தேசிய ஷூறா சபை உருவாக்கப்பட்டதில் எந்தப் பயனும் இல்லை -SLTJ

@ SLTJ  நாட்டில் உருவாக்கப் போகின்ற மாற்றங்கள் என்ன?

எங்களுடைய அடிப்படை நோக்கம் மார்க்க ரீதியாக இந்த சமூதாயத்தில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இயக்கங்களாலும் கொள்கைகளாலும் வேறுபட்டிருந்தாலும் சமூதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
ஒற்றுமை என்பது இந்த சமுதாயத்திற்கு மிக முக்கியமானது. ஆனால் இயக்க வேறுபாடுகளை அப்படியே தக்க வைத்துக் கொண்டு ஒற்றுமையை ஏற்படுத்துவதென்பது சிரமமானது. அதேபோன்று இயக்க வேறுபாட்டில் அல்லது முரண்பாடுகளில் இருந்து கொண்டே ஒற்றுமையாக இருப்பதென்பதும் சாத்தியமான விடயம் அல்ல.
நாங்கள் அல்-குர்ஆன் ஹதீஸை மக்களுக்கு எத்திவைக்கின்ற பணியை முன்னெடுத்து வருகின்றோம். அதுதான் ஒரு முஸ்லிமின் முதன்மைப் பணியாகும். எனவே, சொல்ல வேண்டிய விடயங்களை  பக்குவமாகவும், பணிவாகவும் மக்களுக்கு எத்திவைக்க வேண்டியது எமது கடமை என்பதால் அதனை நாங்கள் செய்து வருகின்றோம். கொள்கை ரீதியாக முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்த முடியுமாக இருந்தால் அது காலா காலமாக நிலைத்து நிற்கின்ற ஒற்றுமையாக இருக்கும். இது இலகுவானதொரு விடயம் அல்ல.
வெறுமனே இந்த சமூதாயம் ஒற்றுமைப்பட வேண்டுமென பேச்சுக்களில் மாத்திரம் நின்றுவிடாமல் கொள்கை ரீதியாக முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். அவ்வாறான ஒற்றுமைதான் உண்மையான ஒற்றுமையாகவும் நிலையான ஒற்றுமையாகவும் இருக்கும்.
எமது அமைப்பு 2005 இல் உருவாக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நிறைய அமைப்புக்கள் காணப்பட்டாலும் தஃவா வேலையை செய்யவில்லை. தௌஹீத் ஜமாஅத்தினுடைய உண்மையான நோக்கத்தினை குறித்த பெயர் தாங்கிய அமைப்புகள் செய்யாததன் காரணமாக நாங்கள் கொள்கை ரீதியாக இந்த சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படத் தீர்மானித்தோம். அதனடிப்படையில் செயற்பட்டும் வருகின்றோம்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்திற்கும் (SLTJ) தமிழ் நாட்டு தௌஹீத் ஜமாஅத்திற்குமிடையில் (TNTJ) உள்ள தொடர்புகள் பற்றி?
நிர்வாக ரீதியாக எமக்கும் அவர்களுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இல்லை. எமது அமைப்பு இந்த நாட்டில் சுதந்திரமாக இயங்குகின்ற அமைப்பாகும். அதேநேரத்தில் கொள்கை ரீதியாக மார்க்க ரீதியான விடயங்கள், பிரச்சினைகள், ஆய்வுகள் போன்ற விடயங்களில் தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத்தோடு ஒரே மேசையில் உட்கார்ந்து கலந்துரையாடியே தீர்மானத்திற்கு வருகின்றோம். ஏனென்றால் அவர்கள் ஆய்வு ரீதியாக மார்க்க விடயங்களை அணுகுவதில் முதன்மையானதொரு அமைப்பாகக் காணப்படுகின்றார்கள்.
ஒரு மார்க்கப் பிரச்சினை தொடர்பில் இதுவும் சரி, அதுவும் சரி என்ற மழுப்புகின்ற தீர்வுகளை அவர்கள் எடுப்பதில்லை. மாற்றமாக தீர்க்கமான முடிவுகளை எடுத்து மக்களை தெளிவுபடுத்துவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. அந்த வகையில் கொள்கை ரீதியாக யாருக்கும் அஞ்சாமல் விட்டுக் கொடுப்புகளுக்கு இடமில்லாமல் பணத்திற்கு விலை போகாமல் செயற்படுகின்ற அமைப்பென்பதால் நாங்கள் அவர்களோடு சேர்ந்து செயற்படுகின்றோம். ஆனால் அவர்கள் சொல்பவற்றை கண்மூடித்தனமாக பின்பற்ற மாட்டோம்.
நிர்வாக விடயங்களில் அவர்களை பின்பற்றாவிட்டாலும் 30 வருடங்களுக்கு மேலாக களத்திலே வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்ற ஒரு அமைப்பென்ற வகையில் அவர்களுடைய ஆலோசனைகள் எமக்கு மிக முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, வெளிநாட்டு அரசாங்கத்தினதோ அல்லது நிதி நிறுவனங்களினதோ பணத்தை எடுப்பதில்லை என்பது தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு. அதனை நாங்களும் பின்பற்றுகின்றோம். காரணம் எங்களுடைய தஃவாவினுடைய தூய்மையை பாதுகாக்கும் அரணாக அது காணப்படுகின்றது.

@ மௌலவி பாஸில் பாறூக் அவர்கள் ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் SLTJஇற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்று ஒரு பத்திரிகை நேர்காணலில் கூறியிருக்கின்றார். ஜம்இய்யதுல் சபையுடனான உங்களுடைய தொடர்புகள் எவ்வாறு காணப்படுகின்றன?

முதலாவது ஜம்இய்யதுல் உலமா சபையுடன் நாங்கள் கொள்கை ரீதியாக வேறுபட்டிருக்கின்றோம். ஜம்இய்யதுல் உலமா சபையானது நூற்றுக்கு நூறு வீதம் முஸ்லிம் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் அறிஞர்களைக் கொண்ட ஒர் அமைப்பல்ல. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பது ஒரு அமைப்பினுடைய பெயரே தவிர முழுக்க முழுக்க இலங்கையிலுள்ள அறிஞர்கள் அனை வரையும் உள்ளடக்கிய உத்தியோகபூர்வ மான சபை அல்ல.
மார்க்க ரீதியாக எங்களுக்கும் அவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாங்கள் வஹியை மாத்திரமே பின்பற்றுகின்றோம். ஆனால் அவர்கள் மத்ஹப்கள், ஸஹாபாக்களின் கூற்றுக்கள், இஜ்மா, கியாஸ் என்பவற்றையும் பின்பற்றுகின்றனர். எனவே, அவர்களுக்குக் கீழால் மார்க்க அடிப்படையில் ஒரு போதும் சேர்ந்து செயற்பட முடியாது. என்றாலும் சமுதாயப் பிரச்சினைகள் என்று வருகின்றபோது அனைத்து அமைப்புகளோடும் சேர்ந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

@ இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா, தேசிய ஷூறா சபை, முஸ்லிம் கவுன்ஸில் போன்ற முக்கியமான முஸ்லிம் தலைமை அமைப்புகள் காணப்படுகின்றன. ஜம்இய்யதுல் உலமா சபையுடன் உங்களுக்கு முரண்பாடுகள் காணப்பட்டாலும் ஏனைய இரண்டு அமைப்புகளுடனான உறவுகள் பற்றி…

மார்க்க ரீதியாக அகீதாவோடு முரண்பட்ட எவருடனும் எம்மால் சேர்ந்து செயற்பட முடியாது. ஆனால் சமுதாய விடயங்களில் தேசிய ஷூறா சபையோடு சேர்ந்து செயற்படத் தயார். என்றாலும் ஷூறா சபை உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறை வேறவில்லை. இலங்கை முஸ்லிம்களின் அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்து ஒரு பிரச்சினை ஏற்படுகின்றபோது அதற்குத் தீர்வு காணும் நோக்கில்தான் அது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரும் ஜம்இய்யதுல் உலமா சபை இருக்குமாக இருந்தால் தேசிய ஷூறா சபை உருவாக்கப்பட்டதில் எந்தப் பயனும் இல்லை என்பதே நிலைப் பாடாகும்.
தற்போது இலங்கை முஸ்லிம்களுக்கு மூன்று தலைமைத்துவ அமைப்புகள் காணப்படுகின்றன என்றால் தீர்மானங்கள் எட்டப்படுகின்றபோது பல்வேற பிரச்சினைகள் எழும். எனவே, சமுதாயப் பிரச்சினைகள் என்று வரும்போது ஓர் அமைப்பின் கீழ் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து அமைப்புக்களும் வரவேண்டும். அப்போது தான் சரியான தீர்வைக் காண முடியும். அப்படி அனைவரும் இணைவார்களாக இருந்தால் நாங்களும் அந்தத் தலைமை அமைப்போடு இணைந்து செயற்படத் தயாராகவே இருக்கின்றோம்.

@ முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தில் ஏனைய வெளி சக்திகளின் தலையீடு இருக்கக் கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் தெளிவாக இருக்கின்றது. இதே நிலைப்பாட்டில் இருக்கும் நீங்கள் ஏன் தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டீர்கள்?

2013 ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கெதிராக பௌத்த இனவாத அமைப்புக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தியபோது ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஆகியன இணைந்து அனைத்து முஸ்லிம்  அமைப்புகளையும் கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் ஒன்று கூட்டின. அதில் நாமும் கலந்து கொண்டோம். அக்கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகளை பொறுமையான முறையிலும் பக்குவமான முறையிலும் கையாள வேண்டும் எனவும் ஒரு ஊடக மாநாட்டைக் கூட்டி தெளிவுபடுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் முடிவுசெய்யப்பட்டது.
அந்தக் கூட்டத்திற்குப் பிறகு எத்தகைய செயற்பாடுகளையும் குறித்த தலைமை அமைப்புகள் முன்னெடுக்கவில்லை என்பது எமக்கு மிகவும் கவலை அளித்தது. அவர்களை பலமுறை தொடர்பு கொண்ட போதிலும் எத்தகைய பதிலும் வரவில்லை. எனவேதான் நாங்கள் முஸ்லிம் சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளை தனியாகவே எதிர்கொள்வது என்று முடிவெடுத்தோம். என்றாலும் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போது ஏனைய முஸ்லிம் அமைப்புகள் எம்மை அழைத்தால் அவர்களோடு சேர்ந்து செயற்படுவதற்கு இன்னமும் தயாராகவே இருக்கின்றோம்.
முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் 7 வருடங்களுக்கு மேலாக இழுபறிக்குள்ளாகியிருப்பதற்கு மிக முக்கிய காரணம் ஜம்இய்யதுல் உலமா சபை என அந்தக் குழுவிலுள்ள முக்கியமான உறுப்பினர் ஒருவரே தெரிவித்திருக்கின்றார். எனவே தான் ஜம்இய்யதுல் உலமா சபையை  நம்பி எந்தப் பிரயோசனமும் இல்லை. இதனால்தான் தனியாகவே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்னால் ஏனைய அமைப்புகள் எங்களை அழைத்து நாம் அனைவரும் ஒன்றாக இந்த விடயத்தை கையாள்வோம் என்று சொல்லியிருந்தால் கூட நாங்கள் அதற்கு இணங்கியிருப்போம். ஆனால் இந்த விடயத்தில் யாருமே கவனத்தில் எடுக்கவில்லை.
ஆர்ப்பாட்டமென்பது ஜனநாயகத்தின் முக்கிய கருவி. எமது அடிப்படையான விடயங்களை வென்றெடுப்பதற்கான ஒரே வழி இதுதான். இதைப் புரிந்துகொள்ள முடியாத தலைமைகளை இனியும் எம்மால் நம்ப முடியாது. ஏற்கனவே நாங்கள் இந்த அமைப்புகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம். ஒரு முஃமின் இரு தடவைகள் ஏமாற மாட்டான். எனவேதான் நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை தனியாகவே முன் னெடுத்தோம். தனியாக செயற்படுவதை விட சேர்ந்து செயற்படுவதுதான் சிறந்த வழி என்பது எமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இந்த நாட்டில் முஸ்லிம் தலைமை அமைப்புகள் சேர்ந்து செயற்படத் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

@ நீங்கள் அண்மையில் கைதுசெய்யப்படுவதற்கான காரணம் என்ன?

மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு தேரரை திட்டினோம் என்ற காரணத்தை சொல்லியே வழக்குத் தொடுத்தார்கள். ஆனால் இவர்கள் என்னை உண்மையிலேயே பௌத்த மதத்தை அல்லது தேரரை திட்டினேன் என்ற காரணத்தை வைத்து கைதுசெய்யவில்லை. இவர்கள் என்னை அரசியல் தேவையொன்றிற்கா கவே கைது செய்தார்கள். டான் பிரசாத்  பல காலமாக இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கின்ற இனவாதி. அவனை அரசாங்கம் கைதுசெய்யவில்லை. எமது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோரை தாக்குவோம் என்று அவன் பகிரங்கமாக எச்சரித்தால் நாம் பொலிஸாரிடம் முறையிட்டோம். அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவன் கைதுசெய்யப்பட்டான். இந்தக் கைதுக்கு நாங்கள்தான் காரணமென முஸ்லிம் அரசியல்வாதிகளும் அமைப்புகளும் பெருமையாக உரிமை கொண்டாடுகின்றார்கள்.
இதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இவனை கைதுசெய்தால் சிங்கள மக்கள் கொந்தளிப்பார்கள். எனவே மக்களை சமாதானப்படுத்துவதற்காக அப்துர் றாஸிக்கையும் கைதுசெய்ய வேண்டுமென அமைச்சர் சாகல ரத்தனாயக்க பிரதமரிடம் குறிப்பிட்டிருந்தார். எனவே ஒரு பௌத்த இனவாதியை கைதுசெய்வதற்காக அரசினால் பலிக்கடாவாக்கப்பட்டவனே நான். ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே நான் கைதுசெய்யப்பட்டேன். இது கண் டிக்கதக்க ஒரு விடயம். நல்லாட்சி அரசாங் கத்தின் நல்லதொரு அறிகுறியாக இது விளங்கவில்லை.

@ நீங்கள் ஒரு பௌத்த மதகுருவை நிந்தித்தமை குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள்?

ஒரு மதகுரு என்பவர் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். மதகுரு ஒருவர் சிறுவர் துஷ்பிரயோகம் செய்தால் அவரைக் கண்டிக்க கூடாது அல்லது கைது செய்யக் கூடாது என்ற சட்டம் இருக்கின்றதா? மதகுரு இவ்வாறான பாவங்களை செய்தால் ஏனைய மனிதர்களை விட அவருக்குத்தான் கூடிய தண்டனை வழங்க வேண்டுமென்பது மனித இயல்பு. அவர்கள் மதகுரு என்ற போர்வையில் தூசனம் பேசுவார்கள், மிரட்டுவார்கள், கொலை செய்வோம் என்பார்கள், நாட்டை விட்டு விரட்டுவோம் என்பார்கள். அதை நாங்கள் கண்டிக்கக் கூடாது என்றால் இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என்பது பொய்த்து விட்டது என்றுதான் அர்த்தம். நாங்கள் ஒரு மதகுருவை திட்டவில்லை. இந்த நாட்டில் இனவாதத்தைக் கக்கிய ஒரு நபரைத்தான் திட்டினோம், விமர்சித்தோம்.

@ தனது மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஞானசார தேரர் வழக்குக் தொடுத்திருந்தாரா?

அவர் எனக்கெதிராக எந்த வழக்கும் கொடுக்கவில்லை. இது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இடம்பெற்ற கைதுதான் என் பதை மீண்டும் தெளிவாக சொல்கிறேன்.

@ SLTJ அமைப்பிற்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாயவுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜித சேனாரத்ன அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு எதிராக SLTJ அமைப்பு எத்தகைய மறுப்பையும் தெரிவிக்கவில்லையே?

அமைச்சர் ராஜிதவின் கருத்தை மறுத்து எமது அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ராஜித சொன்னது போல எனக்கும் NIB இற்கும் தொடர்பு இருப்பதாக இருந்தால் ஆதாரங்களைக் கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும். வாய்க்கு வந்தபடி யாரும் எதையும் சொல்லலாம் ஆனால் அதனை உண்மைப் படுத்துவதற்கு ஆதாரங்கள் மூலமாக நிரூபிக்க வேண்டும்.
NIB இல் நான் வேலை செய்ததாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அது என்ன தப்பு என்று கேட்கின்றேன். அது அரசாங்கத்தினுடைய ஒரு திணைக்களம். நான் அல்கைதாவுடனோ அல்லது LTTE உடனோ அல்து ISIS உடனோ தொடர்பு வைத்திருந்தால் அது பாரதூரமானதொரு விடயம். அது விமர்சிக்கப்பட வேண்டியதுதான். NIB உடன் கூட நான் தொடர்புபட்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.
மஹிந்தவிற்கோ கோத்தாபாயவிற்கோ வால் பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்குக் கிடையாது. குறிப்பாக கோத்தபாயதான் இந்த பொதுபலசேனாவை உருவாக்கியவர் என்று பொது இடங்களில் விமர்சித்திருக்கின்றோம். எங்களுக்கும் NIB இற்கும் இடையிலான ஒரே தொடர்பு அவர்கள் எங்களுடைய அமைப்பு தொடர்பான விடயங்கள் சந்தேகங்களை எங்களிடம் வினவுகின்றபோது அதனை நாங் கள் தெளிவுபடுத்துவது மாத்திரமே.

@ மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். குறிப்பாக முஸ்லிம் அமைப்புகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. இதனால் அனைத்து அமைப்புகளுக்கும் அச்சத்திற்கு மத்தியிலேயே இயங்கின. என்றாலும் நீங்கள் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் சுதந்திரமாக இயங்கினீர்கள் ஏதாவது சலுகைகள் வழங்கப்பட்டனவா?

2015 நவம்பர் மாதத்தில் நாங்கள் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வெளி யீட்டு விழாவை நடாத்தினோம். இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே இடம்பெற்றது. எனவே நல்லாட்சியில் தான் நாங்கள் சுதந்திரமாக இயங்கினோம். மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலும் நாங்கள் எங்களுடைய செயற்பாடுகளை சுதந்திர மாகவே முன்னெடுத்துச் சென்றோம்.
எங் களைப் பொறுத்தவரையில் யாருடைய ஆட்சிக்காலமாக இருந்தாலும் எங்களுடைய செயற்பாடுகளை சட்டத்திற்கு உட்பட்ட வகையில் முன்கொண்டு செல்வோம். கடந்த ஆட்சியில் தம்புள்ள பள் ளிக்கெதிராக பிரச்சிணை ஏற்பட்டபோது ஆர்ப்பாட்டம் செய்தோம். அதுபோன்று மஹிந்தவின் காலத்தில் ஜெனீவா பிரேர ணைக்கு எதிராக இன்னொரு ஆர்ப்பாட்ட மொன்றை செய்தோம். அப்போது மஹிந்த விற்கு ஆதரவாக செயற்படுகின்றோம்  என நினைத்துக் கொண்டார்கள்.
அந்த இடத்தில் நாங்கள் மஹிந்தவை பார்க்கவில்லை. நாட்டைத்தான் பார்த் தோம். எங்களுடைய நாட்டை சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கு ஒரு போதும் விடமாட்டோம். அந்த அடிப் படையில்தான் GSP+ சலுகைக்காக எமது முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்  கள் மேற்கொள்ளப்படுவதனை விட மாட் டோம். அமைப்பு ரீதியாக நாங்கள் எந்த ஆட்சியாளர்களுக்கும் ஆதரவு செலுத்து வதுமில்லை எதிர்ப்புத் தெரிவிப்பது மில்லை. இந்த அடிப்படையில் செயற்படக் கூடிய அமைப்பு அரசியல்வாதிகளின் நிக ழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்பட்டது என்பத னை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

@ தற்போது நாட்டில் இடம்பெற்று வருகின்ற இனவாத செயற்பாடுகளை எந்தக் கண்ணோட்டத்தில் நோக்குகிறீர்கள்?

இனவாதம் இந்த நாட்டில் தலைதூக்கி  இருக்கின்றது என்பது தெட்டத்தெளிவு. இது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இடம்பெறுகின்றது. இதற்கு வெளிநாட்டு சக்திகள் உதவி செய்வதாகவும் தகவல்கள் இருக்கின்றன. ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியமால் இருக்கின்றது. உதாரணமாக நோர்வே அரசாங்கம் முழுக்க முழுக்க பொதுபல சேனாவிற்குப் பின்னால் செயற்படுகின்றது. இதனை நிரூபிப்பதற்கு எம்மிடம் ஆதாரமில்லை. நாங்களும் அதற்கான ஆதாரங்களை சேகரிப்பதற்கு முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் கோத்தாபாய ஆகியோரும் பொதுபலசேனாவிற்கு பின்னால் இருக்கின்றனர் என்ற சந்தேகமும் எமக்குக் காணப்படுகின்றது.

@ இறுதியாக உங்களுடைய சிறை வாழ்வு பற்றி எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?

சிறைவாழ்வை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். தஃவா களத்திலுள்ள ஒவ்வொரு தாஈயும் மறுமையை இலக்கை கொண்டு செயற்படுகின்ற ஒவ்வொரு முஸ்லிமும் சுகபோகமான முறையில் தஃவா பண்ண முடியாது. பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதையும் தவிர்க்க முடியாது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்