முஸ்லிம்கள் தங்களின் விவகாரங்களை காலத்திற்கு காலம் மறந்து ஆழ்ந்த தூக்கத்தில்

முஸ்லிம் அரசியலின் கையறு நிலை!
********************************************************
எஸ்.றிபான் -
இலங்கை முஸ்லிம்கள் மீது பௌத்த இனவாத கடும்போக்கு அமைப்புக்களும், பேரினவாத அரசியல்வாதிகளும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும், குரோத நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்ற அதே வேளையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் காட்டிக் கொடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்கள். பௌத்த இனவாத கடும் போக்காளர்களை விடவும் இத்தகைய முஸ்லிம் அரசியயல்hதிகள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். சமூகத்தை விற்று பிழைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் பௌத்த கடும்போக்காளர்களின் பார்வை தன் மீது பாய்ந்து விடக் கூடாதென்பதற்காக முஸ்லிம் சமூகம் பற்றி பௌத்த இனவாதிகளும், பேரினவாத அரசியல்வாதிகளும் முன் வைத்துக் கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமது பதவியையும், தலையையும் பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளை முஸ்லிம்கள் தெளிவாக இனங் கண்டுள்ள போதிலும் அவர்களின் பின்னலேயே அணிதிரண்டு இருப்பது முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு மிகப் பெரிய ஆபத்தாகும்.

புதிய அரசியல் யாப்பு  
---------------------------------
2017ஆம் ஆண்டில் புதிய அரசியல் யாப்பு ஏதோவொரு வடிவத்தில் வரவுள்ளது. தமது பொருளாதார சந்தையை விரிவுபடுத்திக் கொள்ளவும், உறுதி செய்து கொள்ளவும் அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் யாப்பில் அதற்கேற்ற வகையில் மாற்றங்களை செய்து கொண்டு வருகின்றன. புதிய அரசியல் யாப்பில் இலங்கை மக்களிடையே ஒற்றுமை, சமத்துவம், சுதந்திரம் போன்றன எதிர்பார்க்கும் அளவிற்கு கிடைக்காது போனாலும் மேற்படி நாடுகள் எதிர்பார்க்கும் பொருளாதார சுபிட்சம் அந்நாடுகளுக்கு ஏற்படும் என்பது தெளிவானதாகும்.

இதே வேளை, இலங்கையில் 2017ஆம் ஆண்டு கொண்டு வரப்படவுள்ள அரசியல் யாப்பில் முஸ்லிம் சமூகம்தான் மிகப் பெரிய பின்னடைவுகளை அடைந்து கொள்ள இருக்கின்றது. காரணம், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஏனையவர்களும் சமூகம் பற்றி சிந்திக்காது தமது சுயநலன்களை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 2017ஆம் ஆண்டு ஜனவரி அளவில் புதிய அரசியல் யாப்பு வருமென்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதில் தாம் எதிர் பார்க்கும் விடயங்கள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆதலால், 2017இல் புதிய அரசியல் யாப்பு வருமென்பதில் பலரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

ஆயினும், முஸ்லிம் அரசியல் தலைவர்களினாலும், கட்சிகளினாலும் புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் நிறைவேறுமென்று உறுதி கூற முடியாதுள்ளன. முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் புதிய அரசியல் யாப்பில் அக்கறை காட்டாது வேறு விவகாரங்களிலும், தமது தலைவர் பதவியையும், அமைச்சர் பதவியையும் பாதுகாத்துக் கொள்வதற்கான சூழ்ச்சிகளையும் செய்து கொள்வதற்கே அதிக நேரங்களை செலவு செய்து கொண்டிருக்கின்றார்கள். தமது இந்நோக்கத்திற்காக சமூகத்தின் எந்த நலன்களையும் விட்டுக் கொடுப்பதற்கும், காட்டிக் கொடுப்பதற்கும், பௌத்த இனவாதிகளினதும், பேரினவாதிகளின் குற்றச்சாட்டுக்களை உறுதி செய்யும் வகையில் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அண்மையில் முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவர் தௌஹீத் ஜமாஅத் பொதுபல சேன போன்று மஹிந்தராஜபக்ஷவின் தேவைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்று தெரிவித்துள்ளார். இலங்கையில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாகும். தமது அரசியல் வங்குரோத்துக்களை மறைக்கவும் தௌஹீத் ஜமாஅத்தின் மீது குற்றம் சாட்டும் பௌத்த இனவாதிகளையும், அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தி கொள்வதற்கும், அரசாங்கத்தில் தமக்கான இருப்பையும், பதவியையும் நிலை நிறுத்திக் கொள்ளவுமே இவ்வாறு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தலைவர் கருத்துக்களை முன் வைத்துள்ளார். ஒரு கட்சியின் தலைவர் பொறுப்பற்ற வகையில் கருத்துக்களை முன் வைப்பதோ, முடிவுகளை எடுப்பதோ உகந்த செயலல்ல.

இதே வேளை, அரச தொலைக்காட்சி சேவை ஒன்றில் இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு எதனைத் தருவதற்கு தயாராக இருக்கின்றது என்று முதலில் சொல்ல வேண்டும். அதன் பின்னர்தான் எங்களின் கருத்துக்களை முன் வைப்போம் என்று அரசியல் தீர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார். இவரின் இக்கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத சிறுபிள்ளைத்தனமான பதிலாகும். முஸ்லிம்கள் தங்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்க வேண்டுமே தவிர மற்றவர்களிடம் நீங்கள் என்ன தரப் போகின்றீர்கள் என்று கேட்பது பிச்சை கேட்பதற்கு சமமாகும். பிச்சை கேட்கின்றவர்கள் யாரும் தங்களுக்கு இதுதான் தர வேண்டுமென்று கேட்பதில்லை. மற்றவர்கள் கொடுப்பதனை பெற்றுக் கொண்டு நடையைக் கட்டுவார்கள். தமிழர்கள் எங்களுக்கு இணைந்த வடக்கு, கிழக்கு வேண்டும். அரசியல் அதிகாரங்கள் வேண்டுமென்று அரசாங்கத்திடம் கடந்த 40 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எவ்வேளையிலும் அரசாங்கத்திடம் நீங்கள் எதனைத் தரப் போகின்றீர்கள் என்று கேட்டது கிடையாது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸின் கருத்து மூலமாக முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வினையும் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருக்கவில்லை என்று தெரிகின்றது. முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் மிகப் பெரிய பொறுப்பு முஸ்லிம் காங்கிரஸிற்கு இருக்கின்றது. அக்கட்சி தமது கடமையை உதாசீணம் செய்து கொண்டிருப்பதாக பலரும் தெரிவிக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் இனியும் மௌனியாக இருக்குமாயின் முஸ்லிம் காங்கிரஸ் வகித்துக் கொண்டிருக்கும் இன்றைய தலைமைத்துவ பாத்திரத்தை வேறு கட்சி ஒன்றிக்கு மாற்றீடு செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளையும், தலைவர்களை விடவும் சமூகம் முக்கியமாகும். நாம் இன்று எடுக்கும் முடிவுதான் நாளை முஸ்லிம் சமூகத்தில் பல தலைவர்களை உருவாக்குவதற்கும், தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் காரணமாக அமையும் என்பதனை முஸ்லிம்கள் மனதிற் கொள்ளல் வேண்டும்.

புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்கள் எத்தகைய தீர்வுகளை எதிர் பார்க்கின்றார்கள் என்பது பற்றி பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இன்று பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம்கள் யாரும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தெளிவாக புள்ளி விபரங்களின் அடிப்படையில் முன் வைக்க முடியாதவர்களாக உள்ளார்கள். முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், தீங்குகள் பற்றி அவ்வப்போது தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தினை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருக்கின்றவில்லை. இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளுள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை மிகவும் தெளிவாக புள்ளி விபரங்களின் அடிப்படையில் தகவல்களைக் கொண்ட ஒருவராக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், முன்னாள் இராஜங்க சுகாதார அமைச்சருமான எம்.ரி.ஹஸன்அலி மாத்திரமே உள்ளார்.

ஆனால், அவர் தற்போது பாராளுமன்றத்திற்கு வெளியேயும், கட்சி நடவடிக்கைகளில் ஓரங்கட்டப்பட்ட ஒருவராகவும் இருக்கின்றார். இவர் இன்றைய பாராளுமன்றத்தில் இருக்க வேண்டுமென்று கிழக்கு மாகாணத்தில் பரவலான அபிப்ராயம் காணப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் இவரின் சேவையை பெற்றுக் கொள்ளக் கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஹஸன்அலி, பசீர்சேகு தாவூத் ஆகியோர்கள் முஸ்லிம்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்டவர்கள். மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்புடன் நெருக்கமான பழகியவர்கள். அவரின் கொள்கைகளை பெரும்பாலும் தமது அரசியல் செயற்பாடுகளில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர்கள். இவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாது.

இதே வேளை, புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று பொதுபல சேனவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு – கிழக்கு இணைவதற்கு அனுமதிக்கக் கூடாது என கண்டி அஸ்கரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகள் தம்மை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அத்தோடு  புதிய அரசியல் யாப்பில் சமஸ்டி என்ற சொற்பிரயோகம் கையாளக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ஞானசார தேரர் புதிய அரசியல் யாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கண்டி அஸ்கரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகள் புதிய அரசியல் யாப்பை நிபந்தனையுடன் ஏற்றுக் கொள்வதற்கு முன் வந்துள்ளார்கள். ஆதலால், புதிய அரசியல் யாப்பு 2017ஆம் ஆண்டில் வருமென்பது உறுதியாகவே தெரிகின்றது.

மறக்கும் பழக்கம்
---------------------------
முஸ்லிம்கள் தங்களின் விவகாரங்களை காலத்திற்கு காலம் தூக்கிப் பிடிக்கின்றவர்களாகவும் பின்னர் அதனை மறந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களாகவும் உள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு தற்காலிக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அமானிதமாக வழங்கிய முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இரண்டு வருடங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு விருப்பமற்றவராகவே உள்ளார். இந்த விவகாரத்தினால்தான் முஸ்லிம் காங்கிரஸிற்குள் காணப்பட்ட உள்ளக முரண்பாடுகள் தீவிரமடைந்தது. கட்சிக்குள் காணப்படும் பிணக்கு தீர்க்கப்படாது போகுமாயின் கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய தடைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. தேர்தல் ஆணையாளர் முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்டுள்ள பிணக்கை உடனடியாக தீர்த்துக் கொள்வது அதன் எதிர்காலத்திற்கு நல்லதென்று அறிவுரை கூறியுள்ளார்.

தேசிய பட்டியலை ஹஸன்அலிக்கு வழங்க வேண்டுமென்று யாராவது ஒருவர் கருத்துக் கூறினால் அதற்கு எதிர்ப்புக் காட்டப்படுகின்றதே அல்லாமல் அதனை யாருக்காவது தாமதமின்றி வழங்கி பிரச்சினைக்கு முடிவு காணுமாறு கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் முதல் தொண்டர்கள் வரை யாரும் கேட்பதில்லை. இந்த பலவீனம்தான் முஸ்லிம் காங்கிரஸையும் பலவீனப்படுத்திக் கொண்டு வருகின்றது.

இறக்காமத்தில் மாணிக்கமடுவில் மாயக்கல்லி மலையின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரத்திற்கு இரண்டு வாரங்களில் தீர்வு வழங்கப்படுமென்று முஸ்லிம் காங்கிரஸ் முதல் எல்லா முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சொன்னார்கள். அரசாங்கமும் இதே கருத்தையே முன் வைத்தது. ஆனால், இன்று வரைக்கும் தீர்வு முன் வைக்கப்படவில்லை. அதே வேளை, முஸ்லிம் காங்கிரஸோ, ஏனைய முஸ்லிம் கட்சிகளோ, முஸ்லிம் அரசியல்வாதிகளோ, முஸ்லிம் அமைப்புக்களோ அது பற்றி பேசவில்லை. மாயக்கல்லி மலையை மறந்து விட்;டார்கள்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் என்றவுடன் முஸ்லிம் கட்சிகளும், அமைப்புக்களும் ஆக்ரோசமாக அறிக்கைகளை விட்டன. அதனோடு அது சம்பந்தமான தமது அனைத்துக் கருமங்களையும் மூட்டை கட்டி மூலையில் வைத்துள்ளார்கள். மீண்டும் அவர்களுக்கு தேவை ஏற்படும் போது அதனை புளுதி தட்டி வெளியே எடுப்பார்கள். அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவர்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வதனை முஸ்லிம்கள் அனுமதிகக் கூடாது. முஸ்லிம்கள் அரசியல்வாதிகளை நம்பக் கூடாது. எங்களை நாங்களே நம்புதல் வேண்டும். யாராக இருந்தாலும் கேள்விகள் கேட்க வேண்டும். எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தர முடியாதென்றால் தயவு செய்து பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமாச் செய்யுங்கள். எங்களின் பக்கமே வராதீர்கள் என்று சொல்லும் தைரியத்தை சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் வரவழைத்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் அரசியலுக்கு முகவரியை தேடித் தந்தவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் ஆவார். இன்று அவரின் கொள்கைகளும் மறக்கப்பட்டுள்ளது. அவரின் கொள்கையும், வண்ணப் போட்டோக்களும் தேர்தல் காலங்களில் மாத்திரம் பேசப்படுகின்றன. தேர்தல் முடிந்ததும் அவை மறக்கப்பட்டதாக மாறிவிடும். அஸ்ரப்பின் கொள்கைளை வாழ வைப்பதற்கு வழிகளை தேடிக் கொள்ளாது அவரைப் பற்றி பேசுவதில் எந்த பயனுமில்லை. அஸ்ரப்பின் கொள்கைளை மறந்துவிட்டு அவர் எழுதிய கவிதைகளைக் கொண்ட 'நான் எனும் நீ' புத்தகத்தை மறு பதிப்பு செய்து வெளியிடுவதில் முஸ்லிம் சமூகத்திற்கு எந்த நன்மைகளும் கிடைக்காது. ஆகவே, அஸ்ரப்பின் கொள்கைளை வாழ வைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது அக்கட்சியினரின் நன்றி கெட்ட செயலாகவே உள்ளது.

நன்றி- விடிவெள்ளி 02.12.2016

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்