BREAKING NEWS

ஹக்கீம் ! சாணக்கியமா ? அல்லது செளகரியமா ?

NASPF Lanka !

பொதுவாக அரசியலில் இராஜதந்திரமும் தந்திரபாயங்களும் இணக்கப்பாடும் கூட்டினைவும் அவ்வப்போது ஏற்படுத்துப்படுகின்ற அரசியல் நகர்வும் முன்னெடுப்புகளும். தான் சார்ந்த சமூக அரசியலுக்கான கொள்கை கோட்பாடுகளுக்குள் நின்று சமூக நலன் சார்ந்த விடயங்களை மேற்கொள்ளும் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில்தான் இவ்வாறான சொல்லாடல்களால் அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் முஸ்லிம் அரசியலில் இவ்வாறான சொற்பிரயோகங்களை காலத்திற்கு காலம் ஏற்படும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்பவும் தங்களுடைய செளகரியத்திற்கு ஏற்பவும் முடிவுகளை எடுத்து விட்டு.சமூகத்தின் தூர நோக்கத்தின் அடிப்படையிலும் சமூகநலனையும் கருத்தில் கொண்டு எங்களுடைய தலைமை செயற்பட்டது. இது எங்களுடைய சாணக்கியம் என்று மட்டும் அறிக்கைகள் விட்டு விட்டு மக்களை ஏமாற்றி பெருமைப்படுகின்றார்களே தவிர இது எங்களுடைய செளகரியத்திற்கான செயற்பாடுகள்தான் என்று கூறிக் கொள்வதில் மட்டும் நம் தலைமைகள் பின் நிற்கின்றார்கள்.
முஸ்லிம் அரசியல் பேரியக்கமானது உரிமை அபிலாசை என்ற கோஷக் கோட்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் அங்கீகாரத்துடன் அரசியல் கட்சியாக பரிணாமித்து பயணித்தாலும் கொள்கை கோட்பாட்டை விட அவ்வப்போது அரசியலில் கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் தங்களுடைய செளகரியத்திற்கு ஏற்ப காலத்திற்கு காலம் மக்கள் தந்த ஆணையையும் அமானிதத்தையும் சமூக கடமையையும் மீறி தங்களுடைய சுய நலத்திற்காகவும் தங்களுடைய கட்சியின் இருப்பையும் பதவி மீது கொண்ட ஆசையையும் முதன்மைப்படுத்தி எடுக்கின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் கொடுக்கின்ற வரைவிலக்கணம் சாணக்கியம். என்கின்ற மிகவும் சமூகப் பொறுப்புள்ளவர்கள் போல் நின்று தப்பித்துக் கொள்வதில் மட்டும் திறமையனவர்களாகவே நமது அரசியல் தலைமை இன்று வரையும் முன்னிற்கின்றது.
ஆனால் தனது செளகாரியத்திற்கு அப்பால் தலைமையின் பொறுப்பும் கடமையும் அதன் தாற்பரியத்தை உணரும் போதுதான் தலைமை என்ற கடமையை சரியாக செய்ய முடியும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடந்த அநீதிகள் அரசியல் அடக்குமுறைகள் உரிமை மறுப்புக்கள் உயிர் அச்சுறுத்தல்கள் ஹலால் மதரீதியான விடயங்கள் என பலவகையான சமூகநலன் சார்ந்த விடயங்கள் நடந்தேறிய சந்தர்ப்பங்களில் எல்லாம் எம் மக்களின் வாக்குகளால் அரசியல் பதவிகளை அனுபவித்துக்கொண்டிருந்த தலைமைகள் மெளனம் காத்து அமைதியாகி இருந்து விட்டு பொறுமையும் விட்டுக்கொடுப்பும்தான் சாணக்கியம் என்ற சந்தர்ப்பவாதம் பேசுகின்றார்களே தவிர தங்களுடைய மக்களின் நலனுக்காக அச்சந்தர்ப்பங்களில் எதையும் செயற்படுத்தவில்லை என்பது நாம் அறிந்த உண்மையாகும்.
2002 ஆம் ஆண்டு பிரபா-ரணில் ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் தொடர்பாக எந்தவிதமான அரசியல் தீர்வுகளோ அல்லது நமது சமூகம் தொடர்பான விடயங்களோ உள்வாங்கப்படவில்லை என்பதை அரசியல் வாதிகள் யாரும் அறியாத போது புத்திஜீவிகள் பல்கலைக்கழக சமூகம் பொது நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் முஸ்லிம் சமுகத்தின் அரசியல் தீர்வு விடயமாக கலந்துரையாடல்கள் விழிப்புணர்வு கருத்தரங்குகள் எதையும் நடத்தி எந்த தீர்வுகளும் முன்மொழியக்கூடாது என்பதில் கவனமாக எமது அரசியல் தலைமைகள் எல்லாம் குறியாக இருந்தார்கள் அரசியல் தீர்வு விடயமான நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்பி அந்நிகழ்வுகளை நடத்தவிடாமல் தடுப்பதையே தங்களுடைய செளகரியமாக கருதி செயற்பட்ட சந்தர்பங்கள் நிறையவே உள்ளது.
2002 ஆம் பிரபா –ஹக்கீம் ஒப்பந்தம் அன்றைய நாளில் கூட தென்கிழக்கு பல்கலைகழகத்தில் நடந்த முஸ்லிம்களின் அரசியல்,தீர்வு என்ற மிகப்பெரிய நிகழ்வை கூட புறக்கணித்து அதில் எட்டப்படும் தீர்வை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்திற்காக அன்றைய நிகழ்வை புறக்கணித்து விட்டு பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்ய போனார்கள் என்ற வரலாற்றை நாம் மறந்து விட முடியாது. அதன் பின்  கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற இருந்த மக்கள் ஒன்று கூடலை தடுத்து நிறுத்தினார்கள் ஒலுவில் பிரகடனத்தை உதாசீனம் செய்தார்கள். முஸ்லிம்களுடைய அரசியல்தீர்வு தொடர்பான கருத்தாடல்கள் விழிப்புணர்வு தொடர்பான விடயங்களை சிவில் சமூகம் புத்திஜீவிகள் ஏதாவது முன்னெடுப்புகளை ஒருபோதும் சமுக நலன் என்ற பார்வையில் ஏற்றதாக நம் தலைமைகளின் வரலாறுகள் இல்லை. ஆனால் தனக்கு பட்டமும் பதவியும் சொகுசு வாழ்க்கை தந்த அரசுக்கு முட்டு கொடுத்து சாணக்கியம் என்ற பெயரில் செளகரியமாகவே வாழ்வதில் மட்டும் இலக்காக இருகிறார்கள்..
கடந்த மகிந்தவின் ஆட்சியில் எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசுக்கு ஆதரவாகவும் மகிந்தவுக்கு விசுவாசமாகவும் அதன் மூலம் கிடைத்த செளகரியங்களை அனுபவித்துக்கொண்டு நாட்டிற்கு விரேதமான சட்டங்களை ஏற்றும்போதும் சர்வதிகார நீதிக்கு மாறான சட்டங்களை எல்லாம் அமைதியாக ஆமோதித்து மக்களை பலிக்கடாவாக்கி உங்களுடை செளகரியத்திற்காக ஆட்சியில் இருந்து கொண்டு சாணக்கியமும் விட்டுக்கொடுப்பும் என்று மக்களை ஏமாற்றிணீர்கள்.காலம் கடந்த ஞானம் வந்தபின்பு நாம் தவறு செய்து விட்டோம் என்று தங்களின் . செளகரியத்தை மறைக்க முதலைக்கண்ணீர் வடித்தீர்கள்.
தமிழ் சமூகத்தின் மீது இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்த மனிதப்படுகொலைகள் அநீதிக்கு எதிராக தங்களுடைய நாட்டில் நீதி நியாயம் கிடைக்கவில்லை. அதனால் தமிழ் சமூகம் சர்வதேசத்திடம் போய்நின்று நீதிகேட்ட போது அதற்கு எதிராக நின்று ஏனைய நாடுகளிடம் காலில் விழுந்து மன்றாடி அச்சமூகத்திற்கு ஏற்பட்ட அநீதியியை மூடி மறைத்து அன்றைய ஆட்சியாளர்களை காப்பற்றி அடுத்த சிறுபான்மைக்கு துரோகமிழைத்து முஸ்லிம்களின் மீது தமிழ் சமூகம் கொண்டிருந்த நம்பிக்கையை இல்லாமலாக்கி உங்களின் செளகரியத்தை கவனித்தீர்கள். ஆனால் அண்மை நாட்களாக வட-கிழக்கு இணைப்பு பிரிப்பு தீர்வு என பல வகையான கருத்தாடல்கள் பேசுபொருளாக இருந்த சந்தர்ப்பத்தில் இது விடயமாக எந்த மூச்சும் விடாமல் இருந்துகொண்டு தமிழ் அரசியல் தலைவர்களிடம் போய் ஆற அமர இருந்து புரியாணி சாப்பிட்டுவிட்டு வட-கிழக்கு இணைப்பு தொடர்பாக இரகசியமான கலந்துரையாடல்கள் செய்து விட்டு வந்தீர்கள். ஆனால் அன்று இந்த தமிழ் தலைமைகள் சர்வதேசத்திடம் நீதி கேட்ட போது அச்சமூகத்திற்கு இளைவித்த துரோகத்தை மறந்து மனட்சாட்சியை குழிதோண்டிப் புதைத்து விட்டுபோய் அத்தலைவர்களுடன் புரியாணி தின்று மகிழ்ந்தீர்கள். இதுவும் உங்கள் செளகரியத்தின் வெளிப்பாட்டை தெளிவாகக்காட்டியுள்ளது.
இவ்வாறு சமூக நலன் சார்ந்த விடயங்களில் அவ்வப்போது செளகரியத்திற்கான சில முடிவுகளையும் அதன் மூலம் கிடைக்கும் இலாபங்களையும் பெற்றுக்கொண்டு அரசியல் இராஜதந்திரம் காய்நகர்வு விடுக்கொடுப்பு சாணக்கியம் என்ற அர்த்தம் புரியாத வார்த்தைகள் மூலம் தன்னுடைய செளகரியத்தை நியாயப்படுத்துவதையே அரசியல் சாணக்கியம் என்று தன்னையும் தலைமையயும் புகழ்ந்து துதிபாடுவதில் காலத்தை கழிக்கின்றீர்கள். தலைவரின் மறைவுக்குப்பின் கட்சிக்குள் நடந்த பல பிளவுகளுக்கும் சமூக ஒற்றுமையின்மைக்கும் மூல காரணமான விடயங்களை தங்களுடைய அரசியல் அறிவுக்கு உட்பட்ட வகையில் முறையாக கையாண்டு தீர்த்துக்கொள்ளாமல் சாணக்கியமாக செயற்பட்டு கட்சியை காப்பாற்றுகின்றேன் என்று கூறி பல முஸ்லிம் கட்சிகளும் முளைப்புக்கும் அதன் வளர்சிக்கும் மூலகாரணமாக சாணக்கியம் என்ற பெயரில் நடந்த செளகரியம்தான் அதிகம்.
கடைசியாக தவிசாளர் செயலாளர் விடயம் அதன் மூலம் கட்சிக்கும் சமூகத்தின் ஒற்றுமைக்கும் ஏற்பட்ட  அவப் பெயர்கள் என அனைத்து விடயத்திற்கும் சாணக்கியம் என்ற கவசத்திற்குள் செளகரியத்தை மூடி மறைத்து தலைமை பொறுப்பின் கடமையையும் அதன் அமானிதத்தையும் தனது வசதிற்கும் செளகரியத்திற்கும் ஏற்ப கட்சியின் சட்ட திட்டங்களை மாற்றி தலைமை பதவிக்கான செளகரியமான சட்டங்களை வகுத்து தலைமை பதவியை பாதுகாப்பதில் மட்டும் குறியாக இருப்பதே தனது சாணக்கியமாக உள்ளது.
ஆகவே இன்றைய நல்லாட்சி அரசங்கத்தால் ஏற்படப்போக இருக்கின்ற அரசியல் தீர்வு விடயம் எல்லை நிர்ணயம் தேர்தல் முறைமாற்றம் வட- கிழக்குக்கான தீர்வு காணி பிரச்சனை என பல்வேறுபட்ட விடயங்களை சமூகத்திற்காக செயற்பட வேண்டிய காலத்தில் தன்னுடைய இருப்பையும் பதவியையும் பாதுகாத்துக்கொள்ளவே இன்று பிரதேசம் பிரதேசமாக சென்று மக்கள் முன் அனுதாபம் தேடுகின்றீர்கள். ஆனால் மறைந்த தலைவரின் காலத்தில் செயலாளராக இருந்த காலங்களில் ஒரு கூட்டஅறிக்கையை சரியாக எழுதத் தெரியாத தலைவரின் கோபத்திற்கு ஆளாகிய இன்றைய தலைமையின் நிர்வாக முறையை மக்கள் மிகத்தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்கள்.
ஆகவே இவ்வாறான செளகரியத்தலைமைகளிடமிருந்து சமூகத்திற்கான அரசியல் தீர்வுகளையோ அல்லது அரசியல் பிரச்சனைக்கான விடிவுகளையோ நாம் எதிர்பார்க்க முடியாது இதற்கு மாற்றீடாக நாம் இன்று சாதாரண பாமர மக்கள் தொடக்கம் படித்த புத்திஜீவிகள் வரை சிந்திக்க தொடங்கியிருக்கின்றார்கள் இந்த சிந்தனை மாற்றத்தின் ஊடாகத்தான் செளகரியமான அரசியல் தலைமைகளிடமிருந்து நீதியையும் நேர்மையையும் வேண்டிநிற்கின்ற புதிய தலைமைத்துவங்களை உருவாக்கி ஏற்பட போக இருக்கின்ற அரசியல் தீர்வு சமூக நலன் சார்ந்த விடயங்களில் எமக்கான அங்கிகாரத்தையும் சம உரிமைகளையும் பொற்றுக் கொள்ளக்கூடிய மாற்றத்திற்காண பாதையை செப்பனிட தொடங்குவோம்......
நாம் ஒவ்வொருவரும் சிந்தனை ரீதியாக உணர்ந்து எமக்கான மாற்றங்களை தேடாத வரை எம் சமூகத்திற்கான மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது,,,

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar