முஸ்லிம் அரசியலில் எப்படியான மாற்றம் தேவை?சிராஜ் மஷ்ஹூர்

முஸ்லிம் அரசியலில் மாற்றம் தேவை என்கிற குரல்களை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.  இப்போது மு.கா.வின் உள்வீட்டுச் சண்டை ஊரம்பலத்துக்கு வந்திருக்கிறது. இந்தக் குடுமிச் சண்டைக்குப் பிறகு, இந்தக் குரலை பரவலாக மீண்டும் கேட்கிறோம். உண்மைதான், மாற்றம் தேவைதான். ஆனால், அது எவ்வாறான மாற்றம் என்பதில்தான்  நமது அடிப்படைப் பிரச்சினையே தங்கியிருக்கிறது. மாற்றம் என்பது மேலெழுந்தவாரியான மாற்றமன்று. அடிப்படை மாற்றமே இங்கு அவசியப்படுகிறது.

1980களின் அரசியல் சூழல்தான் தனிக்கட்சி அரசியலைச் சாத்தியப்படுத்தியது.  அதற்கு முன்னரும் தனிக்கட்சி பற்றி அவ்வப்போது பேசப்பட்டு வந்தது. எனினும், அதற்கு வாய்ப்பான அரசியல் சூழல் அப்போதுதான் முதல் முறையாகக் கனிந்தது. முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்கள் திரும்பியபோதுதான், ஒட்டு மொத்த சமூகமும் பாதுகாப்பின்மையை உணரத் தலைப்பட்டது. அதுவரை சிந்திக்காத ஒரு புதிய கோணத்தின் மீது எல்லோரினது கவனமும் திரும்பத் தொடங்கியது. இந்த அரசியல் வழிமுறை கிழக்கில்தான் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

ஆரம்பத்தில் உரிமை அரசியல் என்று தொடங்கி பெரும் கொள்கை முழக்கங்கள் வெடித்துக் கிளம்பின. மக்களை உணர்ச்சி வசப்படுத்துகிற இன மைய அரசியல் கோஷங்கள், குர்ஆன் - ஹதீஸ், 'நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்' என்று ஊரே அமர்க்களமாகியது. பின் கட்சி அரசியலில் கைதேர்ந்து பேரம் பேசிப் பழகியதால், அபிவிருத்தி அரசியல் என்று இது புது வடிவம் எடுத்தது. இந்த பண்பு மாற்றத்தின் பின்னே, நிறைய சமரசங்களும் விட்டுக்கொடுப்புகளும் திரைமறைவு சூதாட்டங்களும் 'டீல்களும்' முக்கியத்துவம் பெறத் தொடங்கின.

உன்னதமான தலைவர்களாக ஒருகாலத்தில் பேசப்பட்டோர், பின்னர் கடைநிலை அரசியல் வியாபாரிகளாக மாறினார்கள். சில்லறை வியாபாரிகளாக  அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பலர், நம்ப முடியாத வேகத்தில் மொத்த வியாபாரிகளாக மாறி விட்டனர். இந்த சடுதியான மாற்றம் சீரழிந்த ஒரு அரசியல் கலாச்சாரத்தை விதைக்கத் தொடங்கியது. அதன் அறுவடையாக, இப்போது இந்த மொத்த வியாபாரம் நன்கு சூடு பிடித்திருக்கிறது.

திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல கதை கதையாய், புதுத்  திருப்பங்களைக் கண்டு வருகிறோம். இது ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லை. அபத்தமாகவே இருக்கிறது. தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு ஓட வேண்டும் போல, மலிவான காட்சிகள் பல அரங்கேறுகின்றன.

இதிலிருந்து வெளியேறுவது எப்படி? இதுதான் நம் முன்னே உள்ள மிக முக்கியமான, சவால் மிகுந்த கேள்வி. முதலில் இந்த 'தனித்துவ அரசியல்' உருவாக்கி வைத்திருக்கும் மூன்றாந்தர மாமூல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும். காலனியாதிக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதைக் காலனிய நீக்கம் செய்வது  எப்படி இன்றியமையாததோ, அதேபோல மனதளவில் இந்தப் 'போலி தனித்துவ, கோஷ அரசியல் கலாச்சார நீக்கம்' ஒன்றை உடனடியாக நாம் செய்தாக வேண்டும். இதுதான் மாற்றத்தின் முதல் படியாகும்.

இப்படியான அனாவசியமான சுமையிலிருந்து தமது மனதை விடுவிக்க பலரும் தயாரில்லை. 'என்ன இருந்தாலும் நமக்கு இப்படியொரு கட்சி தேவைதானே. இருக்கின்ற ஒன்றை முற்றாக அழிய விட்டு விடக் கூடாதுதானே' என்று  உள்ளுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டிருப்போரையே நாம் காண நேர்கிறது. வேண்டாத சுமையொன்றை நாம்தான் தெரிந்து கொண்டு சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் நமது மிகப் பெரும் அவலம். நமது எதிரி நமக்கு  உள்ளேதான் இருக்கிறான் என்பதுதான் இதன் அர்த்தம்.

படு மோசமான  அரசியல் கூத்தாடிகளுக்கான அரசியல் புகலிடத்தை, யாரோ பெயர் தெரியாத வெளிச் சக்திகள் வழங்கவில்லை. மக்களாகிய நாம்தான் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த அரசியல் அயோக்கியத்தனத்தின் கடைசிப் புகலிடம் எங்கே இருக்கிறது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் நாமே, அப்படியான தவறை தொடர்ந்தும் இழைப்பதா? இதுதான் சிந்திக்க வேண்டிய முதல் புள்ளி.

தேசிய அரசியலில் அதிகாரப் பகிர்வு என்று பேசுகிறார்கள். ஆனால், கட்சிக்குள் தனி மனிதர்களிடம் அதிகாரங்களைக் குவித்து வைத்துள்ளனர். கேட்டால் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று கதை விடுகிறார்கள். இது பாசிச மன அமைப்பிற்கும் எதேச்சாதிகாரத்திற்குமே வழி வகுக்கும். குறைந்தபட்ச உட்கட்சி ஜனநாயகத்தைக் கூடப் பேண முடியாத சூழல் எவ்வளவு ஆபத்தானது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மாற்றுக் கருத்துக்களை சகிக்க முடியாத அரசியல் கலாச்சாரம் எப்போதுமே ஆபத்தானது. இவர்கள் விமர்சனங்களால் வளர்வதை விடவும், புகழ்ச்சியால் அழிவதையே தமது வழியாக தேர்ந்தெடுத்துள்ளனர். போகிற போக்கைப் பார்த்தால், அரசியல் கட்சி என்ற நிலை மாறி, கடைசியில் நடிகர் சங்கத்தின் நிலைக்கு தரம் தாழ்ந்து விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமது அழிவை தாமே தேடிக் கொள்ளும் இழி நிலையே இது.

ஊழல், மோசடி, சுயநலம், பதவி மோகம், வியாபாரம், அதிகார துஷ்பிரயோகம், பாலியல் சேட்டைகள், பிரதேசவாதம், தீராத விளையாட்டுப் பிள்ளைத்தனம்... என்று இந்த வங்குரோத்து அரசியல் கலாச்சாரத்திற்கு பல கறை படிந்த பக்கங்கள் உள்ளன.  இது வெளியே பேச முடியாத வெட்கக் கேடு.

இந்தக் கட்சிகளுக்குள் புரையோடிக் போயுள்ள இழிந்த 'டீல் அரசியல் கலாச்சாரத்தை' மீண்டும் நிமிர்த்தி  சுத்திகரிக்க முனைவது அபத்தமே. உள்ளே சென்று மாற்றத்திற்காகப் போராடுவோம் என்று பேசுவது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்தப் புற்றுநோயை அவ்வளவு இலகுவில் தீர்க்க முடியாது.

மாற்றத்தை முற்றிலும் புதிய பார்வையொன்றிலிருந்தே தொடங்க வேண்டும். குறுகிய இனமைய அரசியலைத் தாண்டிய, பரந்த பார்வையும் தொலை நோக்கும் இதற்கு அவசியம். முழுமையான ஒரு சுய விமர்சனமின்றி இது சாத்தியமில்லை.  கோளாறு எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்க்க வேண்டும்.

ஆற்றலும் சுய கௌரவமும் நேர்மையும் மிக்க  நல்ல மனிதர்கள் முன் வராமல் இந்த மாற்றம் சாத்தியமில்லை. இந்த சமூகத்தின் முற்போக்கு சக்திகள் ஒதுங்கி ஓரமாய் நின்று கொண்டு விமர்சிப்பதால் மட்டும், இந்த அரசியல் கலாச்சாரம் மாறப் போவதில்லை.  இதுதான் முஸ்லிம் அரசியல் இன்று எதிர்கொள்ளும் முதன்மையான சவாலாகும்.

மாற்றத்தை ஆள்நிலைப்பட்ட மாற்றமாக சுருக்கி விடாது, பண்பு நிலைப்பட்ட ஒன்றாக நோக்க வேண்டும். தலைவலிக்கு தலையணையை மாற்றுகின்ற தீர்வு போல இது அமைந்து விடக் கூடாது. இதே மலின அரசியல் கலாச்சாரத்தின் வாரிசுகளை இன்னொரு கட்சியின் பெயரால் அல்லது இன்னொரு கூட்டமைப்பின் பெயரால்  மாற்றுத் தீர்வாக முன் நிறுத்துவது ஒருபோதும் தீர்வாக அமையாது.

புதிய அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவது குறித்தே இப்போது நாம் சிந்திக்க வேண்டும். இந்த அரசியல் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்த, பழைய கள்ளை புதிய மொந்தையில் கொண்டு வரும் சந்தர்ப்பவாத வியாபாரிகள் குறித்து, நாம் இரண்டு மடங்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.

மாற்றம் தேவையெனில், முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்து கூட்டு உழைப்பினூடாகவே அதை சாதிக்க முடியும். இந்த அம்சங்கள் எல்லாவற்றையும் கருத்திலெடுத்து விவாதிக்க வேண்டும். முதலில் விழிப்புணர்வு  மிக அவசியம். அடுத்த கட்டமாக மக்களை அறிவூட்ட வேண்டும். சிந்தனைத் தெளிவும் தொடர் உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாமல் மாற்றம் சாத்தியமில்லை.

எமது மரபு வழிப்பட்ட, பழகிப் போன சிந்தனை மரபில் புதிய பாய்ச்சல்கள் தேவை. புதிய சிந்திப்பு முறைகளும், புதிய பார்வைகளைப் பகிரும் உரையாடல் வெளிகளும், கருத்தாடல் மன்றங்களும் பரவலாக இடம்பெற வேண்டும்.  வெவ்வேறு நாடுகளின் அனுபவங்களிலிருந்தும் எமது கடந்த காலத் தவறுகளிலிருந்தும் நாம் பாடம் படிக்க வேண்டும்.

இது ஒன்றையும் செய்யாமல், மாற்றம் தேவை என்று அங்கலாய்ப்பதும் கனவு காண்பதும்  சரியா? சரியாகச் சொன்னால்ல், நம் எல்லோரையும்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாமல் அல்லாஹ்வும் அந்த சமூகத்தை மாற்றி விடப் போவதில்லை.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்