ஜனவரி முதல் ஜூலை வரை ரூபா 46.7 மில்லியன் அபராதம் அறவீடு( மினுவாங்கொடை நிருபர் )

   கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப் பகுதியில், கம்பஹா மற்றும் கொழும்பு  மாவட்டங்களில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின்போது, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நியதிகளை மீறிச் செயற்பட்ட வர்த்தகர்களிடமிருந்து 46.7 மில்லியன் ரூபாவை அபராதமாக அறவிட முடிந்ததாக, அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்துள்ளார். 
   கம்பஹாவில் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்ட அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், 1.5 கோடி ரூபா பெறுமதியான காலாவதியான 50 ஆயிரம் கிலோ வெள்ளைப்பூடுகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட வர்த்தகர் கம்பஹா மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
   கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின்போது, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலாவதியான 17,500 கிலோ கிறாம் வெள்ளைப்பச்சை அரிசி, இறக்குமதி செய்யப்பட்ட 25 கிலோ சம்பா அரிசியுடன் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதனுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு,  அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 10 ஆயிரம் ரூபா வீதம்  அபராதம்  அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
   இது தவிர, கெந்தகம் கலக்கப்பட்ட 2.5 மில்லியன் பெறுமதியான 4,625 கிலோ கிராம் கொத்தமல்லி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைப் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
   இதுதவிர, கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள், கட்டுப்பாட்டு விலைகளை மீறி பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்தாமை போன்ற குற்றங்களைப் புரிந்த வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டு, அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
   கடந்த 2015 ஆம், 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளோடு ஒப்பிடும்போது, இந்த வருடத்திலேயே, நியதிகளை மீறி செயற்பட்ட ஆகக்கூடுதலான வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது 33 வீதமாக இம்முறை அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்