இலங்கையில் புகலிடம் தேடும் அகதிகள்- ஒரு சிறு விளக்கம்


-------------------------------------------------------------------------
தற்போது நடைமுறையில் இருக்கும் 1948 ஆம் ஆண்டின் 20 ஆவது இலக்க  குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் பிரகாரம் வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் பிரஜா உரிமை அல்லது நிரந்த வதிவிட உரிமை (PR) கோருவது மிகவும் சிக்கலான அல்லது சாத்தியமே அற்ற ஒரு பொறிமுறை. அதேநேரம் ஐநாவின் 1951 ஆம் ஆண்டு அகதிகள் சாசனத்தில் இலங்கை அரசு இதுவரை கையொப்பம் இடவில்லை. எனவே இலங்கையில் தரையிறங்கும் ஒரு அகதி முறைப்படி இலங்கை அரசிடம் அகதிகள் அந்தஸ்து (Refugee Status) அல்லது புகலிட கோரிக்கையை ( Asylum)  விண்ணப்பிக்கவும் முடியாது.

ஆனாலும் இலங்கையில் தரையிறங்கும் அகதியின் பாதுகாப்பு மற்றும்  பராமரிப்புக்குரிய பொறுப்பை இலங்கை அரசு நேரடியாக ஐநாவின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்திடம்  (UNHCR) ஒப்படைத்து இருக்கிறது. இதற்காக UNHCR இருக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஒரு உத்தியோகபூர்வ ஒப்பந்தமும் இருக்கிறது.

அகதிகளை பொறுப்பேற்கும் UNHCR அவர்களுக்குரிய உணவு மற்றும் உடை போன்றவற்றுக்குரிய ஒரு கொடுப்பனவை வழங்கும் அதேநேரம் அவர்களுக்குரிய தங்குமிடத்தையும் தெரிவு செய்கிறது. UNHCR இன் பொறுப்பில் இருக்கும் அகதிகளுக்கு இலங்கை ஒரு தற்காலிக தங்குமிடமாகும் (Transitional Location).

இந்த இடைக்காலத்தில் குறித்த அகதிகள் சார்பாக ஐரோப்பிய மற்றும் அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளிடம் புகலிட அந்தஸ்தை UNHCR விண்ணப்பிக்கும்.
இவர்களுக்குரிய புகலிட அந்தஸ்தை ஏதாவது ஒரு நாடு பொறுப்பேற்றதும் அந்த அகதிகளுக்குரிய பயண ஆயத்தங்கள், ஆவணங்களை தயார்படுத்தல், பயிற்சிகள் ,வசதிகள் போன்றவற்றுக்காக  ஐநாவின் புலம்பெயர் நிறுவமான IOM இடம் ஒப்படைக்கும்.

இந்த இடைக்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து UNHCR இன் பொறுப்பில் இருக்கும்  அகதிகளை வெளியேற்ற இலங்கை அரசாங்கம் UNHCR இடம் கோரமுடியும். அப்படி கோரப்பட்ட அகதிகளை தற்காலிகமாக இன்னுமொரு நாட்டில் தங்க வைப்பதற்காக UNHCR பல நாடுகளிடம் விண்ணப்பித்து அவர்களை அதில் ஏதாவது ஒரு நாடு இவர்களை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டால் அந்த குறித்த நாட்டுக்கு இவர்களை அனுப்பி வைக்கும்.

நேற்று இனவாதிகளால் கல்கிசையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ரோஹிங்கியா அகதிகள் பூசாவில் இருப்பதே தற்போதைய நிலையில்  பொருத்தமானது.  மனதிற்கு நெருடலாக இருந்தாலும் இதுவே பாதுகாப்பானது என்று நினைக்கிறேன்.

நாங்கள் எங்கள் நாட்டில்  வாழ்ந்ததை விட இந்த இடம் எவ்வளவோ வசதியாக இருக்கிறது எங்களை இங்கிருந்து வெளியேற்றி விடாதீர்கள் என்று பூசா முகாமில் இருந்த ரோஹிங்கியா அகதிகள் தன்னிடம் மன்றாடி கேட்டதாக சில வருடங்களுக்கு முன்னர் ஒரு UNHCR பிரதிநிதி என்னிடம் குரல் தழு தழுக்க கூறியது இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

DILSHAN MOHAMED

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்