BREAKING NEWS

அஸ்மின் அவர்களின் அறியாமையைக் கண்டு கவலைப்படுகின்றோம்

....

வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அவர்கள் அண்மையில் அவரது தனிப்பட்ட கருத்து என்றுகூறிக்கொண்டு, வடக்கும் கிழக்கும் இணைத்திருக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.
அதற்கு அவர்கூறும் காரணம் சிங்களவர்கள் தமிழ் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பூமிகளை அடாத்தாக பிடிக்கின்றார்கள் என்ற காரணமாகும்.
அந்த அத்துமீரலை தடுப்பதாக இருந்தால் வடக்கும் கிழக்கும் இணைத்திருந்தால்தான் தடுக்கமுடியும் என்றும் அவரது பக்கநியாயத்தையும் கூறியுள்ளார்.

அதேநேரம் வடக்கும் கிழக்கும் இணைவதினால் முஸ்லிம் சமூகத்தின் இனவிகிதாசாரம் பாதிக்கப்படும் என்பதையும் ஒத்துக்கொள்கின்றார்.
அதன் மூலம் ஏற்படும் இழப்புகளுக்கு பதிலீடாக, சட்ட ஏற்பாடுகளின் மூலம் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று சில தீர்வுகளையும் முன்வைத்துள்ளார்.

அப்படியென்றால் ஒன்றினைந்த இலங்கை நாட்டுக்குள் சட்ட ஏற்பாடுகள் மூலம் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டு தமிழர்கள் வாழ்வதை விரும்பாமல்,  எங்களுக்கு வடக்கையும் கிழக்கையும் இணைத்து சமஸ்டி அதிகாரம் தாருங்கள் என்று தமிழர்கள் கேட்பதின் நியாயத்தை அஸ்மின் அவர்கள் புரிந்து கொண்டாரோ தெறியாது.

சிங்கள மக்களுடன் சட்டஏற்பாடுகளை செய்து கொண்டு தமிழ் மக்கள் வாழமுடியாது என்றால், முஸ்லிம் மக்கள் தமிழர்களுடன் சட்ட ஏற்பாடுகளை நம்பி எப்படி வாழலாம் என்று அவரினால் கூறமுடியுமா?  என்ற கேள்வியும் அவரிடம் கேட்கபடவேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் சிங்கள சமூகத்தை விட, ஆயுதம் ஏந்திய தமிழ் போராளிகளினால்தான் நமது சமூகம் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்திருந்தது, அதிர்ஷ்ட வசமாக இந்த ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்திராது விட்டால் இன்று முஸ்லிம்களின் பாடு அதோ கதியாகத்தான் இருந்திருக்கும்.
ஆயுதங்களை வைத்துக்கொண்டு முஸ்லிம்களை பந்தாடியபோது எந்த தமிழ் சமூக தலைவர்களும் அதனை கண்டித்த வரலாறுகளும் கிடையாது,
இன்றும் அதே நிலைதான் தொடர்ந்து கொண்டும் வருகின்றது.

இந்த நிலையில் சிங்களவர்கள் நிலத்தை பிடிக்கின்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக வடகிழக்கை இணைத்து பாதுகாப்பை தேடுவது என்பது சிங்கத்துக்கு பயந்து புலியிடம் தஞ்சமடைவதை போன்ற செயலுக்கு ஒப்பானது ஆகும், என்பதை அஸ்மின் அவர்கள் புரியாமலிருப்பது ஆச்சரியமான விடயம்தான்.

இன்றும் சிங்கள மக்களினால் சில இனவாத செயல்பாடுகள் வடகிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றது, அதனைக் கூட கண்டிப்பதற்கு வடக்கிலிருக்கும் முதலமைச்சருக்ககோ அல்லது கிழக்கில் இருக்கும் முதலமைச்சருக்கோ, இலங்கையைின் எதிர்க்கட்சி என்ற பெரும் பதவியை வைத்திருக்கும் சம்பந்தன் ஐயாவுக்கோ முடியாமல் உள்ளது என்றால், இப்படிப்பட்டவர்கள் வடக்கும் கிழக்கும் இணைந்ததன் பிற்பாடு தீர்வைப் பெற்றுத்தருவார்கள் என்று நம்புவது என்பது ஏற்புடைய விடயமாக தெறியவில்லை.

இன்று நடைமுறையில் இருக்கும் எந்தமாகாண சபையிலும் முஸ்லிம்கள் பேசும்பொருளாக இருக்கவில்லை, கிழக்கில் மட்டும்தான் நமது அதிகாரம் ஓரளவு இருக்கின்றது அந்த அதிகாரம்கூட வடக்கும் கிழக்கும் இணைந்தால் இல்லாமல் போய்விடும் என்பது மட்டுமல்ல,  தமிழர்களின் அரசியல் அதிகாரமும் கூடுகின்றது, அதன் காரணமாக முஸ்லிம்கள் சிறுபாண்மையிலும் சிறுபாண்மையாக மாற்றப்படுவார்கள்.
இதனை சட்டஏற்பாடுகளின் மூலம் சரிசெய்துவிடலாம் என்ற கருத்து பச்சைத்தண்ணீரில் பலகாரம் சுடுவதற்கு சமமான செயலாகும்.

அதே நேரம் வடக்கு கிழக்கு இணைப்பை பாகிஸ்தான் பிரிவினையோடு ஒப்பிட்டு பேசியிருந்தார், அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பதை வரலாற்றை தெளிவாக படித்திருந்தால் புரிந்திருக்கும்.

பாகிஸ்த்தான் பிரிந்து போக சதி செய்தவர்கள் காந்தியும் நேருவுந்தான் என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்களோ தெறியாது. அது ஒரு திட்டமிட்ட சதி என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

பாகிஸ்தான் பிரிந்தால்தான் இந்துக்கள் நாடு ஒன்றை அமைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று கணக்குபோட்டுத்தான் இந்த சதியை செய்தார்கள்.
முகமதலி ஜின்னா அவருடைய நாற்பது வருட அரசியல் வாழ்க்கையிலே முப்பது வருடங்கள் இந்தியா எக்காரணம் கொண்டும் பிரியக்கூடாது என்று வாதாடியவர், கடைசி பத்து வருடங்கள்தான் பாகிஸ்தான் பிரியவேண்டும் என்று கூறிவந்தார்.

ஏன் கூறினார் என்றால், முகமதலி ஜின்னா ஒற்றுமையான இந்தியாவை பெறுவதற்கு வாதாடினாலும்,  தனிப்பட்ட காழ்புணர்ச்சி காரணமாக காங்கிரஸில் முகமதலி ஜின்னாவை சேர்ப்பதற்கு காந்தியும் நேருவும் எதிர்ப்பு தெறிவித்திருந்தார்கள்,
இந்த தனிப்பட்ட கோபத்தின் காரணமாகவே ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைக்க துவங்கினார்.

அந்த கோரிக்கையை முன்வைத்தால் காந்திமகான் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொள்வார் என்ற காரணத்துக்காகவே அந்த கோரிக்கையை முன்வைத்தார். ஜின்னா பல முறை இது சம்பந்தமாக காந்தியை சந்தித்து பேசி தன்னை காங்கிரஸில் சேரத்துக்கொள்வார்கள் என்றால், பாகிஸ்தான் கோரிக்கையை கைவிடுவதாக கூறியிருந்தார், அதனை அவரது நெருங்கிய நண்பர்களிடம் கூறி கவலைப்பட்டிருந்தார்.

இதனை நேருவும் காந்தியும் உள்நோக்கத்தோடு பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மையாகும்,  ஜின்னாவை  ஆத்திரமூட்டி பாக்கிஸ்தான் என்ற நாட்டை கொடுத்து அவர்களை ஒதுக்கிவிட வேண்டும் என்பதே அவர்களது என்னமாக இருந்தது.
இதனை அறிந்துதான் மௌலானா ஆசாத் போன்றவர்கள் பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார்கள். அதன் விளைவு இன்றும் கிழக்காசிய முஸ்லிம்களை ஆட்டிப்படைக்கின்றது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். இன்று பாகிஸ்தான் பிரியாமல் விட்டிருந்தால் இந்தியாவில் முஸ்லிம்கள் பலமாக வாழ்திருப்பார்கள். அது இலங்கை முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பாக இருந்திருக்கும்.
நான் வாழ்ககையில் செய்த மாபெரிய தவறு பாக்கிஸ்தானை பிரித்ததுதான் என்று தனது இறுதி நேரத்தில் நண்பர்களிடம் கூறி ஜின்னா கவலைப்பட்டார் என்பது வரலாறு.
( இது ஒரு நீண்ட வரலாறாக இருப்பதால் இத்தோடு நிறுத்திவிட்டு விடயத்துக்கு வருவோம்).

ஆக பாகிஸ்தான் பிரிவிணைக்கும், நமது வடக்கு கிழக்கு இணைப்புக்கும் சம்பந்தமில்லை., அது வேறு சூழ்நிலை, இது வேறு சூழ்நிலை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் தலைவர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்க கோருவதன் ஒரே நோக்கம் அவர்களது அரசியல் பலத்தை கூட்டுவதே என்பது சிறுபிள்ளைக்கும் தெறிந்த விடயமாகும்.
அதன் மூலம் முஸ்லிம்களின் இருப்பும் கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதும் அதே சிறுபிள்ளைக்கும் தெறிந்த விடயமாகும்.

இந்த விடயங்களை 1987ம் ஆண்டு பதியுதீன் மஃமூத் தலைமையில் சென்னை சென்ற தூதுக்குழு, அன்றிருந்த தமிழ் இயக்கங்களிடமும் குறிப்பாக தமிழீல விடுதலை புலிகளிடமும் பேசியிருந்தார்கள்.
இந்த இணைப்பின் மூலம் முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் குறைக்கப்படுகின்றது என்ற வாதத்தை நியாயமான காரணங்களை முன்வைத்து கேட்டபோது அவர்களினால் திருப்தியான பதில் அங்கே கொடுக்கப்படவில்லை, இருந்தாலும் முஸ்லிங்களுக்கு முக்காயமான அமைச்சு பதவிகளை கொடுப்போம் இன்னும் சில சலுகைகளையும் கொடுப்போம் என்று சொன்னார்களே தவிற தீர்க்கமான முடிவை அவர்கள் முன்வைக்கவில்லை என்பதை வரலாற்றை திரும்பி பார்த்தால் நமக்கு தெறியவரும்.

அதன் பிற்பாடு திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து ஒஸ்லோ வரை நடந்த பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களை மூன்றாம் தரப்பாககூட அவர்கள் அனுமதிக்கவில்லை என்ற உண்மையை நாம் மறக்கமுடியாது. அரச தரப்பாகத்தான் முஸ்லிம்கள் கலந்துகொண்டார்களே தவிர, முஸ்லிம் என்ற காரணத்தினால் அல்ல.
இதற்கெல்லாம் காரணம் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் இருந்த ஒரே விடயமான வடக்கும் கிழக்கும் அன்று இணைந்திருந்ததுதான், இணைந்ததன் பிற்பாடு முஸ்லிம்களின் தயவு தமிழ் தரப்புக்கு தேவைபடாததுதான் என்பதே முக்கிய காரணமாகும்.

இன்று ஏதோ ஒரு வகையில் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டதன் பின்தான் முஸ்லிம்களையும் மனிதர்கள் என்று மதித்து பேசவருகின்றார்கள், இந்த மதிப்பு வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த போது எங்கே சென்றது என்ற கேள்வி எழுகின்றது அல்லவா.
தங்களுடைய அரசியல் ஆதாயாத்துக்காக முஸ்லிம்களை தாஜா செய்து கொண்டு தலையை தடவி கண்ணைப்புடுங்கும் செயலாகத்தான் அவர்களுடைய அண்மைய செயல்பாடுகள் அமைந்துவருகின்றன.

இன்று கிழக்கிலே நடக்கும் சிலைவைப்பு விடயங்களைக் கூட எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சம்பந்தன் ஐயா அவர்கள் கண்டுகொண்டதாக காணவில்லை, இந்த நடவடிக்கைகள் ஒரு சதியாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் உலாவருகின்றது.

ஆகவே வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டதன் பிற்பாடு தமிழ் தரப்பினர்களால் நாம் கண்டுகொள்ளப்படவே மாட்டோம், அதன் பிற்பாடு மத்திய அரசாங்கத்திடமும், நீதிமன்றத்திடமும் நீதி கேட்டு அலைந்து தெறியும் நிலைதான் ஏற்படும் என்பதை அஸ்மின் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar