாதானம் ஏற்பட்டு மீளக்குடியேறிய சூழல் வடக்கில் ஏற்பட்ட பின்னர், மக்கள் படிப்படியாக குடியேறிவருகின்ற போதும் அவர்கள், வாழ்வாதாரம்  இல்லாததால் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றனர். முறையான  வாழ்வாதார உதவிகளின்றி அன்றாடம் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது ஜீவனோபாவத்தை மேற்கொண்டுவரும் இந்த மக்களுக்கு உதவவேண்டியது மனிதநேயம் கொண்டவர்களின் கடமையாகும். 
இந்தவகையில் யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்த்தினாலும் பாதிக்கப்பட்ட நாடுகளிலுள்ள மக்களுக்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் பல்வேறு உதவி;களை வழங்கிவருவது பாராட்டத்தக்கது. குறிப்பாக, “பொருளாதார அபிவிருத்தி கருத்திட்டத்தின் ஊடாக மக்களை வலுவூட்டல்” (Leed) என்ற மாதிரித் திட்டத்தின் அடிப்படையில்  சர்வதேச தொழில் ஸ்தாபனம் கடந்த காலங்களில் வடமாகாணத்திலும் சிலவாழ்வாதார திட்டங்களை மேற்கொண்டமையை நாம் நன்றியுடன் நினைவுட்டுகின்றோம்.  
தனது அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களான கைத்தொழில் அபிவிருத்தி சபை, நெடா, தேசியவடிவமைப்பு நிறுவனம், தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியவற்றின் உதவியுடனும் ஏனைய பரோபகாரிகளின் உதவிகளுடனும் மீள்குடி‍‌யேற்ற கிராமங்களில் வாழ்வாதாரத்தை வலுவூட்டுவதற்காக புதிய செயலணி ஒன்றை அமைத்துள்ளோம்.
இந்தப் புதிய முயற்சிக்கும், திட்டத்திற்கும் சர்வதேச ஸ்தாபனமும் தனது பங்களிப்பை நல்கவேண்டுமென வேண்டுகின்றோம். 
மீள்குடியேறிய மக்கள் தமக்கு தேவையெனக் கோரும் வாழ்வாதார திட்டங்களையும, ஊக்குவிப்புக்களையும்  அவர்களுக்கு உரிய முறையில் வழங்குவதை மையமாகக கொண்டே இந்த செயலணியை அமைத்துள்ளோம். அரசோ, அல்லது அரசின் அங்கமான அமைச்சுக்களோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களோ தாம் விரும்பும் திட்டங்களை மக்களுக்கு வலிந்து புகுத்தும் நடைமுறையை முற்றாக மாற்றி அமைத்து, மக்கள் தமக்கு எந்தத்திட்டம்  பொருத்தமானது எனக் கருதி அதனைக் கோருகின்றார்களோ அந்த திட்டத்ததை அவர்களுக்கு அமைத்து கொடுப்பதை  இலக்காக கொண்டே நாம் இந்த செயலணியை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் குறிப்பிட்ட பிரதேசத்தில் காணப்படும் வளங்கள், வசதிகள், மக்களின் விருப்புவெருப்புக்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டும் வீண்விரயங்களை தவிர்த்தும் பயனுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.  மீள்குடியேற்ற கிராம மக்களின் வாழ்வாதாரத்தை வளம்படுத்தும் இந்த திட்டத்திற்கு  எமது அமைச்சும் கணிசமான  நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். 
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வெறுமனே பொருளாதாரத்தையும், இயல்பு வாழ்க்கையையும்; மட்டும் தொலைத்து நிற்பவர்கள் அல்ல. யுத்தமும் அவற்றின் வடுக்களும் பலரை உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களின் மனோநிலையை மாற்றி அமைத்துள்ளது. இதனால் அவர்களின் அன்றாட செயற்பாடுகளில் கூட சீரின்மை காணப்படுகின்றது. இவர்களின் சீரான வாழ்வு தொடர்பிலும் நாம் உரிய கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. என்றும்  அமைச்சர் குறிப்பிட்டார். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்