- அமைச்சர் பைஸர் முஸ்தபா நடவடிக்கை
( கிண்ணியாவிலிருந்து
ஐ. ஏ. காதிர் கான் )
கிண்ணியாவில் தொற்றியுள்ள டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில்
ஜனாதிபதிக்கும் விரிவாக எத்திவைக்கப்பட்டுள்ளதோடு, இப் பிரச்சினைக்கு
நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் சுகாதார
அமைச்சரைச் சந்தித்து மீண்டும் அவர்களோடு துரிதமாக கலந்துரையாடல்கள்
நடத்தப்படும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா
உறுதியளித்துள்ளார்.
கிண்ணியா நகர சபை பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற
கலந்துரையாடலில் தலைமைவகித்து உரையாற்றும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு
அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் உறுதி மொழி வழங்கினார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் விசேட அழைப்பின் பேரில் இப் பிரதேசத்துக்கு
விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது
குறிப்பிட்டதாவது.
கிண்ணியாவில் தாக்கியுள்ளதுபோன்று, இலங்கையில் இதுவரை காலமும் எந்தவொரு
பிரதேசத்தையும் டெங்கு நோய் தாக்கியதில்லை. டெங்கு நோயின் தாக்கத்தினால்,
கிண்ணியாப் பிரதேச மக்கள் அச்சத்தில் உறைந்துபோய்க் கிடக்கிறார்கள்.
இவர்களுக்கு நாம் தற்போது பல்வேறு விதமான வசதிகளையும் செய்து
கொடுக்கவேண்டும். எனவே, இச் சந்தர்ப்பத்தில் அனைவரும் அரசியல் மற்றும்
கொள்கை ரீதியிலான கட்சி வேறுபாடுகளைக் களைந்தெரிந்துவிட்டு, ஒன்றுபட்டு இப்
பிரதேசத்தில் பரவியுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் பராமரிப்பு குறித்தும்
விசேட அவதானம் செலுத்தப்படும். அத்தோடு, இந் நோய் தீவிரமாகப் பரவுவதைக்
கட்டுப்படுத்தும் நோக்கிலும் இடம்பெறும் அனத்து நடவடிக்கைகளுக்கும்
தன்னாலான முடியுமான நிதி உதவிகளை அரசாங்கத்தின் ஊடாகப் பெற்றுக்
கொடுக்கப்படும்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மிகவும் திறமையானவர். எனது மிக நீண்ட நாளைய
நண்பர். அவர் எதையும் செய்யத் துணிந்தால், அதனை நிறைவு செய்துவிட்டே
ஓய்வெடுப்பார். எனவே, இவ்வாறான ஒருவரின் அழைப்பின் பேரில், எனக்கும் இப்
பிரதேசத்துக்கு வரக் கிடைத்தமை, இப் பிரதேச மக்கள் பெற்ற பெரும்
பாக்கியமே.டெங்கு நோயினால் அவஸ்தையுறும் கிண்ணியாப் பிரதேச மக்களின்
பிரச்சினைகளையும், தேவைகளையும் கேட்டறிந்து, அதற்குத் தேவையான
பரிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு எனக்கும் ஒருவகையில் சந்தர்ப்பம்
கிடைத்திருப்பதையும், இத் தருணத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் எனக்குத் தந்த
ஒரு அரும் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன் என்றார்.
இக் கலந்துரையாடலின்போது, கிண்ணியா வைத்தியசாலையின் இடப்பரப்பை மேலும்
அதிகரித்து, அனைத்து வசதிகளையும் கொண்ட தரமான வைத்திய சாலையாக மாற்றித்
தருமாறும் இதன்போது வைத்திய அதிகாரிகளினாலும், பொது மக்களினாலும் விசேட
வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதேவேளை, இப் பிரதேசத்தில், டெங்கு நோயினால் மரணமான குடும்பங்களுக்கான
இழப்பீட்டுத் தொகைகளும் அமைச்சரினால் உரியவர்களிடம்
கையளிக்கப்பட்டன.அத்துடன், கிண்ணியா நகர சபையின் திண்மக் கழிவு
முகாமைத்துவம் மற்றும் துப்புறவாக்கள் பணிகள் ஆகியவற்றை மேம்படுத்தும்
நோக்கினாலான கருத்திட்ட மகஜர் ஒன்றும், கிண்ணியா நகர சபை செயலாளரினால்
அமைச்சரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற
உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வைத்திய
அதிகாரிகள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Post a Comment