BREAKING NEWS

ரணிலின் அரசை வீட்டுக்கனுப்ப ஒன்றுபடுமாறு அறைகூவல் விடுக்கிறார்


-முன்னாள் அமைச்சர் அதாவுள்லாஹ்-

-எம்.வை.அமீர்-

கடந்த பதினாறு வருடங்களுக்கு முன்னர் மிகதீர்க்க தரிசனமாகரணில் விக்ரமசிங்க செலுத்தும் வாகனத்தில் ஏறவேண்டாம் என்று மறைந்த தலைவர் அஷ்ரப் கூறினாரோ அன்றிலிருந்து அந்த தலைவனின் வேண்டுகோளை தான் தனது சகல முன்னெடுப்புகளிலும் முன்னிலைப்படுத்துவதாக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுள்லாஹ் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலை மற்றும் நிகழ்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நெற்றிக்கண்” அரசியல் விவாதமேடை எனும் தலைப்பிலான ஊடக சந்திப்பு ஒன்றினை 2017-08-16 ஆம் திகதி அக்கரைப்பற்றில் உள்ள அவரது கிழக்குவாசல் வாசஸ்தலத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வுகளை ஊடகவியலாளர் பஹத் ஏ மஜீத் நெறிப்படுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் அதாவுள்லாஹ்மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்த காலம் ஐக்கிய தேசியக்கட்சியின் அட்சி நிலவியகாலம் அந்த சந்தர்ப்பத்தில் இருந்த பிரேமதாச போன்ற தலைவர்களைக் கொண்டு சமூகம் சார்ந்த பல விடயங்களை சாதித்திருந்தபோதிலும் ரணில் விக்ரமசிங்க விடயத்தில் தான் சார்ந்த சமூகத்துக்கு இறுக்கமான உத்தரவை இட்டிருந்தார்.

அவர் ஏன் அவ்வாறு தீர்க்க தரிசனமான முறையில் உத்தரவிட்டிருந்தார் என்பதை அவரது உத்தரவை மீறியதன் பிரதிபலன்களை தற்போது இந்த நாடுகுறிப்பாக முஸ்லிம்கள் அடைந்துவரும் பின்னடைவுகளையும் எடுத்துக்கூறினார்.
தேசிய காங்கிரசைப் பொறுத்தமட்டில் தாங்கள் மறைந்த தலைவரின் கொள்கையில் இருந்ததால் கணிசமான அடைவுகளைப் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இன்றைய சூழலில் ஐக்கிய தேசியக்கட்சியுடைய கூட்டு என்கின்ற விடயம்தான் இந்த நாட்டினுடைய எல்லாப்பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளதாக நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் உணர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

தன்னுடைய நிலைப்பாடு ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் தலைமையிலான அரசை மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக வீட்டுக்கு அனுப்புகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நாட்டுக்கு நல்லதாக அமையும் என்றும் கூறினார்.

மைத்திரிபால சிறிசேன தேர்தலிலே குதித்தபோது அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்தார் அவருக்கு வாக்கு வங்கிகள் இருக்கவில்லை. என்றும் ஆகவே மகிந்த ராஜபக்சவுக்கு வாக்குப் போடாமல் விட்டால் வரப்போவது மைத்திரிபால சிறிசேன என்று பலர் எண்ணியிருந்தாலும் கூட வரப்போவது ரணில் என்பதை தேசிய காங்கிரஸ் உணர்ந்திருந்தது. எனவே ரணிலின் வாக்குகளால் மைத்திரிபால சிறிசேனவை முன்னே அனுப்பி பின்கதவால் ரணில் வந்து இந்த நாடு வெளிநாட்டு சக்திகளுனுடைய ஒரு களமாக அவர்களது ஆட்டங்களுக்கு ஆடக்கூடிய மக்களாக எங்களை ஆக்க முற்படுகின்றனர்.

மகிந்த ராஜபக்ச இந்தநாட்டை ஆட்சி செய்தபோது அமெரிக்காவுக்கு அவர் அடிபணியவில்லை.அந்நாடு அவரை எதிர்த்தது. அதேபோன்று நோர்வேயுடன் ரணில் ஒப்பந்தங்களைச் செய்து நாட்டில் சின்னாபின்னங்களை ஏற்படுத்தியதனால் அவர்களையும் மகிந்த ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலையும் நிராகரித்தார். பாலஸ்தீனத்தோடு இறுக்கமான உறவை வைத்திருந்தார். முஸ்லிம் நாடுகளுடன் இறுக்கமான உறவைக் கொண்டிருந்தார். மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்ததன் காரணமாக் அங்கு முன்னிலைப்படுத்தப்பட்டிருன்தது ரணில் என்பதால் ரணில் வந்தால் என்ன நடக்கும் என்பதை நாங்கள் ஒரு கூட்டத்திலும் கூறியிருந்தோம் அவைகளை நாங்கள் இப்போது அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம்.

இன்றைய சூழல் வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு நாட்டுமக்கள் அவதியுறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதுமுஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதில் இரண்டறக்கலந்து மக்களுக்கு நியாயமான விடயங்களை சொல்லவேண்டும் என்பது என்னுடைய அவா. குறிப்பாக என்னுடைய பார்வையிலே அரசியல்வாதிகள் மாத்திரம் முஸ்லிம் சமூகத்துக்கோ ஏனைய சமூகங்களுக்கோ தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் பொறுப்பானவர்கள் அல்ல. அரைவாசிப் பொறுப்புக்களை ஊடகவியலாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் தவறு செய்கின்றார்கள் என்று கூறுகின்ற ஊடகவியாலாலர்கள் அரசியல்வாதிகளின் கடந்தகால செயற்பாடுகளை மீளாய்ந்து அவர்களின் செயற்பாடுகளில் உள்ள சாதகபாதகங்களையும் வெளிக்கொணரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய தேசியக்கட்சியினால் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தினூடாக கொண்டுவரப்பட்ட மாகாணசபை சட்டத்தையும் 20 வது திருத்தச்சட்டத்தையும் கொண்டுவருவதற்கு அரசு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது இதனூடாக ஏற்கனவே ஆட்சியில் இருக்கின்ற மாகாணசபைகளின் ஆட்சிகள் நீடிக்கப்படக்கூடிய  சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது மாகாணசபைக்கு இருந்து வரும் அதிகாரங்கள் மீண்டும் கொழும்பு நோக்கி செல்கிறது என்ற விமர்சனம் தொடர்பாக வினவப்பட்டபோது;

தலைவர் அஷ்ரப் ஐக்கியதேசியக் கட்சியை வெறுத்ததற்கு இந்த 13 வது திருத்தச்சட்டமும் ஒரு காரணம் என்றும் இந்த சட்டத்தினூடாக இந்த நாட்டினுடைய இறைமை மீறப்பட்டுள்ளதாகவும் நாட்டிலுள்ள எல்லா மக்களும் மாகாணசபையை கோரவில்லை என்றும் இது இந்தியா போன்று பெரிய நாடு இல்லை என்றும் கேட்காத ஏழு மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்ததாகவும் இந்தியாவுடைய தேவைக்காக இவ்வாறு செயற்பட்டதாகவும் அதனூடாக நாட்டுக்கு அதிக செலவீனங்களை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

தற்போது அவர்கள் கொண்டுவரும் திருத்தச்சட்டமானது என்ன காரணங்களுக்காக மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதோ அதனைப்பறிக்கின்ற சட்டமாகவே அது அமையும் என்று தெரிவித்தார்.

கடந்த காலத்தில் கிழக்குமாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பொதுமுன்னணியின் ஆட்சி இருந்த போதிலும் தேர்தலின் பின்னர் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக தமிழ் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். இவ்வாறு மக்களுடைய ஆணையை புறம்தள்ளி ஆட்சியை நடத்துகின்ற போதிலும் மக்களுடைய ஜனநாயக உரிமையை பின்போடுவது ஆரோக்கியமானதல்ல என்றும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன வெளிப்படையான முன்மொழிவுகள் எதனையும் வைத்திராத போதும் தேசிய காங்கிரஸ் ஏதாவது முன்மொழிவுகளை வைத்துள்ளதா என வினவப்பட்டபோது:

அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை என்றும் வேறு சிலரின் தேவைகளுக்காக அரசியலமைப்பை மாற்ற முனைவதாகவும் இந்த விடயங்களில் நோர்வேயின் பிரதிநிதிகள் ஆலோசகர்களாக இருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ்கூட அவர்கள் கூறுவதை கேட்டுக்கொண்டு வந்ததாகவும் அவர்கள் கூறுவதைக் கேட்டுக்கொண்டு வருவதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு முஸ்லிம் சமூகம் ஏன் வாக்களித்தார்கள் என தனக்குப் புரியவில்லை என்றும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன கூறியிருந்தார்கள் என்பதை கூறாமல் மக்களை பிழையாக சில முஸ்லிம் தலைவர்கள் வழிநடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டும் என்று அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லியிருந்ததாகவும் ஜனாதிபதி முறைமை இல்லாதுபோனால் சிறுபான்மையினர் அடையப்போகும் அநியாயங்களை இவர்கள் அறிவார்களா?அதிகாரம் உள்ள ஜனாதிபதி இருப்பதனூடாக மட்டுமே சிறுபான்மையினரின் அபிலாசைகளை அடைந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருக்கும்போதுதான் அவர் எல்லா சமூகங்களினதும் தயவும் தனக்கு அவசியம் என்று எல்லோரதும் தேவைகளை நிறைவேற்றக்கூடிய ஜனாதிபதியாக செயற்பட முற்படுவார். இதற்கு உதாரணாமாக அஷ்ரப் அவர்கள் விகிதாசாரத்தில் 12.5% விகிதமாக இருந்ததை 5% வீதமாக மாற்றிக்கொன்டதன் பயன்களை விபரித்தார். ஜனாதிபதி முறை என்பது சிறுபான்மையினருக்குக் கிடைத்த ஒரு பாதுகாப்பாகும்.  அதேபோன்று விகிதாரச தேர்தல்முறையில் மாற்றம். இவ்வாறானதொரு சூழலில் சிறுபான்மையினரைப் பாதிக்கக்கூடிய புதிய அரசியலமைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது அதனை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் முறையிலும் மாற்றம் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது இவ்வாறு மாற்றம் வருகின்றபோது ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் நிலை என்னகுறித்த திருத்தத்துக்கு ஆதரவளிப்போர் இவைகள் தொடர்பாக என்ன கூறுகிறார்கள் என்று கேள்வியெழுப்பினார்.

முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பாக வினவப்பட்டபோது;
முஸ்லிம் கூட்டமைப்பு பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் என்ற பட்டறையில் உருவானவர்கள் அன்று நோர்வே ஒப்பந்தத்தின் பின்னரே நான் முஸ்லிம் காங்கிரஸை விட்டு வெளியேறினேன் அவர்களின் செயற்பாட்டுக்கு எதிராக பாதயாத்திரை சென்றேன் பாராளமன்ற பகிஸ்கரிப்பு செய்தோம். அவைகள் எல்லாம் எங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக அல்ல ரணிலுடைய மற்றும் வெளிநாடுகளினுடைய வலைகளுக்குள் ஹக்கீம் மாட்டிக்கொண்டதலேயே நாங்கள் வெளியேறவேண்டி ஏற்பட்டது. அதனூடாக பல்வேறு அரசியல் மாற்றங்கள் வருவதற்கு நாங்கள் காரணமாக இருந்தோம் என்றார்.

ஹக்கீமை வீழ்த்துவது எனது நோக்கமல்ல என்று தெரிவித்த அதாவுள்லாஹ்,அவரை மக்கள் புரிந்துகொண்டால் போதும் என்றும் தெரிவித்தார். ஒருவரையொருவர் வெட்டுவதற்கு கூட்டமைப்பு அமைக்கிறோம் என்றால் அது உரிய இலக்கை அடையாது என்றும் கூட்டு என்று ஒன்று ஏற்பட்டால் நாங்கள் மக்கள் சார்ந்த விடயங்களை பேசி ஒரு முடிவுக்கு வரலாமேயோளிய அது தேர்தல் கூட்டாக அமையாது என்றும் தெரிவித்தார்.

ரணிலுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டிருப்பவர்களுடன் அரசியல் தீர்வு பற்றி பேசலாமே தவிர அரசியல்கூட்டு என்பது சாத்தியப்படாது என்றும் தெரிவித்தார்.
கரையோர மாவட்டம் தொடர்பாக கருத்துத்தெரிவித்த அதாவுல்லாஹ் முதலில் கரையோர மாவட்டத்துக்கான காணி மற்றும் அதன் எல்லைகள் தொடர்பாக முடிவுக்கு வரவேண்டும் என்றும் அந்த காரியாலயம் எங்கு வந்தாலும் பிரச்சினை இல்லையென்றும் கடந்தகாலங்களில் சிறிது காலம் மாவட்டக்காரியாலயம் அக்கரைப்பற்றிலும் இயங்கிய வரலாறு இருப்பதாகவும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயம் தொடர்பாக விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் இந்த பிரச்சினைக்கு எப்போதே தீர்வு கண்டிருக்கமுடியும் என்றும் 1987ஆண்டுக்கு முன் அந்தப்பிரதேசம் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு பிரிப்புக்களை செய்வதற்கு தான் முற்பட்டதாகவும் அதற்கு அப்பிரதேச அரசியல்வாதிகள் தடையாக இருந்ததாகவும் இன்று ஏற்பட்டுள்ள நிலைக்கு அவர்களே காரணம் என்றும் எது எப்படியானாலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு பிரிப்புக்களையே தான் விரும்புவதாகவும் சரியான நேரத்தில் பிழையானதையோ பிழையான நேரத்தில் சரியனதையோ செய்யமுடியாது என்றும்

தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar