இனவாதம் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது


   - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டம்

( மினுவாங்கொடை நிருபர் )
   
   இனவாதத்தைப் பரப்பி சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டி விடுவதன் மூலம்,  அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கைப்பற்ற முடியாது என,  புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
   அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 
   முப்பது வருட கால பயங்கரவாத யுத்தம் நாட்டின் நிலையான சமதானத்தை சீர்குலைத்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அது சரியான முறையில் இன்றுவரை  நிலைநாட்டப்படவில்லை. ஆனால், அதற்கான முயற்சிகள் இன்று வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
   இவ்வாறான சூழ்நிலையில்,  இனவாதம் சமூக வலையத்தளங்கள் ஊடாக மிக மோசமான முறையில் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும்  சட்டதிட்டங்கள் எம்மத்தியில் இல்லாமல் இருக்கின்றன.
   இந்நிலையில், இனவாதத்தைப் பரப்பி,  சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் முயற்சி செய்து வருகின்றனர். கிழக்கு மாகாணத்திலும் இந்நிலை உருவாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும். 
   தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதன் ஊடாக, தமது அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ள சிலர் முனைகின்றனர். தேங்காய்ப் பூவும் பிட்டும் போல் இருந்த தமிழ் - முஸ்லிம் மக்களிடையே,  தற்போது பாரிய விரிசல்கள்  ஏற்பட்டுள்ளன. இதனைச் சீர் செய்து பழைய நிலைக்கு இரு சமூகங்களுக்கிடையிலான உறவைக் கொண்டு செல்வதற்கு,  சமூகத் தலைவர்களுக்கும்,  அரசியல்வாதிகளுக்கும் இன்று பாரிய பொறுப்புள்ளது.  
   யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் - சிங்கள மக்களிடையேயான உறவை மேம்படுத்த,  பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசால் முன்னெடுக்கப்பட்டன. எனினும், போரால் விரிசலடைந்த தமிழ் - முஸ்லிம் மக்களிடையிலான உறவைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகள்,  இன்னும் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை  என்றார். 

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்