BREAKING NEWS

சமூக அரசியலுக்கும் இஸ்லாத்துக்கும் என்ன தொடர்பு? முபாறக் அப்துல் மஜீத் மௌலவிசமூக அரசியலுக்கும் இஸ்லாத்துக்கும் என்ன தொடர்பு என சிலர் கேட்பதை காண முடிகிறது. அத்துடன் பலரும் எழுப்பும் கேள்விதான் சமூக அரசியல் என்பது இஸ்லாத்தில் உள்ளதா? இஸ்லாம் அரசியலை ஆதரிக்கின்றதா என்பதாகும்.

முஸ்லிம் சமூகத்தை பார்க்கும் தொழுவது, நோன்பு பிடிப்பது போன்ற கடமைகள் மட்டுமே இஸ்லாம் என்ற நிலைப்பாட்டில் பலரை காணலாம். இன்னும் சிலர் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டால் போதும் வாழ்க்கையின் ஏனைய அனைத்து விடயங்களிலும் தம்மிஷ்டப்படி நடக்கலாம் என்ற கோணத்திலும் இன்னும் பலர் அரசியல் ஒரு சாக்கடை என்று கூறிக்கொண்டு தேர்தல் வந்தால் எந்த அரசியல்வாதிக்குப்பின்னால் பணமும், பதவியும், அடாவடித்தனமும் உள்ளதோ அந்த அரசியலவாதிக்கு ஓட்டு போடக்கூடியவர்களாகவும் காண்கின்றோம்.

உலகின் பெரும் பாலான பகுதிகளை இஸ்லாம் ஆளும் இந்த நவீன நூற்றாண்டில் கூட இஸ்லாத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் உண்டா? சமூக அரசியல் என்றால் என்ன என்று கேட்கப்படுகின்றதென்றால் எந்தளவுக்கு இன்றைய முஸ்லிம்கள் இஸ்லாம், இஸ்லாமிய வரலாறு போன்ற அறிவில் வறுமை நிலையில் உள்ளனர் என்பது கவலை தருவதாகும்.

இவற்றுக்கான பதஜல’களை காணு முன் அரசியல் என்றால் என்ன என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
“அரசியல் என்பது அதிகாரம் சார்ந்த சமூக உறவுகள், ஒரு அரசியல் அமைப்பிற்குள் பொது விவகாரங்களை ஒழுங்குபடுத்துதல், கொள்கை பயன்பாட்டிற்கும் உருவாக்கத்திற்குமான திட்டங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றோடு தொடர்புடையதாகும்.” இந்த வகையில் இஸ்லாமிய வரலாற்றை நாம் பார்க்கும் போது இஸ்லாத்துக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு என்பதை மிக இலகுவாக விளங்கலாம்.

இஸ்லாமிய வரலாறு என்பது நபி ஆதம் முதல் ஆரம்பமாகிறது. அதாவது முதல் மனினதும் முதல் முஸ்லிமுமான ஆதம் நபி இந்த உலகின் முதலாவது ஆட்சியாளராக இருந்தார். தனது புத்திரர்களுக்கு மத்தியில் சமூக உறவை வளர்த்து அவர்களின் வழிகாட்டியாக, ஆட்சித் தலைவராக இருந்தார். அவருக்கும் இறைவனுக்குமிடையில் நேரடி தொடர்பிருந்தது. இதன் காரணத்தால் மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கான அரசியலை இறைவன் அவருக்கு கற்றுத்தந்தான்.

அதன் பின் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் பரவியபின் ஒவ்வொருவரும் தத்தமது ஆளுகைக்குட்பட்ட இடங்களையும் மக்களையும் சுற்றிவளைத்து அதிகாரம் செலுத்தினர். இத்தகைய குட்டி அரசுகள் மாறி நாடுகளாக பரிணாமம் பெற்றன.

இஸ்லாமிய வலாற்றில் நபி சுலைமான் அவர்கள் தனது ஆளுகைக்குட்பட்ட மனித மற்றும் ஜின்களுக்கும் ஆட்சித்தலைவராக இருந்தார். நபி யூசுப் முஸ்லிமல்லாத ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தார்கள். அதே போல் நபி மூசா அவர்கள் பிர்அவனின் நாடாளுமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சியாக செயற்பட்டார். பிர்அவனின் சர்வாதிகாரத்தையும் அவனது ஏகாதிபத்தியத்தையும் அவனது சபையில் எதிர்த்துப் பேசினார். பிர்அவனும் அவனது சபையும் ஆளும் கட்சியாகவும் மூசாவும் அவரது ஆதரவாளர்களும் முஸ்லிம் எதிர் கட்சியாக நின்று ஜனநாயக அரசியல் போராட்டம் செய்தனர். இங்கு நான் ஜனநாயகம் என சொல்லும் போது சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். இன்றைய மரபில் ஜனநாயகம் என்றால் ஆயுதம் தூக்காமல் கருத்துக்கள் ரீதியாக போராடுதலையே குறிக்கும்.  இந்த வகையில் மூசா நபி பிர்அவ்னுக்கெதிரக ஆயுதம் எந்தவில்லை. மாறாக ஜனநாயக ரீதியாக, அஹிம்சை ரீதியாக, கருத்து ரீதியாகவே போராடினார். மூசா நபியின் அகிம்சை போராட்டத்தையே இந்தியாவில் காந்திஜி ஆங்கிலேய அடக்குமுறைகளுக்கெதிராக போராடினார். மூசாவின் கையில் எப்போது ஒரு கம்பு – அசா- இருந்தது போல் காந்தியின் கையிலும் கம்ப இருந்தது. இத்தகைய மூசா நபியின் ஜனநாயக அஹிம்சை போராட்டத்தை முஸ்லிம்கள் மறந்து விட்டனர்.  பிர்அவ்னிடமிருந்து விடுதலை பெற்ற சமூகத்தின் ஆட்சித்தலைவராக மூசா நபியும் அவருக்கு உதவியாக அதாவது செயலாளராக அவரது சகோதரர் ஹாரூனும் செயற்பட்டார்.

இறுதி இறைதூதர் முஹம்மது நபியவர்கள் இஸ்லாத்தின் ஏகத்துவத்தையும், தொழுகை, நோன்பு போன்றவற்றையும் கற்றுக்கொடுக்கும் மத போதகராக மட்டும் இருக்கவில்லை. அன்னார் மதீதானாவுக்கு வந்ததும் அங்கு வாழும் மக்களை ஒன்று திரட்டி அரசியல் சாசணத்தை பிரகடணம் செய்து தனது அரசியல் ஆட்சி அதிகாரங்களுக்குள் மக்களை கொண்டு வந்தார்கள். கொள்கை, பண்பாடு, சமூக உறவுகள், பொது விவகாரங்களை ஒழுங்கு படுத்தல் என்ற அரசியலின் அனைத்து விதிகளையும் மிகச்சரியாக செய்து இதுதான் உண்மையான அரசியல் என்பதை செய்து காட்டினார்கள்.

ஆகவே ஒரு மனிதன் குறிப்பாக ஒரு உண்மையான முஸ்லிம் சமூக அரசியலில் இருந்து விடு பட முடியாது. ஒன்றில் அவன் ஆள்பவனாக, ஆள்வதில் பங்களிப்பவனாக அல்லது ஆளப்படுபவனாக இருக்கிறான்.  இந்த வகையில் ஒவ்வொரு முஸ்லிமும் சமூக அரசியல் செய்ய வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறான். அரசியல் மார்க்கத்தில் கூடாது என சொல்வது குப்ரை விளைவிக்கும். அதாவது இவ்வாறு சொல்வதன் மூலம் இஸ்லாமிய வரலாற்றில் வந்த நபிமார்களின் அரசியல் வழிகாட்டலை அவன் மறுத்தவனாகி விடுகிறான். நமது அரசியல் என்பது வெறுமனே அரசியல் என்றிருக்காது அது இஸ்லாமிய அரசியலாக இருக்க வேண்டுமென்பதை நபியவர்கள் மிகத்தெளிவாக நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.


இஸ்லாமிய அரசியல் என கூறும் போது இலங்கை போன்ற சிறுபான்மை நாடுகளில் எப்படி இஸ்லாமிய அரசியல் சாத்தியமாகும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இதற்குக்காரணம் இஸ்லாத்தை ஒரு சிறிய பாத்திரத்துள் இவர்கள் வைத்துப்பார்ப்பதினாலேயே இத்தகைய கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத்திட்டமாகும். ஒரு மனிதனின் வாழ்வில் அவன் பிறந்தது முதல் இறக்கும் வரையான அனைத்து விடயங்களிலும் இஸ்லாம் அவனுக்கு வழி காட்டுகிறது. உண்பது, உறங்குவது, ஏன் சிறு நீர் கழிப்பது கூட எவ்வாறு என வழி காட்டும் இஸ்லாம் மனித வாழ்வின் மிக பிரதானமான அம்சமான அரசியல் வழி காட்டலை செய்யாமல் விட்டு விட்டதா? இல்லை. அதற்கும் மிகச்சரியான வழி காட்டலை செய்துள்ளது.

முஹம்மத் நபி (சல்) அவர்கள் சமய போதகராக ஆரம்பித்து ஆட்சித்தலைவராக பரிணமித்தார்கள். ஒரு நாட்டை ஒரு பிரதேசத்தை எவ்வாறு ஆள்வது என்பதை மிக தெளிவாகவே வழி காட்டியுள்ளார்கள்.

இன்று நமது மக்களில் பலர் இஸ்லாமிய அரசியல் என்றால் அது இஸ்லாமிய நாட்டுக்குத்தான் பொருந்தும் இலங்;கை போன்ற நாடுகளுக்கு பொருந்தாது என நினைப்பதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தில் குறை காண்கிறார்கள்.

இஸ்லாமிய அரசியல் என்றால் என்ன என்று நாம் தெரிந்து கொள்ளுமுன் முதலில் இஸ்லாம் பற்றி விரிவாக படிக்க வேண்டும். அப்போதுதான் இஸ்லாமிய அரசியல் பற்றி புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் இஸ்லாமிய அரசியலை சுருக்கமாக பின் வரும் உதாரணத்தின் மூலம் நாம் விளங்கலாம். மனித வாழ்வில் திருமணம் நடக்கிறது. மனிதர்கள் அனைவரும் திரமணம் முடிக்கிறார்கள். ஆனால் ஒரு திருமணத்தை இஸ்லாமிய திரமணம் என்பது எப்படி? திருமணத்தை  இஸ்லாமிய திருமணம் என நாம் எப்போது அழைக்கின்றோம்? இதற்கான பதில் இஸ்லாத்துக்கு முரணில்லாத வகையில் பொய் ஏமாற்று மோசடி இல்லாத, இஸ்லாமிய வழிகாட்டல் கொண்ட  திருமணத்தை இஸ்லாமிய திருமணம் என்கிறோம். நபிமார்கள்தான் இஸ்லாமிய திருமணம் முடித்தார்கள். எங்களால் இது சாத்தியமா என எவராவது கேட்கின்றார்களா? அதே போல் ஒரு வியாபாரத்தை இஸ்லாமிய வியாபாரம் என்கிறோம். எப்போது அவ்வாறு கூறுகிறோம்.? உண்மை, நேர்மை அந்த வியாபாரத்தில் இருந்தால் அதனை இஸ்லாமிய வியாபாரம் என்கிறோம். அதே போலத்தான் சமூக அரசியலில் உண்மை, நேர்மை, வாய்மை இருந்தால், பொய், ஏமாற்று, மோசடி இல்லாவிட்டால் அதனை இஸ்லாமிய அரசியல் என உறுதியாக அடையாளப்படுத்த முடியும். இஸ்லாமிய வியாபாரம் செய்கின்ற ஒருவருக்கு எவ்வாறு இறைவனிடம் மறுமையில் நன்மை கிடைக்குமோ அவ்வாறே இஸ்லாமிய அரசியலை செய்பவருக்கும் நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் துரதிஷ்டம் என்னவென்றால் அரசியல் என்றால் அனைத்து கள்ளத்தனமும் ஹலாலாகும் என சமூகம் இன்று எண்ணிக்கொண்டிருக்கிறது. ஐவேளை தொழுவோர் கூட இத்தகைய சிந்தனையில்தான் உள்ளனர். அரசியலில் அனைத்தும் ஆகுமாகும். இவையெல்லாம் அரசியலில் சகஜம். ஆகவே இவற்றை தடுத்து மாற்று அரசியலை உருவாக்காமல் பார்த்துக்கொண்டு மௌனமாக இருப்பதுதான் நமக்குச்சரி என்று முஸ்லிம்கள் சிந்திப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முற்றிலும் முரணானதாகும்.

ஆகவே நமது நாடு முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொள்ளாது விடினும் இஸ்லாமிய அரசியலை தாராளமாக இங்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய அரசியலை முஸ்லிம் சமூகம் அரசியல், இஸ்லாம் மற்றும் சமூக அறிவும், ச5க பற்றும் உள்ள உலமாக்கள் தலைமையில் முன்னெடுத்தால் நிச்சயம் முஸ்லிமல்லாத மக்களும் அத்தகைய இஸ்லாமிய அரசியலை ஏற்றுக் கொள்வார்கள்.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர்
உலமா கட்சி

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar