BREAKING NEWS

துவேசத்தின் பிதாமகன்:


___________________________________________

1980 களின் இறுதிப்பகுதி....

அந்த பல்கலைக்கழக கென்டீனின் பிளாஸ்டிக் கதிரையில் திடீரென ஒரு நாள் ஏறி நின்று அவன் பேசத்தொடங்கினான்....

பேசியது சோசலிஸம்... சமத்துவம் பற்றி பெரிய விரிவுரையே நடந்து முடிந்தது!

பொறியியல் துறை மாணவன் அரசியலில் அதீத ஈடுபாடு காட்டியது அதுவும் சமத்துவ கொள்கைக்காக எழுந்து நிற்பது எல்லாம் சக மாணவர்களை அவன் பால் ஈர்த்தன.

மக்கள் விடுதலை முன்னணியின் பல்கலைக்கழக மட்ட மாணவத்தலைவனாக பின்னாட்களில் அவன் உயர்ந்தான்....

பிறகு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக பணி செய்த காலங்களில் அவரது அரசியல் மாறுபட்டது....

அனாகரிக தர்மபால விட்டுச்சென்ற அரை மாத்திரைகளிலிருந்து தனது பேனாவினை தொடர்ந்தார்!

இலங்கைத்தேசத்தில் அயர்ந்து கிடந்த இனவாத தீவிரவாதத்தை கற்றோர் மத்தியிலும் தந்திரமாய் விதைத்துவிடும் வண்ணம் அவரது எழுத்துகள் அமைந்தன....

கோர யுத்தம் அவரது எழுத்துகளுக்கு எண்ணெய் ஊற்றியது!

பிறகு நேரடி அரசியலுக்கான தனது இரண்டாம் பிரவேசத்தை சிஹல உறுமய எனும் அதி தீவிர போக்குடைய கட்சி மூலம் செய்து முடித்தார்.

அதன் பிறகான அவரது அரசியல் பயணத்தின் தாக்கம் மஹிந்த அரசில் அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தது!

அளுத்கமை- தர்காநகரம் எரிய முதல் முஸ்லிம்கள் மீது படு மோசமான வெறுப்பினை உத்தியோய பூர்வமாக உமிழ்ந்து கொண்டிருந்தவர் இவர்.....

அந்த ஊர் எரிந்து சாம்பலான மறு பகலில் பசில் ராஜபக்‌ஷ தலைமையில் களுத்துரை கச்சேரியில் நடந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு அழையா விருந்தாளி நுழைந்தார்!!

அவர்தான் கலவரத்தின் நெருப்பை கக்கிய விஷநாகம் ஞானசார தேரோ.

அவரை அந்த சபைக்கு அவ்வளவு தைரியமாக பாதுகாப்போடு அழைத்து வந்தவரும் இவர்தான்!

தர்கா நகர் எரிப்பில் தொடர்பு பட்ட காடையர்கள் சிலரை உடனடியாக விடுவித்துச்செல்ல ஞானசார அந்த சபையில் தர்க்கம் செய்தார். அவர்களை விடுதலை செய்யாவிட்டால் மீண்டும் கலவரம் வெடிக்குமென்றார். கடைசியில் அவரே வென்றார்.

இத்தனைக்கும் கூடவே இருந்து அனுசரணை வழங்கியது இந்த பிதாமகன்தான்!

ஆனால் யாரோடு அரசியலில் இணைந்தாலும் ரணிலோடு இணையமாட்டேன் என்ற நீண்ட கால சபதத்தை தகர்த்தெறிந்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலோடு மேடையேறி நின்றார்!!!

மைத்ரிபாலவின் பக்கம் பலமான ஆதரவு அலை சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் வீசத்தொடங்கியபோதும் மஹிந்த அணியில் தொக்கி நின்ற ஒன்றிரண்டு சோனக அரசியல்வாதிகள் விரல் நீட்டியதெல்லாம் இவரின் மீதுதான்......

எங்கள் தலைவர் பொது சேனாவுக்கு ஆதரவென்றால் உங்கள் பக்கமிருப்பவர் அவர்களை விட ஆபத்தானவரே என்றனர்!!

மஹிந்தவின் மீதான சிறுபான்மையினரின் அப்போதைய அதீத வெறுப்பு இவரது பாத்திரத்தை கண்டு கொள்ளவேயில்லை! அல்லது கண்மூடியிருந்தார்கள் என்றும் சொல்லலாம்!

சர்ப்பத்தை யார்தான் வீட்டுக்குள் வளர்ப்பார்கள்!!

ஆடு மாடு கோழி மான் மரை என வருகிற போது மறைந்து நெளிந்து வருகிற பாம்பைப்போல தந்திரமாக அந்த மாற்றத்திற்கான காற்று வீசிய காலத்தில் நல்லாட்சி முகாமுக்குள் தஞ்சமடைந்த இனவாத சர்ப்பமே இவரென்பதில் மிதவாத அரசியலாளர்களுக்கு நல்ல தெளிவு இருந்தது!

2020 ஜனாதிபதி கனவு இவரை தொற்றி கொள்ள தனது தீவிர இனவாத சட்டையை களற்றி வைத்து விட்டு கொஞ்சம் மிதமான சட்டையை மாற்றிக்கொண்டார்!

இந்த அரசில் முன்னரைப்போல பகிரங்கமாக இனவாத விசத்தை கக்க வெளிவரவில்லை!

ஆனால் அந்தரங்கமாக அனைத்தும் நடந்தன!

அவ்வப்போது ஞானத்தை தூண்டிவிடுகிற நாசகார வேலைகளின் பின்னாலும் தக்க தருணத்தில் அவரைப்பாதுகாக்கும் அரணாகவும் இவரே தொழிற்படுகிறார்!

ஆட்சிகளையும் தனக்கு விருப்பமான காட்சிகளையும் மாற்றிக்கொள்ள ஞானம் தனக்கு பயன்படுவார் என மீண்டும் கனவு காண்கிறார்!

ஞானத்தை இயக்குகிற இயக்குனர்களில் இவரும் ஒருவர் !

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் அஜன்டா இருப்பது போல இவரது ஜனாதிபதி கனவுக்கு "தொகுக்கப்படும் இனவாதம்" உதவுமென நம்புகிறார்!

இலங்கையில் இதுவரை இனவாதம் சிலவேளை தோற்றும் பலவேளைகளில் வென்றுமிருக்கிறது!

2020 ல் இனவாதம் மீண்டும் வெல்லக்கூடும்!

அதில் குளிர்காயப்போகிற ஜனாதிபதி
சம்பிக்கவா, கோட்டாவா, சஜித்தா அல்லது வேறு யாரோவா என்பதே கேள்வி.

இப்போதைக்கு ஏன் இவரைப்பற்றி இவ்வளவு எழுத்தென்று கேட்டால்; ஞானம் மறைந்திருப்பதாக சொல்லப்படுகிற ஐதீகங்களில் இவரது வீட்டையும் சொல்கிறார்கள்!

விடிந்தால் எல்லாம் வெளிக்கும்!
வெளித்தே ஆகவேண்டும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar