BREAKING NEWS

ஆயுதங்களுடன் உலாவந்தவர்கள் ஒன்றுபடலாம் என்றால் எங்களால் ஒற்றுமைப்படமுடியாதுள்ளது கவலையளிக்கிறது! உதுமாலெப்பை


- கிழக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை-
-எம்.வை.அமீர்,யு.கே.காலிதின்-
30 வருடங்களுக்கு மேலாக ஆயுதங்களுடன் உலாவந்தவர்கள், அவர்கள் சார்ந்த சமூகத்துக்காக ஒன்றுபட்டு, அவர்களது அபிலாஷைகளை அடைந்து வரமுடியும் என்றால், கலிமாச் சொன்ன எங்களால் ஒற்றுமைப்பட்டு எங்களது நியாயமான தேவைகளை அடைந்துகொள்ள முடியாதுள்ளது மிகுந்த கவலையளிப்பதாக கிழக்குமாகாணசபையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகத்தின் சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்வும் கிங் ஹோஸஸ் மற்றும் இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகங்களுக்கு இடையேயான 8 ஓவர்களைக் கொண்ட சிநேகபூர்வ விளையாட்டுப்போட்டியும் 2017-03-17 அன்று சாய்ந்தமருது மர்ஹும் பௌஸி விளையாட்டு மைதானத்தில் கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் ஏ.சி.எம்.நிஸார் தலைமையில் இடம்பெற்றபோது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பலதுருவங்களாக செயற்பட்ட தமிழ் கட்சிகள் ஓரணியாக ஒன்றுபட்டு நல்லாட்சியில் இணைந்து கொண்டு அவர்களுக்கிருக்கும் காணிப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுவரும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கும் காணிப்பிரச்சினை உள்ளிட்ட எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் அவைகளை பெற்றுக்கொள்வதற்காகவாவது ஒன்றுபடாமல் இருப்பதும், நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் தாங்களுக்கு அதிக செல்வாக்குள்ளதாக கூறிக்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஏனைய கட்சிகளையும் இயக்கங்களையும் ஒன்றுபடுத்தி முஸ்லிம்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒன்றுபட்டு தீர்வுகானாது இருப்பதும் ஆச்சரியத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ் தரப்பினர் கூட்டாக அரசுடன் பேசியும் போராட்டங்கள் செய்தும் பல ஆயிரம் ஏக்கர் காணிகளை மீட்டுள்ள இவ்வேளையில் முஸ்லிம் கட்சிகள் பிரச்சினைகள் உள்ளதாக மேடைகளில் கூருகின்றனவேதவிர காத்திரமான எவ்வித முன்னேற்றங்களையும் காணவில்லை.
முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு இஞ்சி நிலமாவது விடுவிக்கப்படாது இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், இருக்கின்ற காணிகள்கூட பறிபோககூடிய அபாயகரமான வாய்ப்புக்களே அதிகமுள்ளதாகவும் தெரிவித்தார்.
வரவிருக்கின்ற புதிய அரசியல் யாப்புச் சீர்த்திதுத்தம், எல்லைநிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் ஒன்றுபட்ட கருத்துக்களை பிரதிபலிக்கக்கூடியதாக சரியான தீர்வுத்திட்டம் முஸ்லிம்களாலும் முன்வைக்கப்படவேண்டியுள்ளதால்  கட்சிகளுக்கிடையே எதிர்மறை கருத்துக்கள் இருக்கின்றபோதிலும் ஒன்றுபட்டு எங்களது கருத்துக்களையும் முன்வைக்காவிட்டால் எதிர்கால சந்ததிகளுக்கு எதையுமே செய்யாதவர்களாக இப்போதைய தலைவர்கள் அந்த சந்ததியினால் நோக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்காமல் கிழக்கு மாகாணம் பற்றி கிழக்கு மாகாண இளைஞர்கள் சிந்திக்ககூடாது என நினைக்கின்றது.
தமிழ் சமூகம் தங்களின் அரசியல் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அந்த ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்த போது தமிழ் மக்களின் பெரும் ஆதரவைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் சமூகத்தின் நன்மை கருதி தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக சர்வதேசம் வரை குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களின் நடவடிக்கைகள் போதாது எனக் கருதி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற இயக்கத்தை உருவாக்கி பல அழுத்தங்களை கொடுத்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் இழந்த காணிகளையும் படிப்படியாக பெற்று வருகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் நலனை முன்னிட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ள கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் வீனாக்கி விட்டு கிழக்கு மாகாண மக்களும், இளைஞர்களும் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்க கூடாது என பதவிகளுக்காக சோரம் போனவர்கள் கூறுவது தொடர்பாக நமது கிழக்கு மாகாண இளைஞர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்
கிழக்கு மாகாண மக்களின் எதிர்காலத்திற்காக கிழக்கு மாகாணம் பிரிந்தே இருக்க வேண்டும் என நாங்கள் அன்று குரல் கொடுத்தோம் ஆனால் அதனை பலர் பலவிதமாக விமர்சனம் செய்தனர். இன்று தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் ஆதரவில்லாமல் வட கிழக்கை இணைக்க முடியாது என்ற யதார்த்தமான உண்மைகளை உணர்ந்துள்ளனர்.
தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை,
எதுவானாலும் தமிழ் அரசியல் தலைமைகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பேச்சு வார்த்தைகளின் ஊடாகவே எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது. இளைஞர் பருவம் என்பது மனிதனுடைய வாழ்க்கையில் முக்கியமான பருவமாகும் எனவே இளைஞர்களினாலேயே சமூகத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்த முடியும்.
பெருந் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் அன்று பேரினவாதக் கட்சிகளில் இருந்து முஸ்லிம் மக்களை விடுவிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய போது தலைவர் அஷ்ரபுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் கிழக்கு மாகாண இளைஞர்களே பக்க பலமாக இருந்தனர். அதனால்தான் முஸ்லிம் காங்கிரஸ் துரிதமாக வளர்ச்சி அடைந்தது.

தேசிய காங்கிரஸிடம் அரசியல் அதிகாரம் இருந்த காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் நானும் முடியுமானவரை பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டதனால் நமது மாகாண மக்கள் பயன்பெறக் கூடியதாக அமைந்துள்ளது.
சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக பிரதேச சபை ஒன்று அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்ட போது முன்னாள் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சராக இருந்த ஏ.எல்.எம்.அதாஉல்லா கல்முனை பிரதேசத்தில் எந்தவொரு இனத்தவரும், எந்தவொரு பிரதேசமும் பாதிக்கப்படாத வகையில் கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருதுக்கான நகர சபை, தமிழ் மக்களுக்கான பிரதேச சபை, மருதமுனை நகர சபை என்பவற்றை உருவாக்குவதற்கான திட்டத்தை முன்வைத்து வர்த்தமானியில் வெளியிடவிருந்த சந்தர்ப்பத்தில் சில சுயநல அரசியல் நோக்கம் கொண்ட இப்பிராந்திய அரசியல்வாதிகள் தேர்தல் ஆணையாளருக்கு கடிதங்களை அனுப்பி அதனை இடைநிறுத்தினர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்த நாட்டின் பிரதமர் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் சாய்ந்தமருதுக்கான நகர சபை வழங்கப்படும் என உறுதி வழங்கினார். தற்போது நல்லாட்சி ஏற்பாட்டு இரண்டு வருடங்கள் தாண்டியும் சாய்ந்தமருது நகரசபையினை இவர்களினால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.
இளைஞர்கள் வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்பவர்களாக தங்களது உள்ளங்களை பழக்கப்படுத்திக்கொண்டால், அவர்கள் தலைமைதாங்கும் காலத்தில் எதையும் எதிர்நோக்கும் பக்குவத்தைப்பெறுவார் என்றும் விளையாட்டு உள்ளத்துக்கு மட்டுமல்லாது உடலுக்கும் வலிமைசேர்க்கும் என்றும் தெரிவித்தார்.
தாங்கள் அரசில் அமைச்சர்களாகவும் அவைகளை வழிநடத்தக்கூடிய நிலையிலும் இருந்தபோது பல்வேறு அபிவிருத்தித் திட்டாங்களை முன்னெடுத்ததாகவும் இப்போது அந்தநிலையில் இருப்பவர்கள் அவைகளையும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கல்விநிலையம் ஒன்றின் பணிப்பாளர் ஏ.வி.எம்.மாஹீர் கௌரவ அதிதியாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப பதிவாளர் எம்.எஸ்.உமர் பாறுக் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி எம்.ஜௌபர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
விளையாட்டுப்போட்டியில் 19 ஓட்டங்களால் கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar