புதிய அரசியல் முன்னெடுப்பகளில் முஸ்லிம் தலைமைகள் ஓரங்கட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. - Basheer Segu Dawood

2017 இல் தேசிய அரசியலில் நிகழும் பாரிய மாற்றத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்கு என்ன நடக்கலாம்?
?????????????????????????????????
தற்போதைய அரசியல் கள நிலவரத்தின்படி 2017 ஆம் ஆண்டு பெரிய கட்சிகளுக்கிடையில் பெரும் போராட்டங்கள் வெடிக்கப் போகிறது என்பதை அனுமானிக்க முடிகிறது.
சுதந்திரம் கிடைத்த சிறிது காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்ட பாரிய பிளவின் பின், இலங்கையில் இரண்டு பெரிய கட்சிகளே இருந்து வந்தன. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் வழமைக்கு மாறாக நாட்டில் மூன்று பெரிய கட்சிகள் இருப்பது வெளிப்பட்டது.
இப்பெரும் கட்சிகளுக்கிடையில் நிகழும் அதிகாரப் போராட்டத்தில் மக்கள் செல்வாக்குள்ள பெருந்தலைவர்கள் நேரடியாகவும், சில வெளிநாடுகளின் முகவர்கள் மறைமுகமாகவும் பங்குபற்றுவர்.
இக்கால கட்டத்தில் தமிழர் தலைவர்கள் பெரும் செல்வாக்கு உள்ளவர்களாகத் திகழ்வார்கள்.
இது முப்பெரும் கட்சிகளுக்கிடையிலான அரசியல் விளையாட்டுப் போட்டியாக இருப்பினும் கொள்கை அடிப்படையில் இவை இரு அணிகளே ஆகும். அதாவது சிங்கள பெருந்தேசியவாதம் இரண்டு அணிகளின் கொள்கையாகவும், தாராளவாத ஜனநாயகவாதம் மற்ற அணியின் கொள்கையாகவும் காணப்படுகிறது.
பெருந்தேசியவாத அணிகளில் ஒன்றின் தலைவராக ஜனாதிபதி மைத்திரியும், மற்ற அணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் இருப்பர். தாராளவாத ஜனநாயக அணியின் தலைவராக பிரதமர் ரணில் இருப்பார்.
சிங்கள தீவிரவாத அரசியல் அமைப்புகளும் அதன் தலைவர்களும் தமது கொள்கை சார்ந்த இரு தலைவர்களின் பக்கம் பிரிந்தும் சார்ந்தும் நிற்பர்.அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு பிரிவுகளிலும் நிற்பர். துரதிஷ்ட வசமாக வரலாற்றில் என்றுமே ஐ.தே.கட்சியுடன் இணைந்து செயல்பட்டிராத இடது சாரிக் கட்சிகளும் இவ்வணிகளிலேயே சேர்ந்திருப்பர்.
இலங்கைத்தமிழர் கட்சிகளும், இந்திய வம்சாவளித் தமிழர் கட்சிகளும், தாராளவாத ஜனநாயகவாதக் கொள்கையை பின்பற்றும் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்திருப்பர். வடகிழக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான கட்சி இவ்வணியுடன் உள்ளுறைந்து அடையாளம் காட்டாவிட்டாலும் தங்களது பலத்தை இவ்வணிக்கே பகிரும்.சிங்களத் தேசியவாதிகளில் ஒரு பகுதியும் இவ்வணிக்கு ஆதரவளிக்கும்.
பெரிய கட்சிகளின் புதிய அரசியல் முன்னெடுப்பகளில் முஸ்லிம் தலைமைகள் ஓரங்கட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. மூன்று பெரிய தரப்புகளும் முஸ்லிம்களுக்கு எந்தவித பங்கும் கொடுக்கக் கூடாது ஆனால், அவர்கள் தங்களுடனே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வியூகம் வகுத்து செயற்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வியூகம் அதிகமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே வெற்றியளிக்கக் கூடியது.
இன்றைய தேசிய அரசியல் நீரோட்டத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், தலைமைகளினதும் பெறுமானம் குறைந்துள்ளது.
முஸ்லிம் குடிமைச் சமூகமும், இஸ்லாமிய மதம் சார்ந்த அமைப்புகளும் சமூகத்தில் அரசியல் அபிப்பிராயங்களை உருவாக்கும் தன்மையுடைனவாக வளர்ச்சி பெறத் தொடங்கியுள்ளன.இந்த நிலைமைக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கீர்த்தி குறைவடைந்திருப்பதும், இவர்களின் செயல்பாட்டு முறை (Pragmatism) குறைபாடுடையதாக காணப்படுவதும் காரணமாகும். மேலும், புதிய தலைமுறை எதிர் பார்க்கும் "திடகாத்திரம்" முஸ்லிம் அரசியல் அரங்கத்தில் காணாமல் போயிருப்பதும் முஸ்லிம் குடிமை மற்றும் மார்க்க தலைமைகள் அரசியலில் ஒரு பாத்திரம் வகிக்க வேண்டிய தேவைப்பாட்டை வேண்டி நிற்கிறது.
முஸ்லிம்களுக்கு சிந்தனைத் தலைமைத்துவம் இல்லாமையும், குழுநிலை வாதமும், கட்சிகள் சமுதாய நலன்மீதும் , பாதுகாப்பிலும் செலுத்தும் கரிசனையைவிட தத்தமது கட்சிகளின் நலனில் அதிக அக்கறை காட்டிச் செயற்படுவதும் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த அரசியல் ஒப்புதலைப் பெற்றுக்கொள்ள முடியாத துரதிஷ்டமான நிலமைக்கு எம்மைத் தள்ளியுள்ளது.
பெரும்பான்மை அரசியல் தலைமைத்துவங்கள் இனரீதியாக முஸ்லிம்களுக்கு பங்கம் விளைவிக்கும் அல்லது கணக்கில் எடுக்காது விடும் அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருக்கும் இச்சூழலில் நாம் 25 ஆண்டுகளுக்கு முன் இருந்த களச் சூழலுக்கு ஏற்ற வகையில் அன்று எடுத்த சில அரசியல் தீர்மானங்களை இன்றும் பிரதியீடு செய்ய முற்படுவது தற்காலத்துக்கு பொருந்தப் போவதில்லை.நமது தலைவர்கள் சிலர் இன்றும் பழங்காலக் கனவுலகில் மிதக்கிறார்கள்.
பெரிய கட்சிகள் காலத்துக்குக் காலம் தங்களுக்குத் தேவையான வகையில் முஸ்லிம்களை பயன்படுத்துகிறார்கள். இனிமேலாயினும்,முஸ்லிம் தலைவர்கள் இவ்வாறு நம்மை பாவிப்பதற்கு சாதகமான செயலூக்கத்தை( Proactive) வழங்காதிருக்க வேண்டும்.வருமுன் காப்போராக இருக்க வேண்டும்.
பெருந்தலைவர் அஷ்ரஃப் 40 ஆண்டுகளாக இலங்கையின் அரசியலில் கவனிக்காமல் விடப் பட்டிருந்த முஸ்லிம் சமுதாயத்தை,1980 களின் இறுதிப் பகுதியிலிருந்து பெரிய கட்சிகளால் ஏறெடுத்துப் பார்க்க வைத்தார். 2015 வரை தாக்குப்பிடித்த இந்த உருக்குத் தன்மை, 2016 இலிருந்து துருப்பிடிக்கத் தொடங்கிவிட்டது.
2017 இல் அரசியல் சதுரங்கத்தில் தீவிரமாக காய்கள் நகர்த்தப்பட போகிறது. 1990 களில் இருந்து காய்களை நகர்த்தும் தரப்புகளில் ஒன்றாக இருந்த நாம், இனி வெட்டப்படும் காயாகவும் ஆகலாம்.காயா இல்லை காய்களை நகர்த்தும் கையா என்பதை நமது ஒற்றுமையே நிர்ணயிக்கும்.எந்தப் பெரிய கட்சியினதும் எடுபிடி அல்ல என்று நிரூபிக்க பெருங்கட்சிகளின் அடிமைத் தளையிலிருந்து நம்மைக் களைவோம், நமக்குள் இருக்கும் அரசியல் மற்றும் மார்க்க இயக்க வேறுபாடுகளை தற்காலிகமாகவேனும் ஒத்திப்போட விளைவோம், ஒரு கூட்டு முன்னணியாய் முகிழ்ப்போம். நாமும் எதிர்கலத்தில் அரசியல் அனுகூலத்தின் பங்காளிகளாகலாம்.காலம் பிந்தியிருப்பினும் இப்போதும் வருமுன் காக்கும் காலம் கடந்துவிடவில்லை

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்