BREAKING NEWS

மஹிந்தவை ஜனாதிபதியாக்கியது முஸ்லிம்களல்ல . ஆனால் மைத்ரியை ஜனாதிபதியாகியது முஸ்லிம்களே !

மஹிந்தவை ஜனாதிபதியாக்கியது முஸ்லிம்களல்ல . ஆனால் மைத்ரியை ஜனாதிபதியாகியது முஸ்லிம்களே !
அதற்கான சன்மானமாக ......
மரிச்சுகட்டி முஸ்லிம்களை ஜும்மா தினத்திலேனும் குளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ள  நல்லாட்சி அரசு .

மலையக முஸ்லம் கவுன்சில் தலைவர் – ஏ எம் எம் முஸம்மில்
          மரிச்சுகட்டி முஸ்லிம்களின் மண் மீட்பு போராட்டம் கடந்த 26 நாட்களாக மரிச்சுகட்டி ஜும்மா பள்ளிவாயில் முன்றலில் நடந்து வருகின்றது. இப்போராட்டத்தில் நாடாளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்களின் கவனத்தை ஈர்குமுகமாகவும், எல்லைகடந்த முஸ்லிம் சகோதரத்துவத்தை உறுதி செய்து மேற்படி போராட்டத்தில் கை கோர்குமுகமாகவும் மலையக முஸ்லிம் கவுன்சில் – (UCMC) கடந்த 21ந் திகதி வெள்ளிக்கிழமை மரிச்சுகட்டிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருன்தது. மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் முன்னாள் அதிபர் ஏ எம் எம் முஸம்மில் அவர்கள், “  மஹிந்தவை ஜனாதிபதியாக்கியது முஸ்லிம்களல்ல . ஆனால் மைத்ரியை ஜனாதிபதியாகியது முஸ்லிம்களே ! அதற்கான சன்மானமாக இந்த  நல்லாட்சி அரசு மரிச்சுகட்டி முஸ்லிம்களை ஜும்மா தினத்திலேனும் குளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார் . குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அவர் ..
             “ கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப் பட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவே முஸ்லிம்களை அணிதிரட்டப்பட்டு இந் நாட்டு அரசியல் வரலாற்றில் புரட்சி மிக்கதோர்  ஆட்சி மாற்றம்  ஏற்படுத்தப் பட்டது. நல்லாட்சியெனப்படும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் இந்த விடயங்களை மிகத் தெளிவாக விளங்கியே வைத்துள்ளார்கள்.  “முஸ்லிம்களுக்கு இனிமேல் பாதுகாப்பானதோர் சூழ்நிலையை உருவாக்கித் தருவோம், இந்த நாட்டில் மத சுதந்திரத்தையும் , இன சமத்துவத்தையும் உருவாக்கி நல்லாட்சியின் மூலம் இனவாதிகளின் கொட்டத்தை அடக்குவோம்” என்ற வாக்குறுதிகளுடன் கபடத் தனமாக ஆட்சி பீடமேறிய இந்த நல்லாட்சி தலைவர்கள்,  மீண்டும் இனவாதிகளை திருப்திப் படுத்தி அடுத்து வரும் தேர்தல்களில் பெரும்பான்மை வாக்கு வங்கியை  கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்  .
         இதன் உச்சகட்டமாக கடந்த 2017 , மார்ச் மாதம், 24ந் திகதி   மகாவெளி மற்றும் சுற்றாடல் அமைச்சரும் , ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களால் கையொப்பமிட்டு வெளியிடப் பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாரம்பரியமாக முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்த சுமார் ஒரு இலட்சம் ஏக்கர் பரப்புள்ள காணிகளை “வில்பத்து இல 2”  என்று பெயரிடப் பட்டு சுவீகரிக்கப் பட்டுள்ளதால்   வடக்கு முஸ்லீம்கள் மீண்டும் நிர்கதிக்குள்ளாக்கப் பட்டுள்ளார்கள்.  குறித்த இந்த வர்த்தமானி இந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு முரணான, நடைமுறை ஒழுங்குகளுக்கு எதிரான , பொறுப்பற்ற , இனவாதமான, வெட்கக் கேடானதொரு வர்த்தமானியாகும். வில்பத்து காட்டுக்கும் மரிச்சுகட்டி பிரதேசத்திற்கும் இதுவரை காலமும் நிலரீதியாக எந்தவொரு தொடர்பும் இருந்திராத நிலையில் குறித்த வர்த்தமானியில் “வில்பத்து இல 2”    என்று பெயரிடப் பட்டிருப்பதானது துரோகத் தனமான செயலாகும்.
 

அரசாங்கத்திற்காக காணிகளை சுவீகரிக்கும் போது குறித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் தொடக்கம், பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர், விடய அமைச்சர், போன்றவர்களின் சிபாரிசு, ஆலோசனைகள் பெறப்பட்டே பகிரங்கமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப் படுத்த வேண்டும். குறிப்பாக குறித்த காணிகள் பொதுமக்களுக்கு உரியதாக இருந்தால் சுவீகரிப்பிற் கெதிராக ஆட்சேபனை தெரிவிக்கவும் , தமது சட்ட பூர்வமான ஆவணங்களை சமர்பித்து தம்பக்க நியாயங்களை எடுத்துரைத்து தமது சொத்துக்களை பாதுகாக்கும் உரிமை இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு யாப்பின் மூலமாக  குடிமக்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இவை அத்தனையையும் மீறி குறித்த வர்த்தமானி அறிவித்தல் பிரசுக்கப் பட்டுள்ளது. ஆகக் குறைந்தது தமது அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்ற அமைச்சரின் ஆலோசனை கூட பெறாத நிலையிலேயே இந்த கல்லத்தனமான வர்த்தமானி பிரசுக்கப் பட்டுள்ளது.  வில்பத்து காட்டின் புதிய எல்லை கோடுகள் மூலம் பரம்பரையாக மனிதர்கள் வாழ்ந்த பூமிப் பிரதேசம் மிருகங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. இப்பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக பாவித்த அனுபவித்த குளங்கள், நீர் ஓடைகள் , விவசாய நிலங்கள் போன்ற எதையுமே அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓடைகள் குளங்களை பாவிக்க முடியாத நிலையால் இன்று குடி நீருக்கும் , இயற்கை தேவைகளுக்கும் ( மலசலம் சுத்தம் செய்வதற்கும்) நீரில்லாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய முஸ்லிம்களின் புனித நாளான ஜும்மா தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வரும் எவருக்கும் குளித்து விட்டு வரும் நிலையை கூட இல்லாமல் செய்துள்ளது இந்த நல்லாட்சி அரசு.    
ஆகவே இந்த விடயங்கள் தென்னிலங்கையில் வாழும் எமது முஸ்லிம் சமூகத்தின் கூடுதல் அவதானத்தை  சர்வதேச அவதானத்தை பெறச் செய்வதுடன் பெரும்பாலான சிங்கள சமூகத்திற்கும் கொண்டுசெல்லப் பட்டு உண்மை நிலைகளை தெளிவுபடுத்தப் பட வேண்டும் . இந்த மண் மீட்புப் போராட்டத்தில் கட்சி இயக்க பேதமின்றி , கடந்த முப்பது வருடங்களுக்கு மேல் மீண்டும் மீண்டும் அநீதிகுள்ளாக்கப்படும் எமது வடக்கு உறவுகளுக்கு நிரந்தர த்தீர்வு கிடைக்க நாம் கைகோர்க்க வேண்டிய காலம் இதுவென உணர்ந்து செயற்பட வேண்டும்.”  என்றும் கருத்துரைத்தார்.
இக்கூட்டம் முன்னாள் கல்விப் பணிப்பாளர் அலிகான் ஷரீப் அவர்களின் தலைமையில், மவ்லவி தவ்பீக் அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதேச முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கூத்த போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளோர்களுக்காக மிக முக்கிய தேவையாக இருந்த நீர் தாங்கிகள் இரண்டு கொள்வனவு செய்வதற்காக தேவையான பண உதவியை மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் முஸம்மில் அவர்களால் அமைப்பின் தலைவர் அலிகான் ஷரீப் அவர்களுக்கு வழங்கி வைக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எம் பி செய்யத் முஹம்மத்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar