மியான்மரில் முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் ஒருதலைப்பட்சமாக தற்காகாலிக போர் நிறுத்தம்

மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் வடக்கு ரக்கீன் மாகாணத்தில் நிலவி வரும் மனிதாபிமானமற்ற நெருக்கடியை மட்டுப்படுத்த ஒருதலைப்பட்சமாக தற்காகாலிக போர் நிறுத்தம் அறிவித்துள்ளார்கள்.

அரகன் ரோஹிஞ்சா சால்வேஷன் ராணுவம் (அர்சா) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்கள் இந்த போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்கள். மியான்மர் ராணுவமும் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டுமென்று என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

ஆகஸ்டு 25-ஆம் தேதி அர்சா கிளர்ச்சியாளர்கள் காவலர்களை தாக்கினர். இந்த சம்பவம் அவர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க காரணமாக அமைந்தது.

அப்போதிலிருந்து, ஏறத்தாழ 290,000 ரோஹிஞ்சாக்கள் ரக்கீன் மாகாணத்திலிருந்து தப்பி சென்று வங்கதேசத்தின் எல்லை பிரதேசங்களில் அடைக்கலம் புகுந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மியான்மரிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிஞ்சாக்களுக்கு உதவி செய்ய உடனடியாக உதவி குழுக்களுக்கு 77 மில்லியன் டாலர்கள் (58 மில்லியன் யூரோ) தேவைப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தின் கடலோர பகுதியான காக்ஸ் பஜார் பகுதிக்கு புதிதாக வரும் ரோஹிஞ்சாக்களுக்கு பெரும் அளவில் தண்ணீர், உணவு பொருட்கள் மற்றும் சுகாதார உதவிகள் தேவைப்படுவதாகவும் ஐ.நா கூறியுள்ளது

பெளத்த மதம் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் வசிக்கும் நாடற்ற சிறுபான்மை இஸ்லாமிய ரோஹிஞ்சாக்கள், ரக்கீன்மாகாண பெளத்தர்கள் தங்கள் மீது மிருகத்தனமான வன்முறையை ஏவுவதாகவும், தங்களது கிராமங்களை கொளுத்துவதாகவும் கூறுகிறார்கள்.

மியான்மர் அரசு இதனை மறுத்துள்ளது. தாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறது.

சனிக்கிழமை தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த அர்சா, மனிதாபமான அமைப்புகளை தங்கள் உதவி பணிகளை மீண்டும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

கிளர்ச்சியாளர்களின் போர் நிறுத்தம் குறித்து இதுவரை மியான்மர் அரசு கருத்து தெரிவிக்கவில்லை.

தப்பிவரும் ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிப்பதாக காக்ஸ் பஜார் பகுதியில் இருக்கும் உதவி குழுக்கள் கூறுகின்றன. ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் சாலை ஓரங்களில் உணவுக்காக காத்திருப்பதையும், உணவு வண்டிகள் வரும் போது அதன் பின்னால் அவர்கள் ஓடுவதையும் தாங்கள் பார்த்ததாக அந்த பகுதியில் இருக்கும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் போது ஒருவர் மயங்கி விழுந்ததை தான் பார்த்ததாக ஏ.பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கூறுகிறார்.

வங்கதேசத்தில் இருக்கும் ஐ.நா ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் வாட்கின்ஸ், "உடனடியாக 60000 தங்குமிடங்களும், பெருமளவில் உணவுப் பொருட்கள், தண்ணீர், சுகாதார உதவிகளும் தேவைப்படுகிறது. மனநல நிபுணர்களும் தேவைபடுகிறார்கள். குறிப்பாக, பாலியல் வன்முறைக்கு உள்ளானவர்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன " என்றார்.

தாங்கள் பாதுகாப்பு அதிகாரிகளாலும், பெளத்த இளைஞர்களாலும் தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் ரக்கீன் மாகாணத்திலிருந்து தப்பித்த ரோஹிஞ்சாக்கள் விவரித்தார்கள்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்