BREAKING NEWS

புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் சாதகமான நடவடிக்கை

புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் சாதகமான நடவடிக்கை
ஜனாதிபதி செயலக உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு
-          சுஐப் எம் காசிம்
வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் எழுந்துள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்த மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான, தீர்க்கமான முடிவை ஜனாதிபதி வழங்குவார் என ஜனாதிபதியின் செயலாளர் பி பி அபேகோன் இன்று (31) மாலை உறுதியளித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிய பின்னர், அவர் இவ்வாறு உறுதியளித்ததுடன் இந்த விடயங்கள் அனைத்தையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்று இந்த மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்வேன் எனவும்  தெரிவித்தார்.
இந்த உயர் மட்ட மாநாட்டில் மன்னார் அரசாங்க அதிபர் வை தேஷப்பிரிய, வனவிலங்கு, வன ஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகள், உட்பட பல்வேறு அரசாங்க உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அமைச்சர் ரிஷாட்டுடன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, ஜம் இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் எம் எம் முபாரக் மௌலவி, சி கலீல் மௌலவி, முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என் எம் அமீன், உப தலைவர் ஹில்மி அஹமட், செயலாளர் எஸ் அஸ்ஹர் கான், சிரேஷ்ட சட்டத்தரணி என் எம் ஷஹீட் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வர்த்தமானிப் பிரகடனத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைத் தெளிவு படுத்தினர்.
பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியர் நௌபல், வில்பத்துத் தொடர்பான சகல ஆவணப்படங்கள், பட வரைபுகள் ஆகியவற்றுடன் அது தொடர்பிலான ஒளிநாடா விவரணங்களை சமர்ப்பித்து அந்த சரணாலயத்தின் உண்மை நிலையை தெளிவு படுத்தியதுடன் மக்களுக்கு உரித்தான காணிகளும் குடியிருப்புக்களும் மேய்ச்சல் நிலங்களும் வர்த்தமானி மூலம் எவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டுள்ளதென்பதை தெளிவுபடுத்தினார்.
அமைச்சர் ரிஷாட் இங்கு கருத்துத் தெரிவித்த போது,
 90 ஆம் ஆண்டின் பின்னர் வடமாகாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் பட்ட, பட்டுவருகின்ற கஷ்டங்களையும் அந்தப் பிரதேசத்தில் தாங்கள் வசிக்காத காலப்பகுதியில் இடம்பெற்ற கொடூரங்களையும், அநியாயங்களையும் விபரித்தார்.
அதிகாரிகள் இனவாதிகளுக்கு அடிபணிந்து இவ்வாறான செயற்பாடுகளை எழுந்தமானமாக மேற்கொள்வதன மூலம் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதோடு இன ஐக்கியமும் சீர்குலைகின்றது. அதிகாரிகள் இனியாவது இந்த விடயங்களாஇ கவனமாகக் கையாள வேண்டும். புதிய வர்த்தமானிப் பிரகடனத்தினால் முசலிப் பிரதேசத்தில் வாழும் மக்களின் பொதுத் தேவைக்கேனும் கூட ஓர் அங்குலக் காணியைத் தானும் பெற முடியாத இக்கட்டு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி, அமைச்சரவை, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெற்று அந்தப் பிரதேசத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் கைத்தொழில் பேட்டை காணியைக் கூட வன விலங்கு திணைக்களம் விடுவிக்க மறுக்கின்றது எனவும் அமைச்சர் வேதனைப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்குத் தெரியாமல், அவர்களின் அனுமதி பெறாமல் கொழும்பில் இருந்து கொண்டு ஜி பி எஸ் முறைப்படி அவர்களது பூர்வீகக் காணிகளை வனத்திணைக்களம் சுவீகரித்ததாகவும் அவர்கள், அந்த காலத்தில் மேற்கொண்ட பாரிய தவறை நிவர்த்தி செய்வதற்காக மீண்டும் இவ்வாறான வர்த்தமானிப் பிரகடனத்தை மேற்கொண்டதன் மூலம் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேயர் விஸ்தீரணத்தைக் கொண்ட முசலி மக்களின் காணிகள் அபகரிக்கபட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
5 ஒதுக்குக் காடுகளை இணைத்து மாவில்லு பேணற்காடு என பிரகடனப்படுத்தியதன் மூலம் வெப்பல், கரடிக்குளி/மறிச்சுக்கட்டி, மற்றும் விலத்திக்குளம் ஆகிய பிரதேசத்தில் உள்ளடங்கியுள்ள அந்தப்பிரதேச மக்களின் 85% ஆன பரம்பரைக் காணிகள் பறிபோய் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். எனவே 2012 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலையும் 2017 ஆம் ஆண்டு புதிய வர்த்தமானி அறிவித்தலையும் இரத்துச் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
இந்த விடயங்களை தெரிந்துகொண்ட ஜனாதிபதியின் செயலாளர் இவ்வாறான நிலைமை குறித்து தாங்கள் இதுவரையில் தெரிந்திருக்கவில்லையெனக் குறிப்பிட்டார். அத்துடன் ஜனாதிபதியும் பிரதமரும் வில்பத்து சர்ச்சை தொடர்பில் சந்தித்து பேசியதாகவும் தெரிவித்த அவர், மக்களின் மனக் கிலேசங்களை தாங்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar