BREAKING NEWS

டாக்டர் அஸீஸ் பகிரங்க விளக்கம் தரவேண்டும் : ஹுதா உமர் !!கல்முனை மாநகர ஆட்சிக்கு உட்பட்ட சந்தாங்கேணி மைதானத்தில் இம்மாத ஆரம்பத்தில் நடைபெற இருந்த ஒரு சிறுவர் நிகழ்ச்சியுடன் கூடிய பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை கல்முனைக்குடி ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர்
வைத்திய கலாநிதி அஸீஸ் அவர்கள் நேரடியாக மாநகர சபைக்கு எழுத்து மூலம் நிறுத்தக் கோரியதன்பேரில் நிறுத்தப்பட்டதாக கடந்த சில தினங்களாக பாரிய ஒரு சர்ச்சை சமூக
வலைத்தளங்களில் போய்க்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.
குறித்த நிகழ்ச்சியில் இஸ்லாத்துக்கு விரோதமான அல்லது இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் சட்டத்துக்கு விரோதமான செயல் ஏதாவது நடக்க இருந்ததா? அவ்வாறாயின் அந்த செயல் என்ன என்பதை அதனை தடுத்து நிறுத்த போராடி வெற்றியும் கண்ட பொதுநல அமைப்புக்கள் மற்றும் கல்முனைக்குடி ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர்
வைத்திய கலாநிதி அஸீஸ் போன்றோர் மக்களாகிய எங்களுக்கு ஊடகங்கள் மூலம் தெளிவு படுத்தவேண்டியவர்களாக உள்ளனர் என்பதை இங்கு தாழ்மையுடன் அறியத்தருகிறேன்.
அவர்கள் அதனை ஹஜ் பெருநாள் விசேட நிகழ்ச்சியாக நடாத்த முனைந்திருந்ததால் தடுத்தோம் என கூற முனைந்தால் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முக்கியஸ்தரான சகோதரர் அஸீஸ் அவர்கள் ஹஜ் பெருநாள் விசேசமாக எமது நாட்டின் தொலைகாட்சிகள் ஒளிபரப்பும் ஆபாச திரைப்படங்களை தடுக்க எத்தனை தடவை யார் யாருக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள் என்பதையும் சினிமா பாடலுடன் கூடிய பெருநாள் தின வானொலி சிறப்பு நிகழ்ச்சிகள் எத்தனையை தடுத்து நிறுத்தி உள்ளீர்கள் என்பதையும் அறியத்தந்தால் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்
அது சிறுவர் நிகழ்ச்சியாக இருந்தபோதும் இசை கலக்க இருந்ததால் நிறுத்தப்பட்டதாக நீங்கள் கூற முனைந்தால் கடற்கரைப்பள்ளி வாசலிலும் இதே போன்ற இசை மற்றும்பாட்டுக்கள் போடப்படுகின்றதை அந்த கடற்கரை பள்ளிவாசலின் நிர்வாக தலைவராகிய நீங்கள் மறுப்பீர்களா ? இல்லை அங்கு ஒலிபரப்பப்படுவது இசை இல்லை என்று மறுப்பீர்களா ? என்ற எங்களது கேள்விக்கு உங்கள் பதில் என்ன ?? சினிமா பாடல் பாடக்கூடாது இஸ்லாமிய பாடல்
(இஸ்லாமிய கீதம்) பாடலாம், என்றால் உங்களை விட வயதில் குறைந்த உங்களை மதிக்க தெறிந்த
ஏற்பாட்டு குழுவினரிடம் இஸ்லாமிய கீதங்களை ஒலிபரப்புங்கள் எனும் நிபந்தனையுடன் ஏன் அவர்களின் நிகழ்ச்சியை அனுமதிக்க வில்லை? (எந்த கீதம் என்றாலும் இஸ்லாத்தில் இசை ஹராம்.)
இல்லை ஏற்பாட்டு குழுவினர் சாய்ந்தமருதை சேர்ந்தவர்கள் என்பதால் தடுக்கப்பட்டதா ? (அந்த குற்றசாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது ) சிறுவர்கள் நிகழ்ச்சி,இரத்த தான முகாம், நடமாடும் சேவை,போன்றன பெருநாள் தினங்களில் கல்முனைகுடி பள்ளிவாசல் எல்லைக்குள் அனுமதிக்கப்பட வில்லையா ? அப்படி அனுமதிக்கப்பட வில்லை என்றால் எப்போது இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது ??
சிறுவர் நிகழ்ச்சிக்கு அப்பால் வேறு ஹறாமான நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற இருந்ததால் உங்களால் தடுக்கப்பட்டதா? அவ்வாறாயின் அவை யாவை?
சாந்தாங்கேணி மைதானம் என்பது கல்முனை மாநகரின் சொத்து. அதில் சகலருக்கும் சம உரிமை உண்டு சட்டத்துக்கு முரணாகாத எந்த நிகழ்ச்சியையும் நடாத்தும் உரிமை சகலருக்கும் உண்டு, (ஆயினும்எமது பிரதேச சமூக, சமய, கலாசார விழுமியங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சிகளை தடைசெய்யக் கோரலாம் ). மாநகரசபையும் அதை கவனத்திற்கொள்ளலாம். குறித்த நிகழ்ச்சி அவ்வாறு ஏதாவது வகையைச் சார்ந்ததா என்பதை இதனை தடுத்து நிறுத்திய பள்ளிவாசல் தலைவர் மற்றும் மக்கள் நல அமைப்புக்கள் பொதுமக்களாகிய எங்களுக்கு தெளிவுபடுத்த முடியுமா ? இது தொடர்பாக குறித்த பள்ளிவாசல்த லைவர் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
நாளைய தினம் கல்முனை மாநகரில் சம உரிமையுடைய அந்நிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (தமிழ்,கிறிஸ்தவ சகோதர்கள் ) இஸ்லாத்தில் முழுமையாக ஹறாமாக்கப்பட்ட அதேநேரம் அவர்கள் சமூகத்தாலும் இலங்கைச் சட்டத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நடாத்த முனைந்தால் உங்களால் இதைபோன்று செயற்பட்டு தடுக்க முடியுமா? அவ்வாறு முடியும் என வியாக்கியானம் பேச முற்பட்டால் இதற்க்கு முன்னர் அந்த மைதானத்தில் தயா கமகேவின் நிகழ்ச்சியையும் சில வானொலிகளின் சினிமாப்பாட்டுக்கள் நிறைந்த இசை கச்சேரிகளையும் நிறுத்த முடியாமல் போனது ஏன் ??
நம்மவர்கள் தலைமையேற்று அவர்களின் அமைப்புக்கள் முன்னின்று நடாத்தும்போது மார்க்க வரையறைக்குள் இருக்க வேண்டுமென்பது ஏற்புடையதே, ஆனால் அதில் ஏதாவது குறைகளை கண்டால் சம்மந்தப்பட்ட சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறலாம்.
(அதை கூறும் தகுதி தங்களிடம் இல்லை என்பது மேலதிக தகவலும் கூட ) .
ஒருபுறம் கல்முனை மாநகரம் எல்லா ஊர்களுக்கும் எல்லா சமூகத்தினருக்கும் சொந்தம் எனபதை மறந்து அம்மாநகரத்தின் பொதுச்சொத்து விடயத்தில் ஒரு ஊர் பள்ளிவாசல் தலையிடுவது என்பது விமர்சனங்களை ஏற்படுத்தக் கூடியது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஹறாத்தை தடைசெய்யக் கோருகின்ற உரிமை எல்லோருக்கும் இருக்கின்றது. என்பதை இங்கு யாரும் மறுக்க முடியாது அதை ஒரு தனிநபர் கூட செய்யலாம், .
இந்த நிகழ்வை தடுத்து நிறுத்தியதில் எந்த சுயநல வியாபார கோபங்களுமில்லை,அரசியல் பலிவாங்கல்களுமில்லை என்று உங்கள் மனச்சாட்சி கூறினால் தயவுசெய்து அல்லாஹ்வுக்கு பயந்தவர்களாக உங்களது பக்க நியாயத்தையும் அந்த நிகழ்வை தடுத்து நிறுத்திய காரணத்தையும் எதுவுமறியாத அப்பாவி மக்களாகிய எங்களுக்கு தெளிவுபடுத்தி உங்களது நற்பெயரையும் காத்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுகொள்வதுடன்
கல்முனைக்குடிப்பள்ளிவாசல் சாந்தாங்கேணிக்கு உரிமைகொண்டாடி இந்த நிகழ்ச்சியைத் தடுக்க முற்பட்டதை போன்று கல்முனையில் இருக்கின்ற ஏதாவது ஒரு கோயில் நிர்வாகமோ அல்லது தேவாலய நிர்வாகமோ இந்த நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என உங்களைபோன்று ஒற்றைக்காலில் நின்டிருந்தால் அது எப்படியான முடிவை தந்திருக்கும் என்பதை கலாநிதியான நீங்கள் அறியாமல் இல்லை. ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் என்ற முறையில் ஹறாத்தைத் தடுக்க வேண்டுகோள் விடுக்கலாம். அந்த உரிமை எல்லாப்பள்ளிவாசல்களுக்கும் எல்லா முஸ்லிம் சகோதர்களுக்கும் உண்டு, ஆனால் நீங்கள் சந்தங்கனியை சொந்தம் கொண்டாடி இதனை நிறுத்த முற்பட்ட போது அமைதியாக விட்டுவிட்டு தனது பல லட்சம் நஷ்டத்தையும் தாங்கிக்கொண்டு வெளியேறிய சகோதர்கள் இதனை வேறுதிசைக்கு மாற்றியிருந்தால் இதன் பின்விளைவுகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த பள்ளிவாசலின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் கொடியேற்ற நிகழ்வில் நடைபெறும் சீரழிவை விட , (அங்கு உண்மையில் சாஹுல் ஹமீத் வலியுல்லாஹ் அவர்களை தர்சிக்க செல்வோர்கள் தவிர )இதே மைதானத்தில் வானொலிகள் நடாத்திய இசை நிகழ்ச்சிகளில் நடைபெறும் சீரழிவுகளை விட தயா கமகே அவர்களால் இதே மைதானத்தில்நடாத்திய சீரழிவை விட அதிக சீரழிவுகள் இந்த நிகழ்ச்சியில் நடக்கும் என நீங்கள் அறிந்திருந்தால் அதனை மக்களுக்கு தயவு செய்து அறியத்தாருங்கள் என அன்புடன் கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக தலைவர் வைத்தியர் அஸீஸ் அவர்களிடம் வினயமாக வேண்டிக்கொள்கிறேன்.
நூறுல் ஹுதா உமர் 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar