( ஐ. ஏ. காதிர் கான் )
கம்பஹா
மாவட்ட தொம்பே சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், டெங்கு நுளம்புகள்
பரவக்கூடிய வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த ஐந்து அரசாங்கப்
பாடசாலைகளுக்கு, சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், இறுதி
எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
குமாரிமுல்ல
முஸ்லிம் மகா வித்தியாலயம், மண்டாவல மகா வித்தியாலயம், தெகடன பத்மாவதி
மத்திய கல்லூரி, கிரிந்திவெல மத்திய கல்லூரி, தொம்பே சியனே மத்திய கல்லூரி
ஆகியவற்றுக்கே இவ்வாறு இறுதி சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சூழலைத் துப்புரவு செய்யுமாறும், டெங்குக்
குடம்பிகள் உற்பத்தியாகும் இடங்களை அழித்தொழிக்குமாறும்
அறிவுறுத்தப்பட்டு, இப் பாடசாலைகளுக்கு ஒரு வார காலம் அவகாசம்
வழங்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் நீதிமன்றில்
வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என, இப்
பாடசாலை அதிபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார
வைத்திய பணிமனையைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தொம்பே தொகுதியிலுள்ள 47 பாடசாலைகளில் சுமார் 30 பாடசாலைகளில்
மேற்கொள்ளப்பட்ட டெங்கு தொடர்பிலான சோதனை நடவடிக்கைகளின்போதே, இந்த ஐந்து
பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் காணப்பட்டதாக, தொம்பே
சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவு சுட்டிக் காட்டியுள்ளது.
Post a Comment